Header Ads



“அளுத்கம மக்களுக்கு இழப்பீட்டைப்பெற, உளத்தூய்மையுடன் போராடினேன்” - ஹிஸ்புல்லாஹ் நெகிழ்ச்சி

அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க அரசியல் ரீதியாக உளத்தூய்மையுடன் போராடியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தனது கோரிக்கையை ஏற்று கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டினை வழங்க அரசு தீர்மானித்துள்ளதை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.

அளுத்கம கலவரத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும் வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீட்டினை வழங்க கோரும் அமைச்சரவைப் பத்திரம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் தயார் செய்யப்பட்டு அமைச்சர் சுவாமிநாதன் ஊடாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில், இக்கோரிக்கை அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இழப்பீடு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 

அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகர் ஆகிய பகுதிகளில் 2014.06.15-2014.06.16 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு முறையான இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படவில்லை. இது தொடர்பில் அவ்வப்போது பேசப்பட்டாலும் தெளிவான முயற்சிகள் எதுவும் முஸ்லிம் தரப்பால் செய்யப்படவில்லை. 

இந்நிலையில், ஆயிரம் நாட்களைக் கடந்தும் கலவரத்தில் மரணமடைந்தவர்களது குடும்பங்களுக்கோ, காயமடைந்தவர்களுக்கோ இழப்பீடுகள் வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. பின்னர், இவ்விடயம் சம்பந்தமாக நான் அதிக கவனம் செலுத்தி தகவல்களைத் திரட்டி நாடாளுமன்றத்தில் காராசாரமான உரையொன்றை கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி ஆற்றியிருந்தேன். 

இதன்போது, ஆர்.ஆர்.டி. அமைப்பின் அறிக்கையொன்றை கோடிட்டுக்காட்டி கலவரத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படாமை குறித்தும் எனது கண்டனத்தை வெளியிட்டிருந்தேன். 

அளுத்கம மக்களுக்கு நஷ்டஈட்டினைப் பெற்றக்கொடுக்கவும், அவர்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்கவும் நாட்டின் உயரிய சபையில் நான் ஆற்றிய காரசாரமான உரை அரச மட்டத்தில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் என்னுடன் கலந்துரையாடியிருந்தார். அப்போது, இழப்பீடு சம்பந்தமான அறிக்கையொன்றை தயார் செய்து அதற்கான நஷ்டஈட்டை வழங்குவதற்கு அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சர் சுவாமிநாதன் ஊடாக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியிருந்தார். 

அதன் பின்னர் ‘REPPIA’ பணிப்பாளர் ஊடாக தகவல்கள் திரட்டப்பட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசினால் அமைச்சரவைப் பத்திரம் ஜுலை 24ஆம் திகதி தயார் செய்யப்பட்டு, அமைச்சர் சுவாமிநாதன் ஊடாக நேற்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட போது அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இதனை சிலர் நாங்கள் தான் முன்னெடுத்தோம் என்ற தோரணையில் பிரசாரங்களை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், இம்மக்களுக்கு இழப்பீட்டினை வழங்க நான் எந்தளவு பங்களிப்பு செய்துள்ளேன் என்பது சம்பந்தப்பட்ட மக்களுக்கு தெரியும். 

குறித்த அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அங்கு நான் மும்மொழிந்திருந்த மரணமடைந்தவர்களது குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபா மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் என்ற தொகை அதிகமானது என்றும் இந்த சம்பவத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டால் மேலும் பல சம்பவங்களுக்கும் இழப்பீடுகள் வழங்க வேண்டி வரும் என்ற வகையில் பல்வேறு எதிர்மறையான கருத்துக்கள் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட போது, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன், ராஜித சேனரத்ன, தயாசிறி ஜயசேகர, அநுர பிரயதர்ஷன யாப்பா உள்ளிட்ட சிலர் ஆதரவாக பேசியுள்ளனர். 

இதேவேளை, அளுத்கம மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக தகவல்கள் திரட்டப்பட்டு பாரிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அதனை சீர்குழைத்து, வலுவிழக்கச் செய்யும் வகையில் கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி நல்லாட்சிக்கான தேசிய முன்னணியால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருந்தது. 

அதில், “அளுத்கம கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 33 வாரங்களைக் கடந்து விட்டபோதிலும் முறையான நஷ்டஈட்டைப் பெற்றுக்கெர்டுப்பதற்கு முஸ்லிம் எம்.பிக்களால் முடியாது போயுள்ளதாகவும் அதற்காக முயற்சிகளை அவர்கள் செய்வதில்லை” என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது. – என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2 comments:

  1. இது நிச்சயம் வரவேற்கப்படவேண்டிய விடயம்...

    ReplyDelete

Powered by Blogger.