Header Ads



பயங்கரவாத தலைவன், பாக்தாதி கொல்லப்பட்டான் - IS அறிவிப்பு

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்- பாக்தாதி இறந்துவிட்டதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

அபு பக்கர் அல்- பாக்தாதி இறந்த தகவலை ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தளபதிகள் மூலம் அறிந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் தலைவர் ரமி அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளரிடம் அவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: இஸ்லாமிய தேசத்தின் அமீர் என்ற தன்னை அறிவித்துக் கொண்ட அபு பக்கர் அல்- பாக்தாதி இறந்துவிட்டார். சிரியாவில் பெரும்பாலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தெயீர் எஸ்úஸார் மாகாணத்தில் உள்ள அந்த இயக்கத்தின் தளபதிகள் இந்தத் தகவலை செவ்வாய்க்கிழமை உறுதி செய்துவிட்டனர். ஆனால் அல்- பாக்தாதி எப்போது இறந்தார் என்பதையோ, எப்படி இறந்தார் என்பதையோ அறிந்து கொள்ள முடியவில்லை. அந்த மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்னால் அவரது நடமாட்டத்தைக் கண்டவர்கள் உள்ளனர். ஆனால் சமீபத்தில் அவரை யாரும் பார்க்கவில்லை என்றார் அவர்.

அமெரிக்கா நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் அவர் இறந்துவிட்டதாக ஓராண்டுக்கு முன்னால் தகவல் வெளியானது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. இறக்கவில்லையென்றாலும் கூட, அந்தத் தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. சிரியாவில் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு எதிராக ரஷியா கடந்த பல மாதங்களாக வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. அப்படி நிகழ்த்தப்பட்ட ஒரு தாக்குதலில் அல்- பாக்தாதி பலியானதாகவும் தகவல் வெளியானது. அல்- பாக்தாதியைப் பிடித்துத் தருபவர்களுக்கு 2.5 கோடி டாலர் (சுமார் ரூ. 162 கோடி) பரிசுத் தொகை அளிப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

இராக்கின் மொசூல் நகரை கடந்த 2014- ஆம் ஆண்டு ஐ.எஸ். கைப்பற்றியதும், இஸ்லாமிய தேசமான கலீஃபா அமைந்துவிட்ட தாக அந்நகரிலுள்ள பிரபல அல்- நூரி மசூதியிலிருந்து அல்- பாக்தாதி அறிவித்தார். மொசூல் நகரைத் தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து இழக்கும் தருவாயில், பயங்கரவாதிகள் அந்த மசூதியை வெடிகுண்டுகள் வைத்து தகர்த்தனர்.

அதையடுத்து, மொசூல் நகரை ஐ.எஸ். இழந்த ஓரிரு நாட்களிலேயே அந்த இயக்கத்தின் தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தியும் வெளியாகியிருக்கிறது. அந்த பயங்கரவாத இயக்கத்துக்கு இது பேரிடியாகவே இருக்கும். அதே சமயத்தில், உலகை அச்சுறுத்தி வரும் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடி வருவோருக்கு இந்தச் செய்தி இரட்டை இனிப்புள்ளதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.


No comments

Powered by Blogger.