August 05, 2017

பிக்பாஸ் ஓவியா, தற்கொலைக்கு முயற்சியாம்...!


காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும் எவர்கள் நம்பிக்கைக்  கொண்டு நல்ல அமல்கள் செய்து சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர குர்ஆன் (103:1-3)

கடந்து செல்லும் ஒவ்வொரு வினாடியும் நம்மை மறுமையின் பக்கம் நெருக்கிக் கொண்டிருக்கிறது என்ற யதார்த்தத்தை நாம் உணரவேண்டும். உணர்வின்மை மற்றும் அசிரத்தை காரணமாக காலம் விரைந்து கழிந்து கொண்டிருப்பதைப் பற்றி கவலை இல்லாமல் தன்னுடைய உடனடியான தேவைகளை நிறவேற்றுவதிலும் சூழ்நிலை உருவாக்கிய தற்காலிக பிரச்னைகளுக்கு நிவாரணம் காணுவதிலுமேயே காலத்தை மனிதன் விரயம் செய்கின்றான்.

அதிலும் ஓய்வு கிடைக்கிறது என்பதற்காக வீண் கேளிக்கைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது முகநூல் முழுக்க பிக் பாஸ் பற்றியே விவாதங்கள் அதிகம் நடந்து கொண்டுள்ளது. ஓவியாவை புகழாத பதிவர்கள் இல்லை எனும் அளவுக்கு டிவி மோகம் கொடி கட்டிப் பறக்கிறது. விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங் மூன்று கோடியை தாண்டியுள்ளதாம். முகநூல் பதிவர்களுக்கும் இந்த எண்ணிக்கை அதிகரித்ததில் அதிக பங்கிருக்கிறது. இன்று ஓவியா தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக பரபரப்பு புகார். தற்போது அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை. உடல் நலக் குறைவினால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று செய்தி வருகிறது. இங்கு எல்லாமே பிஸினஸ். இதற்கு தெரிந்தோ தெரியாமலோ நாமும் பலியாகிக் கொண்டுள்ளோம்.

இஸ்லாம் எந்த நேரமும் மார்க்கம் மார்க்கம் என்று சுற்றிக் கொண்டிருக்கவும் சொல்லவில்லை. மனைவி, மக்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று கலகப்பாக பேசி இறுக்கத்தை குறைக்கச் சொல்கிறது இஸ்லாம்.  கால் பந்தாட்டம், கபடி, உடற் பயிற்சிகள், மரம் நடுதல், ஏழைகள் அனாதைகளை அரவணைத்தல்  என்ற ரீதியிலும் நமது ஓய்வு நேரங்களை கழிக்கலாம். தற்போது பலர் இந்த டிவி சீரியல்களுக்கு அடிமையாகி விட்டதை கண்டு அதிர்ச்சியுறுகிறோம். இதிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும்.

காலம் ஒர்- அமானிதம்:

நாளை மறுமை நாளில் இறைவன் தன் ஒவ்வொரு அடியார்களிடமும் ஐந்து கேள்வி கேட்பான் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாத வரை ஆதமுடைய மகனின் பாதங்கள் நகராது.

1. உன் வாழ்கையை எவ்வாறு கழித்தாய்.
2. உன் இளமையை எவ்வழியில் கழித்தாய்
3. எவ்வழியில் சம்பாதித்தாய்
4. எவ்வழியில் செலவு செய்தாய்
5. கற்ற கல்வியின் பிரகாரம் எப்படி அமல் செய்தாய்.

நூல்: திர்மிதி.
மறுமையில் இறைவன் கேட்கப் போகும் இந்த கேள்விகளுக்கு நம்மை நாமே தயார் செய்து கொள்வோம் என்று எனக்கும் உங்களுக்கும் எச்சரிக்கை செய்து இப்பதிவை முடிக்கிறேன்.

-சுவனப் பிரியன்-

1 கருத்துரைகள்:

My dear pls try understand what is Islam. Prying, reciting quran, doing zikr etc are part of Islam. What mentioned above everything including in our beautiful Islam.

Post a Comment