Header Ads



காய்ச்சல் இருக்கும்போது தாய்ப்பால் கொடுக்கலாமா...?

உலக தாய்ப்பால் விழிப்புஉணர்வு வாரம் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 25 ஆண்டுகளாக தாய்ப்பால் பற்றி விழிப்புஉணர்வு ஏற்படுத்தியும்கூட வெறும் 74 சதவிகிதம் தாய்மார்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு மகிழ்வுடன் தாய்ப்பால் தருகின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். அதுவும் அவர்களில்  6 மாத காலம், தாய்ப்பால் மட்டுமே (Exclusive breast feeding)  கொடுப்பவர்கள் 14 சதவிகிதம் மட்டுமே.  தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன? எப்போது தாய்ப்பால் கொடுக்கக்கூடாது? என்பதற்கான புரிதலும் இல்லாமல் போனதே இதற்குக் காரணம். 

தாய்ப்பால் பற்றாக்குறை

தாய்ப்பால் போதவில்லை என்று சொல்வதற்கு முன், எது பற்றாக்குறை என்று தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தை தாய்ப்பால் குடித்தபிறகு, 2 முதல் 3 மணிநேரம் உறங்கி, ஒரு நாளைக்கு 6 முதல் 8 முறை சிறுநீர் கழித்து, அதன் உடல் எடை  வயதுக்கு ஏற்ப அதிகமானால் உங்கள் குழந்தைக்குப் போதுமான பால் கிடைக்கிறது என்று அர்த்தம். இதில் ஏதேனும் பாதிப்பு என்றால் தாய்ப்பால் பற்றாக்குறை என்ற முடிவுக்கு வர வேண்டும். 

சரியான தூக்கமின்மை, புட்டிப்பால் கொடுத்தல், வலியுடைய நிலைகள், சரியான தாய் - சேய் இணைப்பு இல்லாமை, பால் பற்றவில்லை என நினைத்துக் கொண்டிருத்தல் போன்றவையே தாய்ப்பால் சுரக்கும் நிலை குறைவதற்கானக்  காரணங்களாகும். தாய், போதுமான ஓய்வு மற்றும் சரியான உணவு எடுத்துக்கொண்டாலே இந்தப் பிரச்னை காணாமல் போய்விடும். மேலும் தாய் தன் குழந்தையை எப்போதும் உடன் வைத்திருந்து, தேவையானபோது பால்கொடுத்து வந்தாலே எந்த நோயும் குழந்தையைத் தாக்காது. 

புட்டி பால்

இரட்டைக் குழந்தைகள் பிறந்தால், இரண்டு குழந்தைகளுக்கும் பால் பற்றாக்குறை ஏற்படும் என்று நினைக்கலாம். ஆனால் எவ்வளவு தேவையோ அவ்வளவு பால் சுரக்கும் . இரண்டு குழந்தைகள் கொடுக்கும் தூண்டுதல் இன்னும் அதிகமான பாலை சுரக்கச் செய்யும்.

`எனக்கு உடல்நிலை சரியில்லை. நான் குழந்தைக்கு பால் கொடுக்கலாமா?' என்ற கேள்வி பெரும்பாலான அம்மாக்களிடம் ஏற்படும். பொதுவாக மார்பக வீக்கம், காய்ச்சல், வறண்ட காம்புகள், சுவாசக்குழாய் நோய்த்தொற்று, சிறுநீர்க்குழாய் நோய்த்தொற்று போன்றவை இருந்தால்கூட பால் கொடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால் உங்கள் உடல்நிலை சரியாக தாய்ப்பால் கொடுப்பது அவசியமானதும்கூட.

எப்போது பால் கூடாது?

குழந்தைக்கு பால் ஒவ்வாமை, கேலக்டோசீமியா (galactocemia) போன்ற பிரச்னைகள் இருந்தால் பால் கொடுக்க வேண்டாம். (கேலக்டோசீமியா என்பது மரபு வழிக் கோளாறு. கேலக்டோஸ் குளூக்கோஸாக மாற்றம் அடைய முடியாத நிலை). இதுபோன்ற நிலைகளில் ஏதேன்றும் ஒன்று இருந்தாலும் பால் கொடுக்க வேண்டாம்.

அடுத்ததாக ஹெச்.ஐ.வி நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள், ரெட்ரோவைரல் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள், சிகிச்சைபெறாத காசநோயாளிகள், T லிம்போசைட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோய்க்காக மருந்து உட்கொள்பவர்கள், கதிரியக்கச் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் மற்றும் சில நோய்களுக்காக மருந்து உட்கொள்பவர்களும் பால் கொடுக்கக்கூடாது.

 தேவையற்ற சந்தேகங்களால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தாதீர். தாய்ப்பால் கொடுப்பதால் உங்கள் குழந்தைக்கு மட்டுமல்ல... உங்களுக்கும் பல நன்மைகள் உண்டு என்பதை மறக்காதீர்கள்!

No comments

Powered by Blogger.