Header Ads



'முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் ஊடாக, அவசர காலத்தை கொண்டுவர முயல்கின்றார்கள்'

“வடமாகாண முதலமைச்சர் மீள் இணக்கத்தை ஏற்படுத்தாது, தனி நாட்டு கோரிக்கைக்கே தூபம் இடுகின்றார். வடக்கு - தெற்கு மக்கள் பிரிவினை இல்லாமல் செய்து, தேசிய ஐக்கியத்தை  கட்டியெழுப்பவே நாம் முற்படுகின்றோம்” என, லங்கா சமஜவாய கட்சி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

யாழ். ஊடக அமயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

“சிங்களமும் தமிழும் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கவேண்டும். பொருளாதார அழிவு ஏற்பட காரணம் மக்கள் மீதான போரே ஆகும். தமிழ் மக்களின் பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும். மக்கள் ஐக்கியமாக வாழ வேண்டும்.

இந்த பிரச்சினையைத் தீர்ப்பதாக சொன்ன அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்களைக் கடந்து விட்டன. அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தையும் இதுவரை முன் வைக்கவில்லை. பழைய யாப்பில் உள்ள பௌத்தத்துக்கான அந்தஸ்து இல்லாமல் போய்விடும் என பௌத்தர்கள் கவலையடைந்துள்ளனர்.  

“இவர்களின் இத்தகைய செயற்பாடுகளினால், வெளிநாடுகள் எங்கள் நாட்டின் நீதி பரிபாலனம் முதல் அனைத்திலும் தலையீடு செய்கின்றன. யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்கள் தொடர்பிலும் அரசாங்கமே குற்றம் சாட்டப்பட்டது.  

“இங்கே தனிநாட்டு கோரிக்கை வலு பெறுகின்ற நிலையில், எவ்வாறு யாப்பு திருத்தத்தை முன்னெடுக்க போகிறார்கள்.   வடமாகாண முதலமைச்சர் மீள் இணக்கத்தை ஏற்படுத்தாது, தனி நாட்டு கோரிக்கைக்கே தூபம் இடுகின்றார். வடக்கு - தெற்கு மக்கள் பிரிவினை இல்லாமால் செய்து, தேசிய ஐக்கியத்தை கட்டி யெழுப்பவே நாம் முற்படுகின்றோம். எங்கள் தேசத்தில் சகல இன மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்.   

“வெளிநாட்டு பல்தேசிய கம்பனிகளுக்கு நாட்டை விற்கும் அளவுக்கு இந்த அரசாங்கம் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ளது. அந்நியர்கள் எமது சொத்தை சூறையாடுகின்றார்கள். மக்கள் பயன்படுத்தவும் பொருட்களை தவிர துறைமுகங்கள், எண்ணெய் குதங்கள் என அனைத்தையும் வெளிநாடுகளுக்கு விற்கின்றனர்.  

“அமெரிக்காவின் இராணுவ முகாமாக திருகோணமலை துறைமுகம் மாறியுள்ளது. பொருளாதரத்தில் அமெரிக்கா கம்பெனியில் ஆக்கிரமித்துள்ளது. அதனூடாக, நாம் அமெரிக்காவின் காலணித்துவத்தின் கீழ் வந்துள்ளோம்.  

“அந்நிய நலனுக்கு எதிராக, தமிழ், சிங்கள, முஸ்லிம் என இன வேறுபாடின்றி போராட முன் வர வேண்டும்.  

இந்த அரசாங்கத்திடம் தெளிவான கொள்கை இல்லை. இன்று ஒரு திட்டம். நாளை ஒருதிட்டம் என இருப்பதனால், முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடு செய்ய முன் வருகிறார்கள் இல்லை.பொய்யான வாக்குறுதியே காணப்படுகின்றது.   

“83 ஜூலை தமிழ் மக்கள் மீதான வன்முறை மீண்டும் ஏற்படக்கூடாது. அதற்காக தேசிய இன பிரச்சினையை தீர்ப்பார்கள் என்றால் அதனையும் தீர்க்கவில்லை.   

“ஜனநாயகத்தை மேம்படுத்த முயலாமல், தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் ஊடாக அவசர காலத்தை கொண்டு வர முயல்கின்றார்கள்” என்றார். 

No comments

Powered by Blogger.