August 20, 2017

பௌத்த தேரரின் முன்மாதிரி, சொல்லும் செய்தி


திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரிக்கு கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த நாயக்க தேரரினால் 250 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ள மூன்று மாடிக் கட்டிடம் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வானது முழு நாட்டு மக்களுக்கும் முன்மாதிரி மிக்கதாகவும் பல்வேறு செய்திகளைச் சொல்வதாகவும் அமைந்துள்ளது. 

சிறுபான்மை மக்கள் மத்தியில் பௌத்த தேரர்கள் என்போர் மாற்றுக் கண் கொண்டே பார்க்கப்படுகின்ற ஒரு கசப்பான சூழலில் இவ்வாறு முஸ்லிம் பாடசாலை ஒன்றுக்கு தேரர் ஒருவர் தனது சொந்த நிதியிலிருந்து கட்டிடம் அமைத்துக் கொடுப்பதென்பது ஆச்சரியமானதொரு செய்திதான்.

அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த தேரர்கள் தலைமையிலான குழுவினரே மிக மோசமன இனவாத , மதவாத கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். சிங்கள மக்களையும் முஸ்லிம் மக்களையும் நிரந்தரமாகப் பிரித்து வைக்கின்ற திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்களை அவர்கள் முன்னெடுத்துள்ளனர். 

குறிப்பாக அல்லாஹ்வையும் அவனது தூதரையும் இழிவாகப் பேசுகின்ற சில தேரர்களின் செயற்பாடுகளால் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களும் பௌத்த தேரர்கள் என்றாலே சந்தேகக் கண்கொண்டு நோக்குகின்ற அளவு இன்று நிலைமை மோசமடைந்துள்ளது.

அவ்வாறனதொரு கால கட்டத்தில்தான்  கலாநிதி பன்னில ஸ்ரீ ஆனந்த நாயக்க தேரர் முஸ்லிம் பாடசாலை ஒன்றுக்கு தனது சொந்த நிதியிலிருந்து கட்டிடம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்பது தேரர்கள் பற்றிய நமது நிலைப்பாட்டை மீள்பரிசீலனைக்குட்படுத்தியுள்ளது எனலாம்.

அல் அஸ்ஹர் கல்லூரியின் கட்டிடத் தேவை குறித்து தேரரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து அவர் கல்லூரியை நேரில் சென்று பார்வையிட்டு கட்டிடத் தேவையை நிறைவு செய்ய முன்வந்தார். எனினும் தேரரின் இந்த நல்லெண்ணத்தை பௌத்த கடும்போக்கு சக்திகள் எதிர்க்கத் தவறவில்லை. அவருக்கு இது தொடர்பில் பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. இந்த செயற்திட்டத்தை கைவிடுமாறும் அவருக்கு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன.

எனினும் அவர் தனது தீர்மானத்தில் உறுதியாகவிருந்து கட்டிடப் பணிகளை முழுமையாகப் பூரணப்படுத்தி நேற்றைய தினம் அதனை மாணவர்களிடம் கையளித்து தனது செயற் திறனையும் நல்லிணக்கத்துக்கான தனது அர்ப்பணிப்பையும் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

அது மாத்திரமன்றி எதிர்காலத்தில் வடக்கில் தமிழ் மாணவர்களுக்கும் நான் பாடசாலைகளை அமைத்துக் கொடுப்பேன். என்னை யாரும் தடுக்க முடியாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். 

எதிர்கால சந்ததியினர் மத்தியில் நல்லிணக்கம் ஒன்றே தனது குறிக்கோள் என்றும் இன, மத பேதமின்றி இப்பாடசாலைக் கட்டிடத்தை அமைத்துக் கொடுப்பதில் தான் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதாகவும் அவர்   குறிப்பிட்டுள்ளார். 

இவ்வாறான நல்லெண்ணம் கொண்ட ஏராளமான பௌத்த தேரர்களும் பொது மக்களும் பெரும்பான்மை மக்கள் மத்தியில் வாழ்கின்றார்கள் என்பதை முஸ்லிம்களாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

அவர்களுடனான உறவுகளை வலுப்படுத்துவதிலும் அவர்களுக்கும் நமக்குமிடையிலான பரஸ்பர புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதிலுமே நமது வெற்றி தங்கியிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு நல்லதொரு உதாரணமாகும்.

நாம் எவ்வாறு முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் எதிர்மறையான நிலைப்பாட்டைக் கொண்ட தேரர்கள் விடயத்தில் தீவிரமாக செயற்படுகிறோமே அதைவிடவும் இவ்வாறான நேர்மறையான நிலைப்பாட்டைக் கொண்ட தேரர்கள் மற்றும் சிங்கள மக்கள் விடயத்தில் நேசக்கரம் நீட்ட முன்வர வேண்டும். இதன் மூலமே நம்மைத் துடைத்தெறியக் காத்திருக்கும் இனவாத சக்திகளை தோற்கடிக்க முடியுமாகவிருக்கும்.

(விடிவெள்ளி பத்திரிகையில் வெளியான ஆசிரியர் தலையங்கம்)

1 கருத்துரைகள்:

Thank you Sir, you are Great

Post a Comment