Header Ads



''வெள்ளைப் புடவையில், நகைகள் அணியாமல் நடந்த திருமணம்"

திருமணம் என்றாலே பெண்களுக்குள் ஏராளமான கனவுகளும், கற்பனைகளும் முளைப்பது சகஜமே. ஒரு மாதத்துக்கு முன்னரே புடவை செலக்‌ஷன்களும், அதற்கு மேட்சான நகைகளின் செலக்‌ஷனும் தொடங்கிவிடும். அப்படிப் பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் தேர்ந்தெடுக்கும் பெண்கள் மத்தியில் தன்னுடைய திருமணத்துக்காக எவ்வித உயர் ரக ஆடைகளையும், நகைகளையும் தேர்ந்தெடுக்காமல் மிகவும் எளிமையாக வெள்ளைப் புடவையில் திருமணம் செய்துள்ளார் பங்களாதேஷைச் சேர்ந்த  டஸ்நிம் ஜாரா (Tasnim Jara). ஃபேஸ்புக் மூலமாக அவரிடம் அவருடைய திருமணம் பற்றி பேசினோம். 

''என்னுடைய சொந்த ஊர் பங்களாதேஷ். நான் ஒரு தனியார் மருத்துவமனையில டாக்டராக வேலை பார்க்குறேன். அது மட்டுமில்லாமல் அரோகோ (Aroggo) என்கிற ஹெல்த்கேர் சென்டரின் தலைவராகவும் இருக்கின்றேன். அரோகோ என்பது முதன்முதலில் பங்களாதேஷில் ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இலவச மருத்துவ சிகிச்சை மையம். அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது என்னுடைய முகநூல் பக்கத்தில் விழிப்பு உணர்வு வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றேன். என்னுடைய தொழிலை வியாபாரமாக்கி அதில் லாபம் அடைவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ரோட்டோரத்தில் நோயால் துடிக்கும் மக்களுக்கு மருத்துவம் பார்க்கிறேன். அவர்கள் குணமானவுடன், என்னைப் பார்த்து கையெடுத்து கும்பிடும்போது நான் நெகிழ்கிறேன். படித்த படிப்புக்கான அர்த்தம் எனக்கு உணர்கிற நேரமும் அதுவே.

எனக்கென்று சில கோட்பாடுகள் வைத்திருக்கிறேன். அவற்றைக் கடைபிடிக்கவும் செய்கிறேன். அப்படி ஒன்றுதான் திருமண உடைகள், நகைகள் பற்றியது. பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்தபோது எனக்காக எவ்வித செலவையும் அவர்கள் செய்யக்கூடாது என்று நினத்தேன். எனக்கு நகைகள், உடைகள் மீது பெரிய விருப்பம் இல்லை. நகைகளைச் சுமந்து கொண்டு இருக்கும் பெண்களை அவர்களுடைய அலங்காரங்களையும், நகைகளையும் வைத்தே மதிக்கப்படுவது எனக்கு பிடிக்காமல் போய்விட்டது.

என் பாட்டிதான் என்னை சிறுவயதிலிருந்து வளர்த்தார். என்னைப் பொறுத்தவரை எனக்கு எல்லாமே என் பாட்டிதான். நான் அம்மா கூட வாழ்ந்ததவிட பாட்டிகூட இருந்ததுதான் அதிகம். ஆனா அவங்க இப்போ என் கூட இல்ல. அவங்களை என் கல்யாணத்துல மிஸ் பண்ணக்கூடாதுனு தீர்மானமா இருந்தேன். அந்த முடிவு காரணமாதான் பாட்டியோட வெள்ளை சேலையை நான் மணப்பெண்ணா இருக்கும்போது கட்டினேன்.  என் விருப்பத்தை என் கணவரா வரப்போறவர்கிட்ட கலேட் சைஃபுல்லா (Khaled Saifullah) தெரியப்படுத்தினேன். ''நீதான் மணப்பெண். உனக்கு என்ன விருப்பமோ, அதைச் செய்னு'' அன்பா சம்மதிச்சார்.
ஆனால், இந்தச் சமூகத்தில் பெண்ணுக்கென்று சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. அவற்றில் திருமணமத்துக்கு மிக முக்கியப் பங்குண்டு. என் உறவினர்களும், பெற்றோர்களும், கணவருடைய உறவினர்களும் நகைகள், காஸ்ட்லியான புடவை அணியச் சொல்லி பலதடவை வலியுறுத்தினார்கள். 'கல்யாணத்தப்ப யாராவது வெள்ளை புடவை கட்டுவாங்களா'' என்று என் மனதை கரைக்க எவ்வளவோ முயன்றார்கள். ஆனால் நான் என் முடிவில் தெளிவாக இருந்தேன். வேறுவழியில்லாமல் என் முடிவுக்கு சம்மதம் தெரிவித்தார்கள்.

திருமணத்தின்போது மேக்கப் சமாச்சாரங்கள், நகைகள் இல்லாமல் என் பாட்டி புடவையை அணிந்து இருந்தபோது என் மடியில் பாட்டி படுத்திருப்பதாக உணர்ந்தேன்.  என் திருமணத்தை பார்க்க முடியாமல் போன என் பாட்டியின் ஆத்மா நிச்சயம் சந்தோஷப்பட்டிருக்கும். இப்ப என்னை எல்லாரும் பாராட்டுகிறார்கள். நான் பாராட்டுக்காகவோ, புகழுக்காகவோ இதைச் செய்யவில்லை. இந்தச் சமூகம், பெண்களுக்கு சுதந்திரத்தையும் கொடுத்து, அவர்களை எந்நேரமும் கண்காணிக்கவும் செய்கிறது. கூண்டிலிருக்கும் பறவையைப் போல. பெண்களின் மீது சமூகம் வைத்திருக்கும் கட்டுப்பாடுகளையும், வழக்கமான கருத்துக்களையும் உடைத்தெறிய நினைத்தேன்.  அதை என் திருமணத்தில் நிகழ்த்திக் காட்டியதில் எனக்கு மகிழ்ச்சி. மொத்ததில் என் திருமணம் எனக்கு விருப்பமானபடி நடந்ததில் மிக மகிழ்ச்சி'' என்கிறார் பூரிப்போடு.

No comments

Powered by Blogger.