Header Ads



ஹஜ் செல்பவர்களுக்காக மாபோலை - மினுவாங்கொடை பள்ளிவாசல்களில் ஏற்பாடுகள்..!!

புனித மக்காவுக்கு புனித ஹஜ் கடமையை மேற்கொள்ளச் செல்லும் யாத்திரிகர்களின் வசதி கருதி, மினுவாங்கொடை டவுன் ஜும்ஆப் பள்ளிவாசலிலும், வத்தளை - மாபோலை ஜும்ஆப் பள்ளிவாசலிலும் இவ்வருடமும் பல்வேறு ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

   இதன்பிரகாரம், மினுவாங்கொடை வழியாக கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய,  வடமத்திய, வடமேல்  மற்றும் சப்ரகமுவ  மாகாணங்களைச் சேர்ந்த ஹஜ் யாத்திரிகர்கள், மினுவாங்கொடை டவுன் ஜும்ஆப் பள்ளிவாசலில் இரவு வேளைகளில் தங்கிச் செல்வதற்கான  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

   தென்  மாகாணம் மற்றும் கொழும்புப் பிரதேசங்களிலிருந்து கட்டுநாயக்க வரும் யாத்திரிகர்கள், மாபோலை ஜும்ஆப் பள்ளிவாசலில் தங்கிச் செல்வதற்கான  ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

   ஹஜ் யாத்திரைக்குச் செல்லும் ஆண், பெண் யாத்திரிகர்கள் இரு பாலாருக்கும் வெவ்வேறான இடங்கள் ஒதுக்கிக்  கொடுக்கப்பட்டுள்ளன.

    இவர்களுக்கு தொழுகை, இஹ்ராம் உடை அணிதல்,  வாகனத் தறிப்பிட வசதிகள் மற்றும் பொது  வசதிகள் என்பன இலவசமாகச் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர். 

   இதேவேளை, பள்ளிவாசல்களில் தங்கிச் செல்லும் ஹஜ் யாத்திரிகர்கள,  அயலவர்களுக்கு எவ்வித இடைஞ்சல்களும் ஏற்படாதவண்ணம்,  பொது சுகாதாரத்தன்மையை கருத்தில் கொண்டு,  இயன்றளவு சுத்தம் சுகாதாரத்தைப் பேணி கண்ணியத்துடன் நடந்து கொள்ளுமாறும், நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

( ஐ. ஏ. காதிர் கான் )

No comments

Powered by Blogger.