Header Ads



முஸ்லிம்களுக்கு என்ன நடக்கிறது - அதாவுல்லாஹ்

இன்றைய இளைஞர்கள், ரவிகருணாநாயக்கவைப் போன்று ஒன்றும் தெரியாது என்று கூறுவது போன்று இருக்க முடியாது. யாரைக் கள்ளன் என்று யார் யார் எல்லாம் சொன்னார்களோ! அவர்கள்தான் முழுக்கள்ளர்கள் என மக்கள் முன் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளார்கள். அதுதான் இறைவனுடைய தீர்மானம் என்று தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் தெரிவித்தார்.

மருதமுனை மனாரியன்’ஸ் Y2K நண்பர்கள் வட்டம் நடாத்திய 22 விளையாட்டுக்கழகங்கள் பங்குகொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி தினமான 2017-08-06 ஆம் திகதியன்று, அமைப்பின் தலைவர் ரி.முபாரிஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அதாவுல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய தேசிய காங்கிரஸின் தலைவர், 

நாங்கள் வாழுகின்ற இந்தக்காலத்தில் ஒருக்காலமுமில்லாதவாறு மோடியினுடைய அரசாங்கத்தில் இந்தியாவில் மாட்டிறைச்சி வைத்திருந்த காரணத்தால் முஸ்லிம் மக்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கிறார்கள். மாட்டைப்பற்றி சொன்னால் கொல்கிறார்கள் முஸ்லிம் என்றால் கொல்கிறார்கள். மகாத்மா காந்தி உருவாக்கிய ஜனநாயக இந்தியாவில் இவ்வாறான நிலை நிலவுகிறது. அந்தநாட்டில் முஸ்லிம்கள் வாழமுடியாது தடுமாறுகிறார்கள். அதனுடைய தொடர்ச்சி இலங்கையிலும் இன்று இடம்பெற்றுக்கொண்டிருகின்றது.

கடந்த அரசாங்கத்தின் என்னென்ன பிழைகளையேல்லாம் சொல்லி முஸ்லிம் மக்களை ஏமாற்றி வாக்குகளைப்பெற்று ஆட்சியை கைப்பற்றினார்களோ அந்த அநியாயங்களை 200 மடங்கு அதிகமாக இன்றைய அரசாங்க, புரிந்து வருவதனை நமதுமக்கள் மிகவும் தெளிவாக அறிந்துகொண்டிருக்கிரார்கள். இலங்கையில் என்ன நடக்கிறது. முஸ்லிம்களுக்கு என்ன நடக்கிறது. முஸ்லிம்கள் எங்கும் உரித்தொடு வாழமுடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். வில்பத்து என்றாலும் எங்களுக்குப் பிரச்சினை, வடமாகாணத்தில் முல்லைத்தீவிலே 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அவர்களது இல்லடங்களுக்குச் செல்வதற்கு முற்படுகின்றபோது தமிழ் பேரினவாதிகள் அதற்கு எதிராக குரல்கொடுக்கிறார்கள்.

வடகிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்கள் அவர்கள் சிங்கள மக்கள் மத்தியிலே வாழ்கின்றபோது அவர்களையும் விரட்டியடிக்க முற்படுகிறார்கள் பள்ளிகளுக்கு கல்வீசுகிறார்கள். இவைகளை அடக்கப்போகின்றோம் என்று வந்தவர்கள் இன்று அதைவிடவும் அதிகமாக செய்துகொண்டு வருவதை நாங்கள் அவதானிக்கின்றோம். கேவலம் ஒரு ஞானசார ஹாமதுருவை நாய்க்கூண்டிலே அடைப்போம் என்று வந்தவர்கள் ஞானசாரவும் அவரது இயக்கத்தாரும் சேர்ந்து அரசாட்சி செய்துகொண்டிருக்கின்ற ஒரு அவலநிலையை இந்த நாட்டிலே நாங்கள் பார்க்கிறோம்.

மத்திய மலைநாட்டிலே வடகிழக்கு கலாசார நிகழ்வின்போது இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் எல்லோரையும் கூட்டிவைத்துவிட்டு அங்கு வந்தவர்களில் சிலர் இஸ்லாத்தைப் பற்றி மிகவும் மோசமாக பேசியுள்ளார்கள். அதன்போது சிலர் வெளியேறி இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நாம் தொட்டுசொல்வதற்கான காரணம் உங்களுக்கு இன்னும் படிப்பதற்கு நிறைய இருக்கிறது. நீங்கள் வருங்காலத்தினுடைய தலைவர்கள். நாங்களும் ஒரு தலைவர்களாக இருக்கிறோம் இருந்திருக்கிறோம் வழிநடத்தியிருக்கிறோம். என்றால் அதற்கு உங்களைப்போன்ற இந்தக்காலத்தில் வாழ்கின்ற நீங்கள் என்ன பயிற்சிகளைப் பெறுகின்றீர்களோ அதேபோன்று நாங்கள் இளமையில் பெற்ற பயிற்சிகள் தான் காரணம்.

இன்றைக்கு முஸ்லிம் சமூகத்துக்குத் தேவையானது கட்சிகளுமல்ல பெரும் அரசியல் பொறுப்புகளுமல்ல. இன்று முஸ்லிம் சமூகத்துக்குத் தேவைப்படுவது அல்லாஹ் ரசூலுக்குப் பயந்து சமூகத்தில் கருணை காட்டி அன்பு காட்டக்கூடிய ஒரு அமீரே வேண்டும் என்பதை என்னால் சொல்லாமல் இருக்க முடியாது. அந்த அமீர் ஊருக்கு ஒருவர் வேண்டும் ராஜா தேவையில்லை.

-எம்.வை.அமீர் -

No comments

Powered by Blogger.