Header Ads



SLTJ யின் கோரிக்கை, சட்டமா அதிபரை தெளிவுப்படுத்த குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அறிவுறுத்தல்

பௌத்த மதத்தை இழிவுப்படுத்தியமை தொடர்பில் மன்னிப்புக் கோருவதற்கு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தயாரென அவ்வமைப்பின் முன்னாள் செயலாளர் ராசிக் உள்ளிட்ட சந்தேக நபர்கள் அறுவரும், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். 

இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில், நேற்று (19) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே, மேற்கண்டவாறு அறிவிக்கப்பட்டது.  

“முஸ்லிம் உரிமைகளைப் பாதுகாப்போம்’ என்ற இறுவட்டின் மூலம் பௌத்த மதத்தை இழிவுப்படுத்தியதாகத் தெரிவித்து சொரனாதொட்ட சந்திரரத்ன தேரர் தாக்கல் செய்திருந்தார். 

இதேவேளை, சந்தேகநபர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில், சட்டமா அதிபரை தெளிவுப்படுத்துமாறு கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.  

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் , சிரேஷ்ட சட்டத்தரணிகளான மைத்ரி குணரத்த, சிராஸ் நூர்தீன் ஆகியோருடன் சட்டத்தரணிகளான நுஸ்ரா ஸருக், அன்ஜலோ பெனடிக், வசீம் அக்ரம், ரசீன் சுலைமான், மற்றும் இஸ்மாயீல் முஹம்மத் ஆகியோர் அடங்கிய குழுவினர் மன்றில் ஆஜராகினர். 

தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னால் செயலாளர் சகோ. அப்துல் ராசிக் ஆற்றிய உரையொன்றில், பௌத்த மதத்தை நிந்தனை செய்தார் என்று கூறி பொது பல சேனா சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.  

குறித்த உரையில் புத்தர் தொடர்பில் சகோ. அப்துல் ராசிக் கூறிய கருத்து தவறுதலாக சொல்லப்பட்டது. திட்டமிட்டு பேசப்பட்டது அல்ல என்பதை உரை நிகழ்த்தப்பட்டு ஒரு சில நாட்களுக்குள்ளாகவே ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பகிரங்க அறிவித்தல் விடுக்கப்பட்டது. 

இதேவேளை வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற ஒவ்வொரு தவணையிலும் ஜமாஅத்தின் சட்டத்தரணிகள், தவறு இடம்பெற்றுவிட்டதாக​வே மன்றின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தனர்.  

ஆகையால், பௌத்த மதத்தை இழிவுப்படுத்திய அந்த வசனம், தவறுதலாக சொல்லப்பட்டுவிட்டது என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு குறித்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்ற கோரிக்கையை, அந்த சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மீண்டும் வலியுறுத்தினர். இதனையடுத்தே, கொழும்பு பிரதான நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.  

No comments

Powered by Blogger.