Header Ads



நமது குழந்தையின் உணவு, ஊட்டச்சத்து மிக்கதா..?

குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கான காரணங்கள் என்னென்ன?

ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமான ஊட்டச்சத்துமிக்க உணவுப்பொருட்கள் என்னென்ன?

குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு பற்றி பெற்றோருக்கு ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு என்னென்ன?

ஊட்டச்சத்து மருத்துவர் ராபர்ட் முர்ரேவுக்கு இந்த மூன்று கேள்விகளும்...‘குழந்தைகளின் ஊட்டச்சத்து விஷயத்தில் பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. அதை வயதுவாரியாகவே பார்க்கலாம்’ என்பவர் சொல்லும் விளக்கங்கள் இங்கே....

பிறந்த குழந்தைக்கு...

குழந்தை பிறந்த ஆயிரம் நாட்களுக்குள், அதன் மூளையானது 3 பங்கு அளவுக்கு வளர்கிறது. இந்த வளர்ச்சிக்கு இரும்புச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம், Lutin, Colin போன்ற ஊட்டச்சத்துக்கள் அத்தியாவசியமாகிறது. மூளை வளர்ச்சிக்கும், அதன் செயல்பாட்டுக்கும், அந்த வளர்ச்சியை நிலையாக தக்கவைத்துக் கொள்வதற்கும் இதுபோன்ற சத்துக்கள் அவசியம். பிறந்த குழந்தைக்கான முதல் உணவும், முழுமையான உணவும் தாய்ப்பால்தான். அந்த தாய்ப்பாலில் குழந்தைகளுக்கு தேவையான அனைத்துச் சத்துக்களும் நிரம்பியுள்ளது.

2 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளின் வளர்ச்சிக்கு...

2 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளின் உயரம், எடை, எலும்பு, தசை மற்றும் மூளையின் வளர்ச்சி போன்றவற்றுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியான அளவு கிடைக்க வேண்டியது அவசியம். அதற்கு அவர்களுடைய அன்றாட உணவில் பின்வரும் பொருட்கள் கலந்திருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது.

காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பால் பொருட்கள், புரதச் சத்துள்ள பொருள்களான மீன், முட்டை, பீன்ஸ், இறைச்சி, நட்ஸ் மற்றும் சீட்ஸ் போன்ற 5 வகையான உணவுப் பொருட்கள் குழந்தைகளின் சீரான உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. 

ஊட்டச்சத்து பற்றாக்குறையைத் தவிர்க்க...

தனக்குப் பிடித்த உணவுப் பொருட்களை மட்டுமே சாப்பிடும் பழக்கமுடைய குழந்தைகளுக்கு அவர்கள் சாப்பிடாமல் தவிர்க்கும் உணவுப் பொருட்களிலிருந்து கிடைக்கவேண்டிய ஊட்டச்சத்துக்கள் சரிவர கிடைக்காமல் போகிறது. இதுபோன்று தவிர்க்கும் உணவுப் பொருட்களை அந்த குழந்தைகளுக்குப் பிடித்த உணவுப் பதார்த்தங்களாக செய்து கொடுத்து அவர்களை சாப்பிட வைப்பது பெற்றோரின் கடமை.

பிடித்த உணவுகளை மட்டும் சாப்பிடுவது, உணவு பழக்கவழக்க மாற்றங்கள், ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்கள் கிடைக்காத நிலை, குடும்பச் சூழ்நிலை மற்றும் பெற்றோரின் வறுமை போன்ற காரணங்களால் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்காமல் போகிறது. இதுபோன்ற ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை சரிசெய்வதற்கு Oral Nutritional Supplement என்று சொல்லப்படும் வாய்வழி சாப்பிடும் துணை ஊட்டச்சத்துப் பொருட்களை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிட வேண்டும்.

Oral Nutritional Supplement
குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் கலந்து தயார் செய்யப்பட்டுள்ள உணவுப் பொருளுக்கு Oral Nutritional Supplement(ONS) என்று பெயர். இந்த பொருட்கள் திரவ நிலையிலோ, பொடிகளாகவோ, அரை திட நிலையிலோ இருக்கிறது.

இவற்றில் குழந்தைகளின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுச்சத்துக்கள், கொழுப்பு அமிலங்கள் அல்லது அமினோ அமிலங்கள், நார்ச்சத்துக்கள் போன்ற அனைத்தும் போதுமான அளவில் கலந்துள்ளது. இதனால் இந்த துணை உணவுப் பொருள்கள் குழந்தைகளின் சீரான மற்றும் விகிதாச்சார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது.

ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு குழந்தைகளுக்கு எந்தெந்த வயதில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் அவசியம், எவ்வளவு கலோரிகள் தேவை, அதை எப்படி நமது பாரம்பரிய உணவுப் பொருட்களில் இருந்து பெறுவது மற்றும் எந்த மாதிரியான வாய்வழி துணை ஊட்டச்சத்துப் பொருள்கள் தேவை என்பதையும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மருத்துவரை அணுகி பெற்றோர் தெரிந்து கொள்வது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். ஊட்டச்சத்து பிரச்னை ஏற்பட்டால் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதும் நல்லது. 

அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. ஆனால், வளர்ந்துவரும் நாடுகளின் பட்டியலில் உள்ள இந்தியாவில் இந்த விழிப்புணர்வு போதுமான அளவில் இல்லை. அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிற நிலையில்தான் உள்ளது.

ஊட்டச்சத்தின் அவசியம், அதன் பற்றாக்குறையால் ஏற்படும் உடல்நல பிரச்னைகள் மற்றும் அந்த பிரச்னைகளை சரிசெய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்த விழிப்புணர்வினை அனைத்து மக்களிடமும் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

1 comment:

Powered by Blogger.