July 02, 2017

இளைஞர்களையும் மிரட்டும் நீரிழிவு

உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கைமுறை, ஜங்க் ஃபுட், பருமன் போன்ற காரணங்கள் ஒன்றைத்  தொட்டு மற்றொன்றைத் தொடர்ந்து நீரிழிவுக்குக் காரணமாவது அனைவரும் அறிந்ததே. பரம்பரைச் சொத்து போல வருவது மற்றொரு பிரதான காரணம். நீரிழிவு குறித்த ஆராய்ச்சி வாய்ப்புகள் விசாலமாகி வரும் இச்சூழலில், அடுத்தக்கட்டம் எதை நோக்கிச் செல்கிறது? அதுதான் - நீரிழிவைத் தடுக்கும் வழிமுறைகள்!

ஐம்பது வயது தாண்டியோருக்கே வரும் என்று கருதப்பட்ட நீரிழிவானது, இன்று 30 வயது இளைஞர்களையும் விட்டுவைக்கவில்லை. காரணம்... அவர்களின் அதீத மன அழுத்தம், உணவில் அறிந்தும் அறியாமலும் எடுத்துக்கொள்கிற அதிக சர்க்கரை மற்றும் உடற்பயிற்சியில் நாட்டமின்மை.

அதீத தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், பார்வைக் குறைபாடு, நன்றாகச் சாப்பிட்டும் எடை குறைதல், தூங்கி வழிதல், சோம்பலாக உணர்தல், காயமோ, புண்ணோ ஆறுவதற்கு நீண்டகாலம் பிடித்தல் போன்ற நீரிழிவு அறிகுறிகளில் ஒன்றோ, பலவோ இருந்தால், எந்த வயதினராக இருந்தாலும், உடனடியாக மருத்துவ ஆலோசனை அவசியம்.

குளுக்கோஸ் தாங்குதிறன் குறைபாடு என்கிற பிரச்னைதானே நீரிழிவின் முதல் வாசல். இதை ஆரம்பத்திலேயே அறிந்து சரிசெய்ய முடிந்தால், நீரிழிவு என்கிற குறைபாட்டின் நீண்ட கால விளைவுகளைத் தடுக்க முடியும்தானே?இதற்கு என்ன செய்ய வேண்டும்?

எதிர்காலத்தில் இவரை நீரிழிவு தாக்கக்கூடும் என்பதற்குரிய அறிகுறிகளோடு இருப்பவர்களை அடையாளம் காண்பதுதான் முதல் வேலை. எந்த வயதுக்காரராக இருந்தாலும் பரவாயில்லை. அவரது பி.எம்.ஐ. அளவு 25-ஐ தாண்டிவிட்டதா? பிடியுங்கள் அவரை! அடுத்த சோதனை அவருக்குத்தான். சில குறிப்பிட்ட இன மக்களை நீரிழிவு அதிகம் தாக்குகிறது.

உதாரணம், பிலிப்பைன்ஸ் மக்கள். அதுபோன்ற நீரிழிவுக்கு உகந்த இனத்தைச் சேர்ந்தவரா அவர் என்பதை அறிய வேண்டும். அதிலிருந்து மீண்டு வெளியே வந்தாலும், இருக்கவே இருக்கிறது அடுத்த கேள்வி. அவரது குடும்ப வரலாற்றில் நீரிழிவு இருக்கிறதா? அவர் பெண்ணாக இருந்தால், கர்ப்பகால நீரிழிவுக்கு உள்ளாகி இருந்தாரா? இப்படி எல்லா கேள்விகளுக்கும் அவரால் ‘இல்லை இல்லை’ என்று பதில் கிடைத்தால், பிரச்னை இல்லை என்று விட்டுவிடலாம், ‘வெயிட்டைக் குறைங்க பாஸ்’ என்று சொல்வதோடு!

`ஆமாம்’ ஆசாமிகளை என்னதான் செய்வது? ஆண்டுதோறும் அவர்களைப் பரிசோதிக்க வேண்டும். இந்தப் பட்டியலில் 45 வயது தாண்டிய அனைவருமே சுய விருப்பத்தோடு இணைந்துகொள்வதே நல்லது.

குளுக்கோஸ் தாங்குதிறன் சோதனையானது இவர்களுக்கு நீரிழிவு அல்லது நீரிழிவு தாக்கும் அபாயம் எந்த அளவு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தி விடும். HbA1c என்கிற (இரண்டு மாத காலகட்டத்தில் நமது உடலில் குளுக்கோஸ் செயல்பாடு அறிதல்) சோதனையையும் மேற்கொள்ளலாம். HbA1c சோதனை முடிவு 5.7- 6.4க்குள் இருந்தால், `வராதீங்க வராதீங்க... கோட்டிலேயே நிக்கறீங்க இப்போ...

கோட்டைத் தாண்டி வந்திட்டீங்கன்னா வாழ்நாள் உறுப்பினர்தான்... உஷாரா அந்தப் பக்கம் போயிடுங்க’ என்றுஎச்சரிக்கலாம்!திரும்பத் திரும்பச் சொல்வதுபோலவே, டயட், உடற்பயிற்சி உள்பட வாழ்க்கை நடைமுறைகளில் கவனம் செலுத்துவது ஒன்றே நீரிழிவுக்குள் விழாமல் பலரையும் காக்கக்கூடிய எளிய வழி. நிறைய காய்கறிகள் மிக நல்லது. சர்க்கரையும் மதுவும் புகையும் கூடவே கூடாது. அவ்வளவுதானே!

நீரிழிவு என்கிற கோட்டுக்குள் ஏற்கனவே வந்துவிட்டவர்களுக்கு, நீரிழிவைத் திறம்பட நிர்வகிக்க, லைஃப்ஸ்டைல் மாற்றங்களும் மருத்துவ ஆலோசனைகளும் உள்ளன. கோட்டுக்கு அந்தப் பக்கம் இருப்பவர்களுக்கு இதுபற்றிய கவலை இல்லை. ஆரோக்கிய வாழ்வை அப்படியே தொடர்ந்தாலே போதும். கோட்டிலேயே நிற்கிறவர்களுக்கு இன்று பெரும் பிரச்னை. அவர்கள்தான் அதீத கவனத்தோடு இருக்க வேண்டும்.

மக்கள்தொகைப் பெருக்கம் போலவே அதிகரித்து வரும் நீரிழிவாளர் தொகையில் இடம்பிடித்துவிட ஆசைப்படக்கூடாது!ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்வதன் வாயிலாக, நிச்சயமாக நீரிழிவை பல ஆண்டுகள் தள்ளிப்போட முடியும். இதயம் உள்பட பல்வேறுஉறுப்புகளைப் பாதுகாக்க முடியும்.

நிரூபிக்கப்பட்ட ஓர் அறிவியல் உண்மை இது... பருமனாக இருக்கிறவர்கள் தங்கள் எடையில் 5-10 சதவிகித அளவைக் குறைத்தாலே, நீரிழிவை சில ஆண்டுகளுக்கு எட்டிப்பார்க்காமல் செய்து விடலாம். அடுத்ததாக... சுறுசுறுப்பாகச் செயல்படுதல். நம் எல்லோராலும் செயல்படுத்தக்கூடிய விஷயங்களான எடை குறைப்பு, சுறுசுறுப்பு ஆகிய இரண்டும் காலம்காலமாக நீரிழிவை எதிரியாகவே பாவிக்கின்றன. ஆகவே, இவ்விரண்டையும் நமக்குத் துணையாக்க மறக்க வேண்டாம்!

நீரிழிவு டேட்டா

அமெரிக்காவில் 17 சதவிகித குழந்தைகள் மற்றும் டீன் ஏஜ் நபர்கள் (10-19 வயது) பருமனாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோரை நீரிழிவு தாக்கும் அபாயம் உள்ளது. ஃபாஸ்ட் ஃபுட் உள்பட பலவிதமான அமெரிக்க பாணியை கடைப்பிடிக்கும் இந்தியா போன்ற நாடுகளிலும் குழந்தைகள் பருமனும், அது சார்ந்த நீரிழிவுப் பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன.

0 கருத்துரைகள்:

Post a Comment