Header Ads



இராஜதந்திர முறுகல், ஹஜ்ஜை பாதிக்கக் கூடாது


(இன்றைய -02- விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்)

கட்டாருக்கும் சவூதி அரேபியா தலைமையிலான வளை குடா நாடுகளுக்குமிடையிலான முறுகலானது ஹஜ் யாத்திரையிலும் செல்வாக்குச் செலுத்துவதை அவதானிக்க முடிகிறது. இதன் காரணமாக கட்டார் நாட்டவர்கள் இம் முறை ஹஜ் செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் தாம் கட்டார் பிரஜைகள் ஹஜ் கடமையில் ஈடுபட எந்தவித தடைகளையும் விதிக்கவில்லை என சவூதி அரேபியா மறுத்துள்ளது.

இதற்கு முன்னதாக சவூதி அரேபியா ஹஜ் கடமையினை அரசியல்மயப்படுத்துவதாகவும் கட்டார் பிரஜைகள் மற்றும் அங்கு வசிப்போர் ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளை நிறைவேற்ற விரும்பும்போது தடைகள் விதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி கட்டாரின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஐக்கிய நாடுகள் சபையில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. 

மேலும் கட்டார் அமீர் ஷெய்க் தமீம் பின் ஹமாட் அல் தானியின் ஊடக ஆலோசகரான அப்துல்லா அல்-அஸ்பாஹி சில தினங்களுக்கு முன்னர்,  கட்டார் ஹஜ் யாத்திரிகர்கள் சவூதியினுள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.  எனினும் இந்த குற்றச்சாட்டுகளை சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சரும் கடவுச் சீட்டு பணியகத் தலைவரும் மறுத்துள்ளனர்.

அத்துடன் ஹஜ் யாத்திரையை சவூதி அரேபியாவின் பொறுப்பிலிருந்து விடுவித்து சர்வதேசமயப்படுத்த வேண்டும் என கட்டார் ஐக்கிய நாடுகள் சபையிடம் வேண்டுகோள் விடுத்திருப்பது  சவூதிக்கு எதிரான போர்ப் பிரகடனம் என்றே தாம் கருதுவதாகவும்  சவூதி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து டோஹாவுடனான இராஜதந்திரத் தொடர்புகள் துண்டிக்கப்பட்ட போதிலும் சவூதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு கட்டார் யாத்திரிகர்களை வரவேற்பதாகவும் கட்டார் யாத்திரிகர்கள் கட்டார் விமான சேவை தவிர்ந்த எந்த விமான சேவை மூலமாகவும் சவூதி அரேபியாவுக்கு வர முடியும் என்றும் சவூதி அறிவித்துள்ளது.  

இவ்வாறு இரு நாடுகளுக்குமிடையிலான முறுகல் நிலையானது தற்போது ஹஜ் யாத்திரையுடன் இணைந்ததாக வேறொரு வடிவத்தை எட்டியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

சுமார் 20 ஆயிரம் பேர் இம் முறை கட்டாரிலிருந்து ஹஜ் யாத்திரைக்குச் செல்ல பதிவு செய்துள்ள நிலையில் இந்த முறுகலானது அவர்களது ஹஜ் கடமையை பாதிக்குமா எனும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

2015 ஹஜ் யாத்திரையின் போது மினாவில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈரானிய யாத்திரிகர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து சவூதிக்கும் ஈரானுக்குமிடையில் பாரிய இராஜதந்திர முறுகல் தோன்றியது. இதனால் 2016 ஆம் ஆண்டு ஈரானிலிருந்து எவரும் ஹஜ் யாத்திரைக்குச் செல்லவில்லை.  அதேபோன்றதொரு சிக்கல் நிலை இம் முறை கட்டார் விடயத்திலும் ஏற்படுமா எனும் அச்சத்தை பலரும் முன்வைத்துள்ளனர்.

எது எப்படியிருப்பினும் வளைகுடா நாடுகளின் முறுகல் நிலையானது எந்தவொரு நாட்டினதும் யாத்திரிகர்களைப் பாதிக்கக் கூடாது என்பதே அனைவரதும் வேண்டுகோளாகும். இது விடயத்தில் இரு தரப்பும் விட்டுக் கொடுப்புடனும் ஹஜ்ஜின் புனிதத்தை பேணியும் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

No comments

Powered by Blogger.