Header Ads



அமைச்சர்களின் சொகுசுக்காக கோடிக்கணக்கான, நிதியை ஒதுக்குவது வருந்தத்தக்கது

நாட்டு மக்கள் உண்பதற்கு வழியில்லாமல் கஷ்டப்படுகின்றனர். ஆனால் அரசாங்கம் அமைச்சர்களின் சொகுசு வாழ்க்கைக்காக கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளமை வருந்தத்தக்கது என மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்றைய தினம் ஆசீர்வாதம் பெறுவதற்காக மகாநாயக்க தேரர்களை சந்தித்திருந்தார்.

இதன் போது அவர் தன்னைக் கைது செய்யத் திட்டமிடுவதாக தெரிவிக்கப்படும் செய்தி குறித்தும் தேரர்களிடம் தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாட்டு மக்கள் உண்பதற்கு வழியில்லாமல் கஷ்டப்படுகின்றனர். தேங்காய் ஒன்றின் விலை 70 ரூபாவாகவும், அரிசி ஒரு கிலோ 100 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

இது பணம் படைத்தவர்களுக்கு பிரச்சினையல்ல. அன்றாடம் தேடி உண்பவர்களுக்கே பிரதான பிரச்சினையாகும்.

இதேவேளை, நாட்டில் மக்கள் முகம்கொடுத்துள்ள சுகாதாரப் பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. பல்வேறு பிரச்சினைகள் மக்களது வாழ்வாதாரத்தைப் பாதித்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையிலேயே அரசாங்கம் நேற்றும் நாடாளுமன்றத்தில் பல கோடி ரூபா குறைநிரப்புப் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மக்கள் இவ்வளவு தூரம் கஷ்டத்தின் மத்தியில் வாழ்ந்தாலும் அரசாங்கம் அது குறித்து கவலை கொள்ளாமல் அமைச்சர்களின் சொகுசு வாழ்க்கைக்காக கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளமை வருந்தத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை புனர் நிர்மாணம் செய்தல், அமைச்சர்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்தல் போன்ற விடயங்களுக்கு மேலதிக நிதியை வழங்குமாறு குறைநிரப்பு பிரேரணை ஒன்று நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.