August 16, 2017

முஸ்லிம்களுக்கு எதிராக தலையெடுக்கும் 'தமிழ் இனவாதம்'

-Anojan Thirukkethesewaranathan-

இக் கேள்வி முழுவதும் இனவாதம் கொப்பளிக்கிறது. நீ தமிழனா என்ற உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும் முன்னர் சில விடயங்கள் சொல்லவேண்டும். ஒவ்வொன்றாக வருகிறேன். தவறான காரியங்கள் யார்செய்தாலும் தவறு. தனக்கு உரிமையில்லாத காணியை முஸ்லிம் அபகரித்தாலும் தவறு, தமிழன் அபகரித்தாலும் தவறு, சிங்களவன் ஆக்கிரமித்தாலும் தவறு. தமிழன் பெண்களை ஏமாற்றினாலும் தவறு, முஸ்லிம் ஏமாற்றினாலும் தவறு, சிங்களவன் ஏமாற்றினாலும் தவறு. தவறான ஒரு செயலை எவன் செய்தாலும் தவறு. அச்செயல் நில அபகரிப்பாகட்டும் பெண்களை ஏய்ப்பதாகட்டும் பாரபட்சம் பார்த்து வேலை வழங்குவதாகட்டும் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதாகட்டும் எல்லாம் தவறு.
அண்மையில் திருகோணமலையில் நடந்த சம்பவங்கள் பல மனதை வருத்துகின்றன. இனவாதம் தொடர்ந்து பிரசாரம் செய்யப்படுகிறது. இப்பிரசாரங்கள் மூலமாக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் குற்றவாளியாக்கப் படுகின்றனர். தமிழர்களின் பிரச்சினைக்கு இப்போது முஸ்லிம்கள்தான் காரணம் என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. மக்களைத் திசைதிருப்ப ஒரு புது எதிரியைக் கட்டமைக்கிறார்கள் ஆளும் வர்க்கம்.
ஒரு காணியை ஒருவர் விற்கின்றார் இன்னொருவன் வாங்குகிறான். அதில் எந்த அநீதியும் எனக்குத் தெரியவில்லை. ஒரு இன எதிர்ப்பு மனநிலையுடன் ஒரு நிகழ்ச்சிநிரலின் கீழ் ஆக்கிரமிப்பு நோக்கில் வாங்கப்பட்டால் தவறு. அதி திட்டமிட்ட குடியேற்றம். அது யாராயும் இருந்துவிட்டுப் போகட்டும். அது தவறே.
ஒருவர் ஒரு வீட்டையோ கடையையோ வாடகைக்கு விடுகிறார், இன்னொருவர் அதற்கு வாடகை செலுத்தி பயன்படுத்துகிறார். இதில் எங்கிருந்து வருகிறது அநீதி? ஒருவர் ஒரு பொருளை விற்கிறார் இன்னொருவர் காசுகொடுத்து வாங்குகிறார். செல்லாத காசைக்கொடுத்து ஏமாற்றா வரை, கலப்படம் செய்யாவரை, திருட்டுப் பொருள் விற்காதவரை அதில் எந்த அநீதியும் இல்லை.
ஒருவர் பதவியில் இருக்கிறார் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு வேண்டியவருக்கு மட்டும் உதவுகிறார், அதிகார துஸ்பிரயோகம் செய்கிறார். இது இன்றைய இலங்கையில் எல்லா இடங்களிலும் நடக்கும் தவறு. தமிழர்களும் விதிவிலக்கில்லை.
ஒருவர் இன்னொருவரைக் காதலிப்பதாக சொல்கிறார், அந்த இன்னொருவர் அக்காதலை ஏற்றுக்கொள்கிறார். இருவரும் ஏதோவொரு மதச் சடங்கைப் பின்பற்றி திருமணம் செய்கின்றனர். மனமொத்து அதே மதத்தைப் பின்பற்றுகின்றனர். அது எந்த மதமாகவும் இருந்துவிட்டுப் போகட்டுமே? இந்து கிறிஸ்தவரைக் காதலித்து மதம் மாறியதில்லையா, மதம் மாற்றியதில்லையா? இந்து பௌத்தரைக் காதலித்து மதம் மாறியதில்லையா, மதம் மாற்றியதில்லையா? தமிழர் சிங்களவரைக் காதலித்து திருமணம் செய்ததில்லையா? காதலையும் நல்ல மனிதர்களையும் அடையாளத்துக்குள் சுருக்கிவிட முடியாது. அப்படிக் குறுக்கி உங்கள் மதவாதத்தாலும் இனவாதத்தாலும் உலகை அழித்துவிடாதீர்கள்.
நீங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானதாக சொன்ன அமைப்புக்கள் எல்லாமே பத்து வருடங்களுக்கு முன்னர் தமிழரை அழிப்பதைக் குறிக்கோளாய்க் கொண்டிருந்தன. முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் என நீங்கள் நம்பும் சிவசேனா போன்ற அமைப்புக்கள் வட இந்தியாவில் தமிழர்களுக்கு எதிராக கலவரங்களைத் தொடக்கி வைத்த அமைப்புகள் போட்ட குட்டிகள் என்பதை மறக்காதீர்கள். இன்று கோவில்களை இடிக்கக்கூடாது என்ற இன்று உங்களுடன் சேர்பவர்கள் சிலகாலம் முன்னர்வரை கோவில்களை இடித்து அவற்றை ஆக்கிரமித்து புனித பூமிஎனப் பிரகடனம் செய்தவர்கள். நாளை அவர்கள் பள்ளிவாசலை இடிக்கும் போது உங்களிடம் அளவாங்குகளை கடன்வாங்கவே இன்று வந்திருக்கிறார்கள்.
போதுபல சேனாவுக்கு எதிரான போராட்டங்களில் முஸ்லிம் சகோதரர்களுடன் நின்றிருக்கிறேன். சம்பூர்ப் போராட்டத்தின் என்னுடன் அவர்கள் நின்றிருக்கிறார்கள். சம்பூர் மின்நிலையம் தமிழர்களால் மட்டுமல்ல முஸ்லிம், சிங்கள் சகோதரர்களின் ஒற்றுமையால் கைவிடப்பட்டது. மண்ணுக்காய் உண்மையாய்ப் போராடிய பசுமைத் திருகோணமலை அமைப்பினருக்கு அது தெரியும். இன மத மொழி பேதம் மறந்து மக்கள் ஒன்றிணையும் போராட்டங்கள் பல உருவாகின்றன. இப்படியான மக்கள் ஒற்றுமை ஆள்வோரை எப்போது அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது. அதனாற்தான் இன்று இலங்கை முழுதும் மீளவும் இனவாதம் கிளரிவிடப் படுகிறது. மக்கள் ஒன்று சேர்ந்து நிற்பதைத் தடுக்க இனவாதம் ஆள்வோரின் ஆயுதமாகிறது. பலியாவது எவராயினும் இரத்தக்கறை அமைதியாய் இருக்கும் அத்தனை கைகளிலும் இருக்கும்.
இன்று நீங்கள் கக்கும் இனவாதம் நாளை இன்னொரு இனத்தை எரிக்கும் தீயின் வித்துக்கள். காற்று மாறும் நாள் அது உங்களையும் எரிக்கும் கவனம்.
இப்போது உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன். இனவாதம் கக்கும் நீ தமிழன் என்றால், இனவாதம் கக்கினால்தான் நான் தமிழன் என நீ ஏற்பாய் என்றால், நான் தமிழன் இல்லை. எங்கெல்லாம் ஒடுக்குமுறை நிகழ்கிறதோ அங்கே ஒடுக்குமுறைக்கு எதிராய் குரல் கொடுக்கும் மக்களின் தோழன். இனவாதத்தை எதிர்க்கும் மக்களின் தோழன். உன்போன்ற தமிழர்களை எதிர்க்கும் மக்களின் தோழன்.

5 கருத்துரைகள்:

யாரப்பா அந்த அனோஜன் ? உங்கள் நடுநிலை கருத்து புல்லரிக்க வைக்கிறது !

நண்டு கொழுத்தால் பொந்தில் வாழ நாட்டம் காட்டாது கிளி குஞ்சுக்கு சிறகு முளைத்தால் பறப்பதற்கு அதன் தாயை கேட்காது இளம் உள்ளமது காதல் உணர்வு பெற்றால் உலகை பார்க்காது.இதை அறியாதவன் மனிதன் இல்லை.சிங்களவர் உங்களை நசுக்குவதெல்லாம் நீர் மேற் குறிப்பிட்டவைகளை செய்ததாலா?

அனோஜனின் கருத்து 100% உண்மை.

Kumar, ajan please embrace Islam. Protect you from fire of hell

techhunt3, please embrace Chritianity to being peace with yourself

Post a Comment