Header Ads



மகாநாயக்கர்களின் அறிவிப்பு, பல்குழல் பீரங்கித் தாக்குதல் என வர்ணிப்பு

புதிய அரசமைப்பு, இந்நாட்டுக்குத் தேவையற்ற ஒன்றென்று, கண்டி அஸ்கிரிய மகாநாயக்கர் அறிவித்துள்ளமை, தமிழ்மக்கள் மீதான பல்குழல் பீரங்கித் தாக்குதலென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.   

நாடாளுமன்றத்தில், நேற்று (04) இடம்பெற்ற, தேருநர்களைப் பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

“யாழ்ப்பாணம், நாவற்குழியில் சிங்கள மக்கள் வாழவே இல்லை. இருந்தும் பிக்குகளில் ஆசியுடன் அங்கு வலுக்கட்டாயமாக சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.    “அதுமட்டுமல்ல, இரத்தத்தை வழங்கிவிட்டு வடக்கிலுள்ளவர்களின் உடலில் இராணுவத்தினதும், பிக்குகளினதும் இரத்தமே இன்று ஓடுவதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பெருமை பேசித் திரிகிறார்.   

“அதேவேளை, அரசமைப்பு திருத்தத்துக்கு அஸ்கிரிய பீடம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாகவும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும்வரை அரசமைப்பு பணிகளில் ஒன்றிணைந்த எதிரணி பங்கேற்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அணி அறிவித்துள்ளது என்றெல்லாம் செய்திகள் வெளிவந்துள்ளன. இது கிட்டத்தட்ட தமிழ் மக்கள்மீதான பல்குழல் பீரங்கித் தாக்குதலுக்கு ஒப்பானதாகும்.   

தமிழீழ விடுதலைப் புலிகள்தான் பல்குழல் பீரங்கி தாங்குதலை அறிமுகப்படுத்தினர். அந்த இயக்கத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர்தான் அதை நெறிப்படுத்தினார். அதே பீரங்கியால், தாக்குவதுபோல்தான் தமிழர்களுக்கு எதிரான அறிவிப்புகள் வருகின்றன” என்றார்.  

இலங்கையிலுள்ள பௌத்த சங்க சம்மேளனங்களின் சந்திப்பு மிகநீண்டநேரமாக நடைபெற்ற பின்னர், புதிய அரசமைப்பு, இந்த நாட்டுக்குத் தேவையற்ற ஒன்று என்று அஸ்கிரிய மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்திருந்தார்.   

தேர்தல் முறைமை மற்றும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் தொடர்பான விடயங்களில் மட்டுமே அரசமைப்பில் மாற்றங்கள் செய்யமுடியும். ஆனால், புதிதாக இன்னோர்அரசமைப்பு உருவாக்கத்துக்குத் தமது முழுமையான எதிர்ப்பைத் தெரிவிப்பதாக பௌத்த சங்கச் சம்மேளனத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையை அடுத்தே அவர் அந்த அறிவித்தலை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.