Header Ads



சர்வதேச கவனத்தை ஈர்த்த AMM சௌபாத், ஜெனீவாவிற்கு பறக்கிறார்..!

– அனஸ் அப்பாஸ் –

செல்வன் ஏ எம் எம் சௌபாத் மூன்று பாடசாலைகளுக்குச் சொந்தக்காரர். தரம்-5 வரை GMMS உம், பின்னர் 3 வருடங்கள் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயமும், இறுதியாக கல்முனை ஸாஹிராக் கல்லூரியும், இவரை செதுக்கியது எதற்காக? அதுதான் இதற்காக.

குறைந்த மின்சக்தியில் இயங்கும் மா அரிக்கும் இயந்திரத்தை அடுத்து, சர்வதேச கவனத்தை ஈர்த்த கண்டுபிடிப்பாக இவர் உருவாக்கியது “சூரிய சக்தியில் இயங்கும் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரம்”. இது நிறையிலும் (பாரம்) குறைந்தது.

ஒரு இளம் கண்டுபிடிப்பாளருக்கு முதலில் குடும்பமும், சிறுவயது முயற்சிகளும், பாடசாலை சமூகமும், தேடல்களுமே பாடசாலைக் காலத்திலேயே தனது அடைவை வெளிக்காட்ட உறுதுணையாக இருப்பதை கடந்த பல “மீள்பார்வை” பத்திரிகையின் இளம் சாதனையாளர் பகுதிகளில் வாசித்திருப்பீர்கள். அர்ப்பணிப்புமிக்க வியாபாரியான அப்துல் மஜீத் அவர்களின் மகனும், 3 பேருக்கு சகோதரரருமான சௌபாத்தின் கதையும் அதையே பிரதிபலிக்கின்றது. இயந்திரமாக இதுவரை இல்லாத, மிகையாக மனித வழுவை உறிஞ்சாத ஒரு பிரயோசனமிக்க தயாரிப்பை தான் செய்திருக்கின்றேன் என்ற திருப்தி இம்மாதம் க.பொ.த உயர்தர பரீட்சையை எழுதவுள்ள சௌபாத்திடம் தெரிகின்றது அல்ஹம்துலில்லாஹ்.

இத்துடன் நின்றுவிடவில்லை சௌபாத். க.பொ.த. உயர்தர பரீட்சைக்குப் பின் என்ன கண்டுபிடிப்பை மேற்கொள்வார் என்றும் சொல்கிறேன் கேளீர்! இலங்கையின் ஏற்றுமதி வணிகத்தில் அதிகம் செல்வாக்கு செலுத்தும் ஒன்றே “கருவாப்பட்டை”. தற்போது கைகளைப் பாவித்தே கருவாவை பிரித்தெடுக்கின்றனர். கருவாவை பிரித்தெடுக்கும் இயந்திரம் ஒன்றை தயாரிப்பதே இவரின் அடுத்த டார்கட் (Target)

தேசிய ரீதியாக பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற “Innova minds – 2017” போட்டியில் 21 பேர் தெரிவாகினர். இதில் semi final இற்கு தெரிவான 7 பேரை ஜெனீவா அல்லது இந்தோனேசியாவுக்கு அழைத்துச் செல்கின்றனர். அந்த 7 பேரில் சௌபாத்துடன் இன்னொரு முஸ்லிம் மாணவனும் இலங்கையில் இருந்து தெரிவாகி இருக்கின்றனர்.

உள்நாட்டில் இவருக்குக் கிடைத்த அங்கீகாரங்களை பட்டியலிட்டால், இலங்கை கண்டுபிடிப்பாளர் ஆணைக்குழு, சாய்ந்தமருது விதாதா வள நிலையம், “The Talent” போட்டி மூலம் தேசிய இளைஞர் கழகம், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் தேசிய மட்ட புத்தாக்கப் போட்டி, இலங்கை புத்தாக்க ஆணைக்குழுவின் தேசிய மட்ட போட்டி, இலங்கை பொறியியலாளர் நிறுவகத்தின் போட்டி என்பன இவரை கௌரவப்படுத்தி இருக்கின்றன, பரிசில்களும், சான்றிதல்களும் வழங்கி இருக்கின்றன.

தனது பெற்றோருக்கும், சகோதரர்களுக்கும், ஊக்கமூட்டிய பாடசாலை அதிபர் M.S. முஹம்மட், புத்தாக்குனர் கழக பொறுப்பாசிரியர் ஏ. ஆதம்பாவா அவர்களுக்கும், அனைத்திற்கும் வழிகாட்டிய வல்ல இறைவனுக்கும் நன்றி சொல்லும் சௌபாத், அறிவியலில் மட்டுமன்றி அறிவிலும் தான் கெட்டி என்பதை நிறுவ தினமும் 1-2 மணித்தியாலங்கள் புத்தக வாசிப்பிலும் ஈடுபடுகின்றார். சர்வதேச புத்தாக்குனர் பலப் பரீட்சைக்காக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி ஜெனீவாவிற்கு பறக்கின்றார் சௌபாத்.

No comments

Powered by Blogger.