August 29, 2017

“தயவுசெய்து எங்களை காப்பாற்றுங்கள்" - கெஞ்சும் ரோஹின்யர்கள்


மியன்மாரின் ரகினே மாநிலத்தில் வன்முறை சூழலால் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சிக்கும் ஆயிரக்கணக்கான ரொஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷ் எல்லையில் காத்துள்ளனர்.

எனினும் இவ்வாறு தப்பி வந்த குறைந்தது 90 ரொஹிங்கியாக்களை பங்களாதேஷ் நிர்வாகம் கைது செய்து வலுக்கட்டாயமாக மியன்மாருக்கு திருப்பி அனுப்பியுள்ளது. அங்கு நீடிக்கும் வன்முறைகளில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மியன்மார் மற்றும் பங்களாதேஷை பிரிக்கும் இயற்கை எல்லையான நாப் நதியை கடக்க முயன்ற குறைந்தது 20 ரொஹிங்கியாக்கள் கடந்த ஞாயிறன்று தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக பங்களாதேஷ் எல்லை காவல் படை குறிப்பிட்டுள்ளது.

மேலும் 70 ரொஹிங்கியாக்களை கடந்த சனிக்கிழமை பங்களாதேஷ் திருப்பி அனுப்பி இருந்தது. மியன்மார் இராணுவம் எல்லை பகுதியில் இருக்கும் அகதிகள் மீது சூடு நடத்தியதை அடுத்தே அவர்கள் பங்களாதேஷுக்கு தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

மோசமான சூழலில் ஆயிரக்கணக்கான ரொஹிங்கிய அகதிகள் வாழ்ந்து வரும் குதுபலோங் அகதி முகாமுக்கு செல்லும் பாதையில் சுமார் நான்கு கிலோமீற்றர் பங்களாதேஷுக்கு உள்ளாக இந்த கிராமத்தினர் சிக்கியதாக உள்ளூர் பொலிஸ் தலைவர் அபுல் கயெர் குறிப்பிட்டார்.

“70 பேரும் கைது செய்யப்பட்டு பின்னர் எல்லை காவல் படையினரால் மியன்மாரை நோக்கி திருப்பி அனுப்பப்பட்டனர்” என்று கயெர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.

தம்மை மீண்டும் மியன்மாருக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அவர்கள் கெஞ்சியதாக பெயரை வெளியிட மறுத்த மற்றொரு பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எல்லை காவல் படையினரிடம் சிக்காமல் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் சுமார் 30,000 ரொஹிங்கியாக்கள் பங்களாதேஷின் அகதி முகாம்களுக்கு தப்பிவர முடிந்துள்ளது.

இவ்வாறான தற்காலிக முகாமை அடைந்த அகதிகள் தாம் சந்தித்த பயங்கர அனுபவங்கள் குறித்து அங்கிருக்கும் செய்தியாளர்களிடம் விபரித்துள்ளனர்.

70 வயதான முஹமது சபர் என்பவர் குறிப்பிடும்போது, “அவர்கள் மிக நெருக்கத்தில் இருந்து சுட்டதால் எனது காதுகள் இப்போது கேட்பதில்லை” என்றார். ஆயுதமேந்திய பெளத்த கும்பல் ஒன்று தனது இரு மகன்களை வயல் நிலம் ஒன்றில் வைத்து சுட்டதாக அந்த முதியவர் குறிப்பிட்டுள்ளார்.

“அவர்கள் இரும்பு கம்பிகள் மற்றும் கம்புகளுடன் வந்து எம்மை எல்லையை நோக்கி விரட்டினார்கள்” என்று 61 வயதான அமிர் ஹொஸைன் என்பவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டார். “தயவு செய்து எங்களை காப்பாற்றுங்கள். நாம் இங்கேயே தங்குகிறோம் அப்படி இல்லை என்றால் நாம் கொல்லப்படுவோம்” என்றும் அவர் கூறினார்.

மறுபுறம் பாதுகாப்பு கருதி சுமார் 4,000 முஸ்லிம் அல்லாத பொதுமக்கள் இராணுவத்தால் வெளியேற்றப்பட்டுள்ளனர். மோதல் இடம்பெறும் பகுதியில் தறுதலான தாக்கதல்களில் ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மியன்மார் இராணுவத்திற்கும் ரொஹிங்கிய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் இடம்பெற்று வரும் மோதல்களில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும் அதில் பெரும்பாலானவர்கள் கிளர்ச்சியாளர்கள் என்றும் அரச தரப்பு குறிப்பிட்டுள்ளது.

அரகான் ரொஹிங்கியா மீட்டுபு இராணுவம் என்ற ஆயுதக் குழுவே தாக்குதலை நடத்துவதாக மியன்மார் அரசு குற்றம்சாட்டுகிறது. இந்த ஆயுதக் குழு பொலிஸ் நிலையம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி பாதுகாப்பு படையினர் பலரையும் கொன்ற சம்பவத்தை அடுத்தே வன்முறை வெடித்துள்ளது.

முன்னர் அறியப்படாத ரொஹிங்கிய கிளர்ச்சிக் குழு கடந்த ஒக்டோபர் மாதமே வெளியுலகுக்கு தெரிய வந்தது. அந்த மாதம் ஏற்பட்ட மோதல்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்களாதேஷில் தஞ்சமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

மியன்மாரின் வறுமை கொண்ட பிராந்தியமான ரகினேவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரொஹிங்கியாக்கள் உள்ளனர். மியன்மார் பிரஜா உரிமை மறுக்கப்படும் இவர்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகளும் உள்ளன. ரொஹிங்கியா முஸ்லிம்களுக்கும் பெரும்பான்மை பெளத்தர்களுக்கும் இடையில் கடந்த காலங்களில் தொடர்ந்து மதக் கலவரங்கள் இடம்பெற்று வந்தன. 

4 கருத்துரைகள்:

பங்களாதேசம் மனிதாபிமானம் அற்ற காட்டுமிராட்டிகள் வாழும் சமூகம் போல. தங்கள் இன அகதிகளையே சுட்டு விரட்டுகிறார்கள்.

இது தான் முஸ்லிம் நாடுகளுக்கும் கிருஸ்தவ நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம். இந்தியாவும் 90களில் தமிழ அகதிகளை ஏற்றுக்கொண்டது.

அஜன் சும்ம இருந்த வாய்க்கு அவல் கிடைச்சிருக்கு. உமது இரத்ததிலும் கூட துவேசம் தெரிகிறதே.

எங்களது comment ஐ பரசுரிக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் அந்தோனி போன்ற இனவாதிகளுக்கு நன்றாக களம் அமுத்துக் கொடுக்கவும்.

Some years ago met some Myanmar brothers . They say Muslims living in Rangoon and other parts of Myanmar are living peacefully.
Roghinya Arakkan Muslims are facing these problems because they don't have citizenship in County.

Allah swt knows the best.

Post a Comment