Header Ads



IS தீவிரவாதிகளுடன் இணைந்திருந்த 16 வயது ஜெர்மனி சிறுமி பிடிபட்டார்


வீட்டை விட்டு வெளியேறி இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவில் இணைந்த 16 வயது ஜெர்மனி சிறுமி ஒருவர் மொசூல் நகரில் இருந்து ஈராக் இராணுவத்திடம் பிடிபட்டுள்ளார். அவர் ஸ்னைப்பர் தாக்குதல்தாரியாக செயற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஐ.எஸ்ஸிடம் இருந்து மொசூலை மீட்ட ஈராக் படை அந்த நகரின் நிலத்தடி சுரங்கம் ஒன்றில் இருந்து மேலும் நான்கு ஜெர்மனி பெண்களுடன் லின்டா வென்சல் என்ற இந்த சிறுமியும் பிடிபட்டுள்ளார்.

இடிபாடுகளுக்கு கீழ் இருந்த இந்த சிறுமியை ஈராக்கிய படையினர் சூழ்ந்திருக்கும் படங்கள் சமூகதளங்களில் வெளியாகியுள்ளன. அதில் அந்த சிறுமி உடலெங்கும் தூசுபடிந்த நிலையில் பயந்த முகத்துடன் காணப்படுகிறார்.

இந்த சிறுமி தொடர்பில் ஜெர்மனி அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஜெர்மனியின் பல்ட்ஸ்னிட்ஸ் நகரில் கடந்த ஆண்டு காணாமல்போன அதே சிறுமியா இவர் என்பது குறித்து அதிகாரிகள் உறுதிப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

ஜெர்மனியின் 930 பேர் வரை ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் குழுவில் இணைந்திருப்பதாக அந்நாட்டு உளவுப்பிரிவு கணித்துள்ளது. இவர்களில் 20 வீதமானவர்கள் பெண்களாவர். 

No comments

Powered by Blogger.