August 21, 2017

சம்மாந்துறை தந்த சன்மார்க்கத் தலைவர், அலியார் ஹஸரத்

(இன்றைய 21 நவமணி பத்திரிகை, வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்)

இலங்கையின் மூத்த உலமாக்களில் ஒருவரும், சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரியின் ஸ்தாபகத் தலைவரும், சம்மாந்துறை மஜ்லிஸுல் சூறாவின் தலைவரும், அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் முன்னாள் தலைவருமான சேகுத் தப்லீக் அலியார் ஹஸரத்தின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மிகவும் கௌரவமாக மதிக்கப்படும் தேவ்பந் அரபுக் கல்லூரியை உருவாக்கிய சன்மார்க்க அறிஞர்களுள் ஒருவரே மர்ஹும் எம். பி. அலியார் ஹஸரத்தாகும்.

தன் வாழ்வில் பெரும் பகுதியை சன்மார்க்கப் பணிகளுக்காக, இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக உழைத்த சகல தரப்பினராலும் மதிக்கப்படும் ஓர் உலமாவாகவே மர்ஹும் அலியார் ஹஸ்ரத் திகழ்ந்தார். இதனை ஞாயிறன்று சம்மாந்துறைக்கு திரண்டுவந்து தமது கௌரவத்தைத் தெரிவித்த ஆயிரக்கணக்கான மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அலியார் ஹஸரத் ஓர் ஆன்மீகத் தலைவராக மட்டுமன்றி, சமூகத் தலைவராகவும் ஒரு காலத்தில் அம்பாறை மாவட்ட மக்கள் நெருக்கடி நிலையை எதிர் கொண்ட போது அரசியல் தலைவராகவுமிருந்து முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்காக அரும்பணியாற்றினார்.

1990களில் இந்திய சமாதானப்படை இலங்கைக்கு வந்திருந்த போது கிழக்கு முஸ்லிம்கள் அவர்களால் எதிர் கொண்ட நெருக்கடிகளின் போது அலியார் ஹஸ்ரத் இந்திய அமைதிப்படை தளபதிகளோடு அவர்களது மொழியிலே பேசி இந்தியப் படையினரின் அட்டகாசங்களினால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படுவதனை தடுத்தமை அவரது சேவைகளில் பொன் எழுத்துக்களால் பதிக்கக் கூடியதாகும்.

இது தவிர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவரது அனுதாபச் செதியில் குறிப்பிட்டிருப்பது போன்று அலியார் ஹஸ்ரத் ஒரு சமாதானத் தூதுவராகச் செயற்பட்டுள்ளார். அதனை அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார். 

‘குறிப்பாக 1980களிலிருந்து கிழக்கில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளில் அலியார் ஹஸரத் ஒரு சமாதானத் தூதுவராகத் தொழிற்பட்டார். 

குறிப்பாக 1985 முதல் 1990 வரை நிகழ்ந்த முஸ்லிம்களுக்கெதிரான ஒவ்வொரு படுகொலைச் சம்பவத்திலும் அங்கு இன வன் முறைகள் நிகழ்ந்து விடாமல் தடுத்து நிறுத்தும் ஆற்றல் இவருக்கே இருந்தது. அது மட்டுமல்ல, அம்பாறை மாவட்டத்தில் இன சம நிலை குழம்பக் கூடிய எல்லா இடங்களிலும் அலியார் ஹஸரத் பிரசன்னமாகி சமாதானத்தை நிலை நாட்டுவதில் முன்னின்று பாடுபட்டார்.’

மறைந்த ஹஸரத் அலியாரின் சேவைக்கு இதுவொன்றே போதுமானது. அரசியல் தலைவர்கள் தம் பணியை செவதற்குத் தவறிய போது அப்பணியைச் செது மக்களுக்கு அவர் உதவியுள்ளார்.
நமது உலமாக்களில் பலர் தாம் பின்பற்றும் கொள்கைகளால் சமூகத்தின் எல்லோரதும் மதிப்பினை, கௌரவத்தைப் பெறத் தவறுகின்றனர். இதில் விதிவிலக்கானவராக அலியார் ஹஸரத் திகழ்ந்துள்ளார்.

மர்ஹும் ஹஸரத்திற்கு இலங்கையில் பாரம்பரிய முஸ்லிம் கிராமமான சம்மாந்துறை மண்ணை சமூக ரீதியாக தலை நிமிரச் செததில் பெரும் பங்குள்ளது.

மர்ஹும் அலியார் ஹஸரத்தின் மறைவு ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அலியார் ஹஸரத் போன்ற நேர்மையான தூரநோக்குடன் செயற்படும் உலமாக்கள், அறிஞர்களது தேவை சமூகத்துக்கு நிறையத் தேவைப்படும் நேரத்தில் அவர் இறைவனடி எதியுள்ளார்.
அன்னாரின் மறுமைக்காக பிரார்த்திப்பதோடு, அவரது பணிகளை முன்னெடுத்துச் செல்வதே அன்னாருக்குச் செயும் கடனாகும்.

2 கருத்துரைகள்:

அவருக்கு அல்லாஹ் பெரிய சுவர்க்கத்தை கொடுப்பானாக ஆமீன்

An Aalim with Simplicity and Humbleness . May Allah swt grant him Jannathul Firdouse. Aameen

Post a Comment