August 19, 2017

நல்லாட்சியில் பொலிஸாரினால், பாதுகாக்கப்படும் மஹிந்தவின் அடிவருடி

-Azeez Nizardeen-

இலங்கையின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கேற்ப சிங்கள இனவாதம் அடிக்கடி அமிழ்வதும் மேலெழுவதுமாக இருந்து வருகிறது. சிறிது காலம் மறைந்திருந்த இனவாதிகள் இப்போது வெளியே தலைகாட்ட ஆரம்பித்திருக்கின்றார்கள்.
டேன் பிரியசாத் (இந்தப் பதிவிலுள்ள படத்தில் மஹிந்தவின் படத்தை சுமந்திருப்பவன்) என்பவனும், சாலிய ரணவக்க என்பவனும் இப்போது பகிரங்கமாகவே தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். 26ம் திகதி கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். மஹிந்தவின் ஆட்சியில் சிறுபான்மை சமூகத்திற்கு கிடைத்த அநீதியான அணுகு முறை கொஞ்சமும் குறைவில்லாமல் நல்லாட்சியிலும் நிகழ்ந்து வருகிறது.
வெல்லம்பிட்டிய சம்பவம் ஒன்றே இதற்கு சிறந்த சாட்சி. அந்த சம்பவத்தின் கதாநாயகனான டேன் பிரியசாத் என்ற இனவாதி சட்டத்தை துச்சமாக மதித்து செயற்பட்டதை யாரும் மறக்க மாட்டார்கள். இந்த இனவாதியின் செயல்களுக்கு ஒரு அங்கீகாரத்தை பொலிஸார் அவனுக்கு வழங்கியிருந்தனர்.
ஏற்கனவே பிணையில் இருக்கும் டேன்பிரியசாத் என்பவனை பொலிஸார் மிகவும் மரியாதையாக நடாத்தியதை நான் என் கண்ணாலேயே கண்டேன்.
10ம் திகதி அன்று எனது சகோதரியின்
மகள்களான குறித்த பெண் பிள்ளைகளுடன் முறைப்பாடு செய்வதற்காக வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் நான் அமர்ந்திரந்தேன்.
அப்போது மிகவும் துணிச்சலுடன் என்னை நோக்கி வந்த இனவாதி டேன் பிரியசாத் மிகவும் தைரியமாக என்னிடம் வந்து அச்சுறுத்தல் விடுக்கும் பாணியில் சமாதானமாக பிரச்சினையை முடித்துக்கொள்வோம் என்று கட்டளை பிறப்பித்தான்.
அவனது உத்தரவிற்கு அடிபணியாமல் நானும் எதிர்வினையாற்றினேன். நானும் கடுமையான தொனியில் அவனுக்கு பதிலளித்தேன்.
என் பதிலைக் கேட்டதும் வந்த வேகத்தில் பின்வாங்கினான். அவன் அதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. நாங்கள் பயத்தில் அவன் சொல்வதற்கு தலையாட்டுவோம் என்று தான் அவன் நினைத்திருந்தான்.
வெளியே சென்ற டேன் பிரியசாத் என்ற சிங்கள இனவாதி தொலைபேசி மூலம் பலரை பொலிஸுக்கு அழைப்பது எனக்குப் புரிந்தது. ஒர் அரைமணி நேரத்திற்குள் சுமார் 150 இனவாதிகளை அவன் பொலிஸ் நிலையத்தில் சேர்த்தான். 
இவனின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பொலிஸார் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
சம்பவம் இடம்பெற்ற 9ம் திகதி இரவு இரவு குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் இந்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்வதற்கு வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையம் சென்ற போது முறைப்பாடு செயபவர் மட்டும் உள்ளே போகலாம் வேறு யாரும் பொலிஸுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என் சட்டம் போட்ட பொலிஸார் நூற்றுக்கணக்காக வந்து குவியும் இனவாதிகளை கண்டு கொள்ளாமல் இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களோடு சிரித்து கதைத்து அவர்களை சுதந்திரமாக பொலிஸினுள் உலாவவுமிட்டனர்.
காலை 9 மணியளவில் கடமைக்கு பொலிஸுக்குள் வந்த நிலைய பொறுப்பதிகாரி தலைமறைவாகியே இருந்தார். அவரது அலுவலக கதிரை காலியாகவே இருந்தது.
இனவாதிகள் கூச்சலிட்டவாறு எமக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் பொலிஸார் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. நானும் தைரியமாக அவர்களை எதிர்கொள்ள ஆரம்பித்தேன்.
பொலிஸ் நிலயத்திற்குள்ளெயே நாங்கள் சுற்றிவளைக்கப்பட்டோம். அப்போது ஒரேயொரு பொலிஸ் காரர் வந்து இனவாதிகளை சமாதானப்படுத்துவது போல் நடந்து கொண்டான்.
ஆனால் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அந்தப் பக்கம் தலைகாட்டவேயில்லை.
ஒரு வீட்டுக்குள் அத்துமீறி பிரவேசித்து வீட்டில் இருந்த பெண்பிள்ளையை அச்சுறுத்தி வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை பறித்துச் சென்ற இனவாதிகளை பாதுகாக்கும் நோக்கில் ஒரு மோதலை உருவாக்கி எங்களையும் குற்றவாளிக்க கூண்டில் ஏற்றும் நடவடிக்கை ஒன்றுக்கே அவர்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
அதற்கான சந்தர்பத்தை நாங்கள் தவிர்த்துக்கொண்டோம். பொலிஸ் நிலையத்தில் இடம்பெறும் இந்த சம்பவங்களை இனவாதிகள் ஹிரு தொலைக்காட்யின் செய்தியாளர் மூலம் நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள்.
காலை 9.00 மணிக்கு முறைப்பாடு செய்ய சென்ற எங்களிடமிருந்து இரண்டு மணியளவிலேயே வாக்குமூலம் பெறப்பட்டது. அதன் பிறகும் எங்களை வெளியேறவிடாது இனவாதிகள் வெல்லம்பிட்டிய அவிஸ்ஸ்வெல்ல வீதியை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர். இதை ஒரு நாடளாவிய பிரச்சினையாக மாற்றுவதற்கு முயற்சி செய்தனர். பொலிஸாரோ மிகவும் மெதுவாக கருமமாற்றினர்.
11ம் திகதி நீதிமன்றிற்கு வழக்கு தாக்கல செய்த பொலிஸார் நீதிமன்றினால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். எவ்வித ஆதாரங்களுமின்றி இந்த பெண்பிள்ளைகளை ஏன் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தீர்கள் என்று பொலிஸாரை வினவிய நீதவான், டேன் பிரியசாத் என்ற நபருக்கு ஒரு வீட்டுக்குள் அத்துமீறி பிரவேசிக்க அதிகாரம் வழங்கியது யார் என்றும் கேள்வி எழுப்பினார்.
அது ஒரு கிரிமினல் குற்றம் என்றும் கூறிய நீதிபதி சரியான குற்றவாளிகளை இனம் கண்டு நீதிமன்றின் முன் ஆஜர்படுத்துமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். குற்றச்சாட்டுகளிலிருந்து பெண் பிள்ளைகளை விடுவிப்பதாகவும் அறிவித்தார்.
இறுதியாக நான் ஒரு விடயத்தை இங்கு சொல்ல வேண்டும். மஹிந்தவின் கள்ள ஆட்சியிலும், மைத்திரி ரணிலின் நல்லாட்சியிலும் சிறுபான்மை இனங்களுக்கான பிரச்சினைகளின் போது பொலிஸார் பெரும்பான்மை இனத்திற்கு ஆதரவாகவே செயற்பட்டு வருகின்றனர். எதிர்காலம் மிகப்பயங்கரமானது என்பதைய சமகால இனவாத செயற்பாடுகள் காட்டி நிற்கின்றன.
இதிலுள்ள குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் மஹிந்தவின் அடிவருடியான இந்த டேன் பிரியசாத் என்ற இனவாதி நல்லாட்சியின் காவல்துறையால் பாதுகாக்கப்படுகின்றான் என்பதே.
ஹஸ்புனல்லாஹ வநிஃமல் வகீல்

1 கருத்துரைகள்:

Allah ungalukku neediya aayulai tharuwaanaha?

Post a Comment