Header Ads



பாராளுமன்றத்தில் நடந்த அநாகரீக செயற்பாடு - முக்கியஸ்தர்கள் முறைப்பாடு

ஒன்றிணைந்த எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பிகளுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறையிடுவதற்கு, அரசாங்கத் தரப்பு முக்கியஸ்தர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என, தகவல் வெளியாகியுள்ளது. 

சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர், சபைக்குள் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட, ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர்களுக்கு எதிராகவே, இவ்வாறு முறைப்பாடு செய்யப்படவுள்ளது.  

கடந்த 28ஆம் திகதியன்று, சபையில் ஏற்பட்ட கூச்சல் குழப்பம் காரணமாக, சபை நடவடிக்கைகள் ஓகஸ்ட் 4ஆம் திகதி வரையிலும், சபாநாயகர் கரு ஜயசூரியவால் ஒத்திவைக்கப்பட்டன.  

எரிபொருள் விநியோகத்தை, அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தி, ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மீதான வாக்கெடுப்பு, அன்றையதினம் மாலை நடத்தப்படவிருந்தது. இந்நிலையிலேயே, சபையை கொண்டு செல்லமுடியாத வகையில், சபைக்குள் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.  

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிக்காட்டியமையால், சபை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.  

எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த எம்.பிக்கள், நகைச்சுவையான சபையமர்வை அன்றையதினம் நடத்தியுள்ளனர்.  

அதிலோர் உறுப்பினர், உறுப்பினர்களைச் சபைக்குள் அழைப்பதற்கான மணியோசை எழுப்பியுள்ளார். மற்றோர் உறுப்பினர் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளார். இன்னும் இரண்டொரு உறுப்பினர்கள், அரசாங்கத்தை விமர்சித்து உரையாற்றியுள்ளனர்.  

இதேவேளை, ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் மற்றுமொரு உறுப்பினர் அமர்ந்ததையடுத்து, ஏனைய உறுப்பினர்கள் கைகளை தட்டி, ஆரவாரம் செய்துள்ளனர் என்றும் அறியமுடிகிறது. 

இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும், அவ்வாறு நடந்துகொண்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவேண்டுமென்றுமே, அரசாங்க தரப்பு முக்கியஸ்தர்கள் கோரிக்கை விடவுள்ளதாக அந்த தகவல் தெரிவித்துள்ளது.   

No comments

Powered by Blogger.