Header Ads



ஜனாதிபதி - மகாநாயக்க தேரர்கள் சந்திப்பில் என்ன பேசப்பட்டது..?

புதிய அரசியலமைப்பின் மாதிரி சட்டமூலத்தை தயாரிப்பதாயினும் அது தொடர்பாக மகா சங்கத்தினருக்கு தெரியப்படுத்தி அவர்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று (06) பிற்பகல் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினருடன் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக எந்தவொரு இறுதி ஆவணமும் இதுவரை தயாரிக்கப்படவில்லை என வலியுறுத்திய ஜனாதிபதி, புதிய அரசியலமைப்பு பற்றிய கலந்துரையாடல் ஒன்று தற்போது நாட்டில் நடைபெறுகிறது என்றும்,அரசினால் அத்தகைய சட்டமூலமொன்று தயாரிக்கப்படுமாயின் நாட்டின் எதிர்கால நன்மை மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பாக ஆழமாக ஆய்வுசெய்யப்பட்டதன் பின்னரே அது தயாரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் சமயம் தொடர்பாக மகா சங்கத்தினர் தமது கருத்துக்களையும்,ஆலோசனைகளையும் இக் கலந்துரையாடலின்போது முன்வைத்ததுடன், அவை தொடர்பான முன்மொழிவொன்றையும் ஜனாதிபதி கையளித்தனர்.

சியம் மகா நிக்காயவின் மல்வத்து பிரிவின் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல மகாநாயக்க தேரர், அஸ்கிரி பிரிவின் வரக்காகொட ஶ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரர், ராமஞ்ஞ நிக்காயவின் நாபான பேமசிறி மகாநாயக்க தேரர் உள்ளிட்ட பெருந்தொகையான மகா சங்கத்தினர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ, மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.