August 31, 2017

பௌத்த தீவிரவாத அமைப்பு மேற்கொள்கின்ற அரச பயங்கரவாதமும், இனச்சுத்திகரிப்பும் நமது காலத்தின் மிகப் பெரும் மனித அவலம்

"ரோஹிங்கிய மக்களுக்கு எதிராக மியன்மார் அரசும், அந்நாட்டின் பௌத்த தீவிரவாத அமைப்புக்களும் மேற்கொள்கின்ற அரச பயங்கரவாதமும், இனச்சுத்திகரிப்பும் நமது காலத்தின் மிகப் பெரும் மனித அவலமாகும். சர்வதேச சட்டங்கள் அத்தனையையும் மீறி றோஹிங்கிய மக்களின் இன அடையாளத்தை மறுத்து அவர்களைக் கொன்றொழிக்கும் மியன்மார் அரசாங்கத்தை கண்டிப்பதோடு அதற்குத் துணை நிற்கும் ஆங் சாங் சூகியும்; மியன்மார் அரசாங்கமும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படவும் வேண்டும்.  இந்த விடயத்தில் சர்வதேச நாடுகள் மௌனம் காப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது. இம்மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஐ.நா சபையும் சர்வதேச சமூகமும் உடனடியாக தலையீடு செய்து உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வேண்டுகோள் விடுத்துள்ளது.

இன சுத்திகரிப்புக்கும் பாரிய இனப்படுகொலைக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கும் ரோஹிங்கிய மக்கள் தொடர்பாக NFGGயினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

"கடந்த ஒரு வாரகாலமாக ரோஹிங்கிய மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் அரச மற்றும் பௌத்த தீவிரவாதிகளின் பயங்கரவாத தாக்குதல்களினால் 3,000 அளவிலான ரோஹிங்கிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 20,000 பேர் பங்களாதேஷுக்கு தப்பித்துச் சென்றுள்ளதாக புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இது கடந்த சில நாட்களுக்குள் நடந்தது மாத்திரமே. இதுவல்லாது, பல தசாப்தங்களாகவே ரோஹிங்கிய மக்கள் துன்புறுத்தப்பட்டும் அச்சுறுத்லுக்கு ஆளாகியும் வருகின்றனர்.

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களின்படி, மிக அவசரமாகவே ரோஹிங்கிய மக்கள் வாழும் அனைத்து கிராமங்களும் அழிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் வெளியிடப்பட்டு வருகிறது.  இவ்வாறு ஒரு சமூகமே அழிக்கப்பட்டு வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபை வெறும் ஊடக அறிக்கைகளுடன் மாத்திரம் நின்றுகொள்வது, அதன் மீதான நம்பிக்கையின்மையை உலக அளவில் ஏற்படுத்தியுள்ளது.

உலகில் சமாதானத்தையும், சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, ஒரு இனமே அழிக்கபடுகின்ற போது எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காது, மௌனித்து நிற்பது இலங்கையர்களான எம்மை கவலைகொள்ளச் செய்துள்ளது. ரோஹிங்கிய மக்கள் விடயத்தில் தலையிடுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை பின்வாங்குவது மிகப் பெரும் ஏமாற்றமளிக்கிறது.

உலக விவகாரங்களில் செல்வாக்குச் செலுத்தும் அமெரிக்கா,  ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, சீனா, ஜப்பான், தென்கிழக்காசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், தென்னாசிய நாடுகள் இவ்விடயத்தை முறையாக அணுகவுமில்லை; நேர்மையான எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுமில்லை. இந்தக் கூட்டுப் பொறுப்புணர்வின்மை பெரும் கவலை கொள்ளச் செய்கிறது.

இன்னுமொரு புறத்தில், ரோஹிங்கிய மக்கள் தொடர்பில் பங்களாதேஷ் வெளிக்காட்டி வரும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளும் கண்டிக்கப்பட்ட வேண்டியதாகும். ஏனெனில், மியன்மாரில் உயிராபத்தை எதிர்கொள்ளும் ரோஹிங்கிய மக்கள் பங்களாதேஷுக்கு தப்பித்து ஓடும்போது, எல்லையில் வைத்து அவர்களைத் தடுக்கும் நடவடிக்கை மனிதாபிமானத்துக்கு எதிரானதாகும்.

எனவே, உலகில் சமாதானத்தை நிலைநிறுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையானது, ரோஹிங்கிய மக்களுக்கு எதிரான அரச மற்றும் பௌத்த தீவிரவாதிகளது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக, உடனடியாக செயற்பட வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புக்களுடனும் இணைந்து, ரோஹிங்கிய மக்களுக்கான நிரந்தர தீர்வுப் பொறிமுறையொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அங்குள்ள ரோஹிங்கிய இன எதிர்ப்பு தீவிரவாத சக்திகளைத் தடை செய்ய வேண்டும் எனவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வலியுறுத்துகின்றது. 

ரோஹிங்கிய மக்களுக்கான குரல் என்பது சர்வதேச மட்டத்தில் மக்கள் மயப்படுத்தப்படுவதும், அம்மக்கள் மீதான கொடூர அரச பயங்கரவாதம் உடனடியாக நிறுத்தப்படுவதற்கான சர்வதேச ராஜதந்திர அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டியதுமே, உலக நாடுகளிடம் ரோஹிங்கியா சமூகம் எதிர்பார்க்கும் மிகப்பெரும் மனிதாபிமான உதவியாகும்.

அந்த வகையில், பின்வரும் கோரிக்கைகளை ந.தே.மு. மியான்மார் அரசுக்கும் சர்வதேச சமூகத்திடமும் , ஐ.நா. சபையிடமும் முன்வைக்கிறது.

01. 15ம் நூற்றாண்டிலிருந்து அரகான் மாநிலத்தில் வாழும் 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கிய மக்கள் மீது மியான்மார் அரச படைகளின் இனச்சுத்திகரிப்புத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு, அவர்களுக்கான வாழ்வுரிமை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.

02. கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக மனிதாபிமான குற்றங்கள் அங்கே நடபெறுவதாக அறிக்கைகள் மாத்திரம் விடும் ஐநா மற்றும் சர்வதேச உரிமை அமைப்புக்கள் இம் மக்கள் மீதான வன்முறைகளை உடனடியாக தடுக்கும் தலையீட்டுப் பொறிமுறைகளை அவசரமாக வகுக்க வேண்டும்.

03.  பாதிக்கப்பட்டு அகதிகளாகி அல்லற்படும் ரோஹிங்கிய மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் போய்ச் சேர்வதற்கான வழிமுறைகளை அமைக்க, ஐ.நா ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கள் அவசரமாக முன்வர வேண்டும்.

04. ரோஹிங்கியா மக்கள் சர்வதேச வாழ்வுரிமைச் சட்டத்தின் அடிப்படையில் மியான்மாரின் சகல உரிமைகளையும் சமமாகப் பெற்று வாழும் குடியுரிமை அல்லது அவர்கள் விரும்பிய நாட்டில் சென்று வாழ்வதற்கான குடிப்பெயர்வு ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்பட வேண்டும்.

05.  சர்வதேச குடியுரிமைச் சட்டத்துக்கு முரணாக ரோஹிங்கிய மக்களின் இன அடையாளத்தை மறுத்து, அவர்களைக் கொன்றொழிக்கும் மியான்மார் அரசும் அரசாங்கத்துக்குத் துணை நிற்கும் நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சூ கியும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். 

0 கருத்துரைகள்:

Post a Comment