Header Ads



"தமிழ் ஹாஜியார் என கோசமிட்டமை, சைவ மக்களை அவமதிக்கும் செயலாகும்"

நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் கொடும்பாவி எரிக்கப்பட்ட செயற்பாட்டினை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை வன்மையாக கண்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்ட காலமாக தனது சிறுவயது முதல் தமிழுக்காகவும், சைவ சமயத்துக்காகவும் அயராது தன்னை அர்ப்பணித்து செயற்படும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும்,

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் ஐயா அவர்களை அவமானப்படுத்தும் முகமாக 16.08.2017அன்று 12 பேர் கொண்ட குழுவினர் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அவதூறாக பேசி அவரது கொடும்பாவியை எரித்த செயற்பாட்டினை மட்டக்களப்பு மாவட்ட இந்து மக்கள் சார்பாக எமது மாவட்ட இந்து இளைஞர் பேரவை சார்பாகவும் வன்மையாக கண்டிக்கின்றது.

தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களை மாற்று இனத்தவர்கள் சுவீகரிக்கும் போது பாராளுமன்ற உறுப்பினராவதற்கு முன்பும் அதன் பின்பும் இதற்கு எதிராக குரல் கொடுப்பதுடன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு எமது மக்களின் காணிகளை பாதுகாத்து வந்த காவலன் யோகேஸ்வரன் ஐயாவுக்கு அவர் கூறாத கருத்தினை கூறிக் கொண்டு,

மட்டக்களப்பு மங்களராம விகாரை பிக்குவின் ஆதரவாளராக செயற்படும் 12பேரால் அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டமை அரசியல் காழ்ப்புணர்சியின் பின்னணியில் நடைபெற்ற சம்பவம் என்பதே உண்மை அது மட்டும் அன்றி ஒரு இந்து குருவாக எக்காலத்திலும் பணம் பெறாது சேவையாக மேற்கொள்ளும் தர்மவானை கள்ளன் எனவும் தமிழ் ஹாஜியார் எனவும் கோசமிட்டமை சைவ மக்களை அவமதிக்கும் செயலாகும்.

இவ்வாறான அவமதிப்பு செயற்பாட்டை மேற் கொண்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுக் கொடுக்க முன்வருமாறு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை மூலம் பொலிஸ் மா அதிபருக்கும், மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் பேரவை மூலம் மடல் அனுப்பி உள்ளோம்.

தலைவர் யோகேஸ்வரன் ஐயாவுடன் சேர்ந்து சேவையாற்றுபவர்களுக்கே அவரது தமிழ் உணர்வும் சைவ சமய உணர்வும் தெரியும். ஆனால் அவரது எதிரிகளுக்கு அது விளங்க இடமில்லை. அவரது நீதி, நியாயம், தர்ம தன்மையை புரியாத ஒரு சிலரே இவ்வாறான மன்னிக்க முடியாத செயற்பாட்டினை புரிந்துள்ளனர்.

மாவட்டத்தில் பல அரசியல்வாதிகள் இருந்த போதும் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து சேவை புரியும் யோகேஸ்வரன் ஐயாவுக்கு மாத்திரம் ஏன் இவ்வாறு செய்தார்கள் என்றால் அவரது சிறந்த சேவையால் மக்கள் மனதில் அவர் குடிகொண்டு உள்ளதால் அதை விரும்பாத அவருக்கு எதிரான கட்சியின் ஆதரவாளர்கள் (பிக்குவின் ஆதரவாளர்கள்) இச் செயற்பாட்டினை மேற்கொண்டுள்ளனர் என்பதே மறுக்க முடியாத உண்மை.

இவ்வாறானவர்களுக்கு விரைவில் இறைவன் தண்டனை வழங்க வேண்டும் என பேரவை பிரதிநிதிகளும் சைவ மக்களும் பிரார்த்திக்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.