Header Ads



விஜேதாசவுக்கு எதிராக 70 Mp கள் கையெழுத்து - 3 பௌத்த பீடங்கள் எதிர்ப்பு

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் இதுவரை 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு தொடர்பாக சர்ச்சைக் குரிய கருத்தை வெளியிட்டு, அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை காப்பாற்றத் தவறிவிட்டார் என்று குற்றம்சாட்டி, ஐதேகவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களால், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இதுவரை ஐதேகவின் 70 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை நாளை நடைபெறவுள்ள ஐதேகவின் செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நீதி அமைச்சர் பதவியில் இருந்து விஜேதாச ராஜபக்ச விலக வேண்டும் அல்லது அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், ஐதேகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

முன்னைய ஆட்சியாளர்களுக்கு எதிரான விசாரணைகளை இழுத்தடித்து வருவதாகவும், விஜேதாச ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

அதேவேளை, விஜேதாச ராஜபக்சவை பதவி நீக்கம் செய்வதற்கு, மூன்று பௌத்த பீடங்களும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

அத்துடன், விஜேதாச ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்காக வாக்களிப்போம் என்று மகிந்த ராஜபக்சவும் அவரது தலைமையிலான கூட்டு எதிரணியும் கூறிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.