Header Ads



முஸ்லிம் சேவையின் பிரச்சினைகளை தீர்க்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - சுதர்ஷன குணவர்தன


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தனவை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகள் சந்தித்து விஷேட பேச்சுவார்த்தை நடத்தினர்.

கூட்டுத்தாபன தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இலங்கை வானொலி முஸ்லிம் சேவை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதன் எதிர்கால முன்னேற்றங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன.

முஸ்லிம் சேவைக்கு நிரந்தர பணிப்பாளர் ஒருவரை நியமித்தல், மேற்படி சேவையின் செயற்பாடுகளை மேலும் விஸ்தரித்து தரமான சேவையை வழங்குவதற்கு தேவையான தயாரிப்பாளர்கள், ஊழியர்களை  நியமித்தல் மற்றும் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்தல்,  நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளும் வானொலி கலைஞர்களுக்கான கொடுப்பனவுகளை மீண்டும் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளல் மற்றும் ஏற்கனவே ஒலிபரப்பு செய்யப்பட்டு வந்த சிங்கள மொழி மூலமான நிகழ்சியை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தல் முதலான பல்வேறு முக்கிய கோரிக்கைகள் முஸ்லிம் மீடியா போரத்தினால் இந்த சந்திப்பின்போது முன்வைக்கப்பட்டதுடன் எழுத்து மூலமான கோரிக்கை கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

அத்துடன், கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபைக்கு முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை நியமித்தமைக்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும், தலைவர் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தனவிற்கும் முஸ்லிம்களின் சார்பில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் கடிதம் ஒன்றையும் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம். அமீன் இதன்போது கையளித்தார்.

மீடியா போரத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பிலும் முஸ்லிம் சேவை எதிர் கொள்ளும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பிலும்  ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன இந்த சந்திப்பின்போது உத்தரவாதம் அளித்தார்.

இன வேறுபாடுகளின்றி நல்லிணக்க அடிப்படையில் சகல இனத்தவர்களுக்கும் சமமான சேவையை தேசிய வானொலி என்ற வகையில் தான் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இதேவேளை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினதும் முஸ்லிம் சேவையினதும் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தேவையான ஒத்துழைப்பை வழங்க ஸ்ரீ லங்கை முஸ்லிம் மீடியா போரம் முன்வர வேண்டும் என்று கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன வேண்டுகோள் விடுத்தார்.

இந்த சந்திப்பில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபைக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட சகோதரர் சிதி பாரூக், முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான், பொருளாளர் அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ், மற்றும் நலன்புரி இணைப்பாளர் எம்.பி.எம். பைரூஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.