August 08, 2017

அந்த முஸ்லிம் இளைஞன் பற்றி, கவனம் செலுத்தப்போவது யார்..?

சமூக ஊடகமொன்றில் இனமதவாத காழ்ப்புணர்வு பதிவொன்றிற்கு பதில் அளிக்கச் சென்ற மத்திய மாகாணத்தைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை தெரிந்த விடயமாகும்.

அவருக்கு எதிராக பாரதூரமாக பதிவு செய்யப்பட்டுள்ள குற்றச் சாட்டின் தன்மையைப் பொறுத்தவரையில் விவகாரத்தை சமாதானமாக தீர்த்து வைக்க முடியாத வாறு இறுக்கமாகவும் சிக்கலாகவும் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் கடந்த காலங்களிலும் அண்மைக் காலமாகவும் பகிரங்கமாக மேடைகளிலும் ஊடகங்களிலும் மதநிந்தனை உற்பட காழ்ப்புணர்வு பரப்புரைகள் செய்து கலவரங்களை அடாவடித்தனங்களை அரங்கேற்றிய இன மத வெறி காடையர்களது விடயத்தில் இவ்வாறு சிக்கலான இறுக்கமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை என்பது நாடு மற்றும் உலகறிந்த விடயமாகும்.

அண்மையில் மதகுரு என்று அழைக்கப்படுகின்ற ஒருவது பாரதூரமான குற்றவியல் வழக்குகள் சுமார் இரண்டு மணித்தியாலங்களிற்குள் சட்டம் மற்றும் ஒழுங்குகளை நிலை நிறுத்துகின்ற தரப்புக்களால் மற்றும் பின்னணியில் இருந்து செயற்பட்ட அரசியல் தரப்புக்களால் எவ்வாறு கையாளப்பட்டன என்பதனையும் நாடும் உலகும் அறியும்.

இவ்வாறான பின்புலத்தில் ஒரு முஸ்லிம் என்ற காரணத்தினால் தானா மேற்படி வாலிபரின் விடயம் இவ்வளவு கடினமாக கையாளப்படுகிறது என்ற நியாயமான சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

மேற்படி விவகாரத்தை அரசின் உரிய உயர் தரப்புக்களின் கவனத்திற்கு கொண்டுவந்து சுமுகமாக தீர்த்து வைக்கவோ குறித்த வாலிபரை எச்சரித்து விடுதலை செய்யவோ கூடிய விதத்தில் சட்ட ஆலோசனைகள் பெற்று நடவடிக்கைகள் எடுக்கவோ எந்த வொரு முஸ்லிம் அரசியல் வாதியும் முயற்சி எடுக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும்.

சற்று முன் என்னுடன் தொடர்பு கொண்ட குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சகோதரரிடம் கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் குறித்த விவகாரத்தில் எத்தகைய ஆலோசனைகளை வழங்கினார்கள் அல்லது நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என்று கேட்ட பொழுது அவர் அளித்த பதில் மிகவும் கவலை தந்தது.

மாவட்டத்திற்கு வெளியே உள்ள ஒரு பிரபல முஸ்லிம் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவருமாறும், உரிய சட்ட வரம்புகளிற்குள் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா மற்றும் தேசிய ஷூரா சபை ஆகியவற்றால் மேற்கொள்ள முடியுமான நடவடிக்கைகள் குறித்து விவகாரத்தை கையாளும் சட்டத்தரணிகளின் ஆலோசனைகளை பெற்றுத் தருமாறும் அவர்களை நான் வேண்டிக் கொண்டேன்.

குறிப்பு :
இனமத வெறி காழ்ப்புணர்வுப் பரப்புரைகளுக்கு உணர்ச்சிவசப்பட்டு அதேபாணியில் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதும், அதேபோன்று தனி நபர்கள், குழுக்கள் என்பவற்றிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை இடுவதும் தண்டனைக்குரிய குற்றங்களாகும், அவ்வாறு நடந்து கொள்வோர் இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் சட்டத்தின் முன் நிறுத்தப் படல் வேண்டும் என்பதில் என்னிடம் எந்த வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

-Inamullah Masihudeen-2 கருத்துரைகள்:

Hon. Minister Rauf Hakeem is your brother in law. Speak to him and try to get this boy out rather than writing community based sentimental articles. Good luck.

Why cant you tell hakeem ..he is represeting kandy district.

Post a Comment