Header Ads



வடக்கு முஸ்லிம்களின், அவசர கவனத்திற்கு..!

-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-

வடமாகாணத்தில் இருந்து நீண்ட காலமாக இடம்பெயர்ந்திருப்பவர்களை மீள் குடியேற்றுவதற்கான விஷேட செயலணி மேற்கொள்ளும்  உள்ளக இடம்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான மக்கள் தொகைக்கணிப்பு தொடர்பான பத்திரங்களை பூர்த்தி செய்து  2017 /08 / 31  அன்று அதற்கு முன்னர் பிரதேச கிராம சேவை அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.  

அதேபோன்று எதிர்வரும் 2017 செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள இத்தொகைக்கணிப்பிற்காக உங்கள் பிரதேசத்திற்கு வருகைதரும் தொகைக்கணிப்பீட்டாளர்களுக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குதல் வேண்டும்.

மேற்படி உத்தியோகபூர்வமான தொகைக் கணிப்பீட்டின் மூலம் பெறப்படும் தரவுகள் புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது, அந்த வகையில் இந்த சந்தர்ப்பத்தை இடம்பெயர்ந்து வாழும் வடபுல முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ள தவறிவிடக்கூடாது, குறிப்பாக மீள் குடியேற்றத்தில் தற்பொழுது ஆர்வம் கட்டாது கவனயீனமாக இருக்கும் புதிய சந்ததிகளும் எதிர்கால அரசியல் பொருளாதார சமூக நலன்களைக் கருத்தில் கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முன்வருதல் கட்டாயமாகும்.

இன்றுவரை, வடபுலத்தில் இருந்து விடுதலைப்புலிகளால் 1990 ஆம் ஆண்டு ஒட்டு மொத்தமாக    விரட்டியடிக்கப்பட்ட  மக்களின் சரியான புள்ளிவிபரங்கள், அவர்களது காணிகள் வதிவிடங்கள் இழப்புக்களின் தரவுகள், ஆவணங்கள், கடந்த 27 வருடங்களில் அவர்களது சனத்தொகை அதிகரிப்பு, அவர்களில் மீள்குடியேற விருப்புபவர்களது விபரங்கள் என எதுவுமே எந்தவொரு தரப்பினாலும், அரசியல் கட்சியினாலும், அரச யந்திரத்தினாலும் முழுமையாக ஆவணப்படுத்தப்படவோ, முறையாக அரசினதோ சர்வதேச அமைப்புக்களினதோ கவனத்திற்கு கொண்டுவரப்படவோ இல்லை என்பதே மிகவும் கசப்பான உண்மையாகும்.

2016/07/05  ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் கீழ் வடமாகாணத்தில் இருந்து நீண்ட காலமாக இடம்பெயர்ந்திருப்பவர்களை மீள்குடியேற்றுவதற்கான விஷேட செயலணி அமைக்கப்பட்டது

இத்தொகைக்கணிப்பில் பங்குபற்றுதல் தொடர்பான விடயங்கள்:-

மோதல் காரணமாக 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31  ஆந் திகதிக்கு முன்னர் வடக்கு  கிழக்கு மாகாணங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்த குடும்பங்களும்;  இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களது நேரடி சந்ததியினரும் வடக்கு கிழக்கு மாகாணங்களை அண்டிய மாவட்டங்களில் (புத்தளம், அநுராதபுரம், பொலனறுவை, மொணராகலை அம்பாறை, பதுளை) அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து இடம்பெயர்ந்த குடும்பங்களும் இத்தொகைக்கணிப்பில் பங்குபற்ற முடியும்.

விஷேட செயலணியினால் தரப்பட்டுள்ள மாதிரியமைப்பைத் தழுவி தங்கள் விண்ணப்பப்படிவத்தைத் தயாரித்தல் வேண்டும். விண்ணப்பப்படிவத்தில் கோரப்பட்டுள்ள தகவல்களை உரிய முறையில் ப10ர்த்திசெய்து தற்போது தாங்கள் வசிக்கும் பிரதேச கிராம சேவை அலுவலரிடம்   2017/08/31 ஆம்    திகதி அல்லது அத்திகதிக்கு முன்னர் சமர்ப்பித்தல் வேண்டும்.

2017 செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள இத்தொகைக்கணிப்பிற்காக உங்கள் பிரதேசத்திற்கு வருகைதரும் தொகைக்கணிப்பீட்டாளர்களுக்கு உங்கள் ஒத்துழைப்பை வழங்குதல் வேண்டும்.

மேலதிக விபரங்களை கிராம சேவை அலுவலர், பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளருடன் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது  www.taskforcepidp.lk  என்ற இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். அன்றேல் கொழும்பு   காலி வீதி  இல 356 B   என்ற முகவரியிலுள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள்  அமைச்சு கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள வடமாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான செயலணியின் கருத்திட்ட  முகாமைத்துவ அலகின் கருத்திட்ட முகாமையாளரிடமும் அது குறித்து விசாரிக்கமுடியும்.

No comments

Powered by Blogger.