Header Ads



எல்லா குழந்தைகளையும் பாதுகாப்போம் - மிக அவதானமாக இருப்போம்

பத்து வயது பெண் குழந்தையின் உடல், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு அது கருவுற்று பிரசவிக்கப்போகிறது என்பதைக் கேட்கும்போதே வலிக்கிறதே, இந்தக் கொடுமையை எப்படித் தாங்குகிறது அந்தக் குழந்தை? தனக்கு என்ன நடந்திருக்கிறது என்றே தெரியாமல் பாலியல் துன்புறுத்தலை தினம் தினம் எப்படிக் கடந்திருக்கும்? அந்த அவஸ்தையை வெளிப்படுத்த முடியாமல் தனக்குள் அந்தக் குழந்தை எத்தனை முறை சிதைந்திருக்கும்? இப்படி எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், அந்த வலியின் ஒரு துளியைக்கூட நம்மால் உணரமுடியாது. 

அப்படி ஆறு மாத கருவை சுமக்கும் ஒரு குழந்தையின் பெற்றோர், அந்தக் கருவை கலைக்க நீதிமன்ற அனுமதியை நாடி இருக்கின்றனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'அந்தச் சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி, கருவைக் கலைப்பது குறித்து முடிவுசெய்வோம்' என உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் வயிற்றில் 26 வாரங்கள் வளர்ந்த கரு இருப்பதாகவும், குழந்தையைச் சுமக்கும் அளவுக்குச் சிறுமியின் உடல் போதுமான வளர்ச்சி அடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு குழந்தை பிறப்பதால், தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்தால் மட்டும் 20 வாரங்களுக்கு மேல் வளர்ந்த கருவை கலைக்க இந்திய சட்டம் அனுமதிக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமி நெருங்கிய உறவான மாமாவினால் ஏழு மாதங்களாகப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். வயிற்று வலி எனச் சிறுமி கூறியதால், பெற்றோர் அவரை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குதான் கர்ப்பம் என்ற அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது. 

'சண்டிகரில் மருத்துவப் பரிசோதனைக்குக் காத்திருக்கும் அந்தப் பத்து வயது சிறுமி, தான் கர்ப்பமடைந்து இருப்பதோ, கர்ப்பத்தினால் எதிர்கொண்டிருக்கும் ஆபத்து பற்றியோ அறியாமல் இருக்கிறாள்' என மனநல மருத்துவர் கவலையுடன் தெரிவித்துள்ளார். இதற்குமுன்பு நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வில், இயற்கையான முறையிலோ, அறுவை சிகிச்சை மூலமோ பிரசவம் செய்ய முற்பட்டால், அந்தச் சிறுமி மற்றும் அவரது வயிற்றில் இருக்கும் சிசு இருவருக்கும் ஆபத்து ஏற்படலாம். அந்தச் சிறுமியின் இடுப்புப் பகுதி, பிரசவத்தைத் தாங்கும் அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை. சிறுமியும் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆபத்தான நிலையில் உள்ளது' எனத் தெரிவித்துள்ளது. 

'பரிசோதனை, விசாரணை என நாள்களைக் கடத்திக்கொண்டிருப்பதும் இரண்டு உயிர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம். பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் கருமுட்டை ஒன்பது வயதிலிருந்தே உருவாகலாம். ஆனால், அவர்களது உடல் ஒரு குழந்தையைச் சுமந்து பிரசவிக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்காது. இந்தக் காலகட்டத்தில் கருவுறுதல், கருக்கலைப்பு, பிரசவம் எல்லாமே அந்தக் குழந்தையின் உடல்நலத்தைப் பாதிக்கும். எனவே, அந்தச் சிறுமியின் உயிரைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்' என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். 

இதேபோல இன்னொரு சம்பவமும் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யலாமா வேண்டாமா என்பதை மருத்துவர் குழு முடிவுசெய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உலகிலேயே இந்தியாவில்தான் பெண் குழந்தைகள், நெருங்கிய நபர்களால் அதிகளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் நம்மை உறையவைக்கிறது. அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டிய பெற்றோரே, பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது எவ்வளவு பெரிய ஆபத்து? இந்த நிலை என்று மாறும்? 

இந்திய அளவில் 400 மில்லியன் குழந்தைகள் உள்ளனர். 155 நிமிடங்களுக்கு ஒருமுறை 16 வயதுக்குட்பட்ட சிறுமி, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார். 13 மணி நேரத்துக்கு ஒருமுறை 10 வயதுக்குட்பட்ட சிறுமி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார். 2015-ம் ஆண்டு மட்டும் பத்தாயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். பாலியல் கொடுமையில் ஈடுபடும் நபர்களில் 50 சதவீதம் பேர், அந்தக் குழந்தைக்கு நன்கு அறிமுகமானவர்கள், குழந்தைகளின் பாதுகாவலர் பொறுப்பில் இருப்பவர்கள். பெண் குழந்தைகள் கடந்துசெல்லும் இதுபோன்ற கொடுமைகளைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்? 

பெண்ணியவாதியும் வழக்கறிஞருமான தமயந்தி, ‘‘இது பெண் இனத்துக்கான அவலம் ஆபத்து மட்டுமல்ல, ஆண் இனம் வெட்கித்தலைகுனிய வேண்டிய அசிங்கம். தனக்குப் பாலியல் ரீதியான துன்புறுத்தல் எந்த இடத்தில் நேர்ந்தாலும் அதுகுறித்து நம்பிக்கையுடன் புகார் தெரிவிக்கும் வாய்ப்புகள் பெண்ணுக்குப் பரவலாக்கப்படுவது அவசியம். அந்தந்த வயது குழந்தைகளின் புரிதலுக்கேற்ப பாலியல் பாதுகாப்புக் கல்வி கொண்டுவரப்பட வேண்டும். பாலியல் துன்புறுத்தல் குறித்து மனம்விட்டுப் பேச வேண்டும். பேசப் பேசத்தான் தனக்கு ஒன்று நடந்தால், வெளியில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் பெண் குழந்தைகளுக்குள் உருவாகும். 

கிராமப்புறங்களில் இதுபோன்ற சிறு வயது பாலியல் வன்கொடுமை மற்றும் கர்ப்பமடைதல் மூடி மறைக்கப்படுகிறது. இந்த விஷயம் வெளியில் தெரிந்தால், பாதிக்கப்பட்ட பெண் குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்று நினைக்கும் பெற்றோர், தங்களுக்குள் முடித்துக்கொள்ள நினைக்கிறார்கள். இதனால், 'விஷயம் வெளியில் போகாது. அப்படியே வெளியில் வந்தாலும், பணம் கொடுத்து சமாளித்துவிடலாம்' என்கிற எண்ணம் குற்றம்புரியும் ஆண்கள் மனதில் பதிந்துவிடுகிறது. அதனால், எந்தவித அச்சமும் இல்லாமல் பாலியல் வன்கொடுமையில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற நம்பிக்கைகளை உடைக்க வேண்டும். சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகளை நீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைச் சட்டம் குறித்தும் விழிப்புஉணர்வு பரவலாக்கப்படுவது அவசியம்'' என்கிறார் தமயந்தி.

1 comment:

Powered by Blogger.