Header Ads



முஹம்மது நபி மீதான, பேரினவாதத்தின் திடீர் அக்கறை (முஸ்லிம்களே அவதானம்)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை ஊழியரான முரளி என்பவர், முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தி முகநூலில் எழுதியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்கின்ற செய்தி முஸ்லிம்கள் மத்தியில் திடீர் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், முஸ்லிம் - தமிழ் சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் மத்தியில் வெறுப்பை தூண்டும் கருத்து மோதல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. எழுதியவர் கைதுசெய்யப்பட்டார் என்கின்ற செய்தி பிரபல்யமான அளவுக்கு, அவர் அப்படி என்னதான் எழுதினார் என்பது இதுவரை பிரபல்யமாகாவிட்டாலும், இன்றைய இணைய, சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகில் முஹம்மது நபியை விமர்சிப்பது விரும்பத்தகாத, அதே நேரத்தில் ஒரு சாதாரண நிகழ்வாக மாறிவிட்ட சூழ்நிலையில், இந்த கைதிற்குப் பின்னல் இருக்கக் கூடிய சூழ்ச்சிகள் குறித்து முஸ்லிம்கள் கட்டாயமாக விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது.

“முஹம்மது நபியை விமர்சித்தவனை கைது செய்தாச்சு, மாஷா அல்லாஹ், அல்லாஹு அக்பர்” என்று நுனிப்புல் மேய்ந்துவிட்டு, ஆழம் அறியாமல் கொண்டாடுவதற்கு இதில் ஆச்சரியங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை, மாறாக குறித்த கைது நிகழ்வானது பேரினவாத தொடர் நிகழ்ச்சி நிரலின் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான திட்டமிட்ட சாதிகளின் ஒரு அங்கமாக மட்டுமே பார்க்கப்பட வேண்டியுள்ளது. 

மகிந்த அரசின் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் என்று கருதப்பட்ட நிகழ்வுகளுக்காக அந்த அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்னும் தேவையை முஸ்லிம்கள் முழுமையாகவே உணர்ந்தார்கள். சிறுபான்மையினரான தமிழரும், முஸ்லிம்களும் மகிந்த அரசை முற்றாக நிராகரிக்க, புதிய அரசு ‘நல்லாட்சி அரசு’ என்னும் அடைமொழியுடன் பதவியேற்றது.

மகிந்த அரசிற்கு எதிரான மென்வலுப் புரட்சியில் தமிழ், முஸ்லிம் ஒற்றுமை மிகப் பலமான சக்தியாக வெளிப்பட்டது. நல்லாட்சி தமக்கான மத சுதந்திரத்தையும், சுபீட்சத்தையும் வழங்கும் என்று முஸ்லிம்களும், யுத்தக் குற்றங்களை விசாரிக்கும், காணாமல் போனவர்கள் பற்றி விசாரிக்கும், தடுப்புக் காவலில் உள்ளவர்களை விடுதலை செய்யும், புதிய அரசியல் அமைப்பின் மூலம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கும் என்று தமிழர்களும் நம்பினார்கள், ஆனால் இவை எதனையுமே நல்லாட்சி அரசு இதுவரை செய்யாதது மட்டுமல்ல, எதிர்பார்ப்புகளுக்கு நேரெதிராகவே செயற்பட்டு வருகின்றது.

மகிந்த அரசில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற செயற்பாடுகளுக்கு சற்றும் குறைவில்லாத செயற்பாடுகள் இந்த அரசில் அரங்கேற ஆரம்பித்ததுடன், அவற்றிற்கான பூரண அனுசரணை ஆளும் தரப்பில் இருந்து மறைமுகமாக வழங்கப்படுவதை உணர முடியுமாக உள்ள நிலையில், மகிந்த அரசிற்கு சற்றும் குறைவில்லாத பேரினவாத முகம் கொண்ட புதிய அரசு, தமிழர்களையும், முஸ்லிம்களையும் மூட்டி விடும் செயற்பாட்டிற்குள் இறங்கி இருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. பலமான ஆயுத இயக்கமாக இயங்கிய புலிகளையே இரண்டாகப் பிரிக்கக் கூடிய அளவிற்கு நரிப் புத்தியுடன் இயங்கியவர்களை முக்கிய பங்காளிகளாக கொண்டுள்ள இன்றைய அரசு, ஏற்கனவே பிரிந்து போயிருந்து, மீண்டும் இணைந்து வாழ விரும்பும் இரு சிறுபான்மை இனங்களைப் பிரித்து அதில் குளிர் காய்வதுடன், தமக்கெதிரான பேரினவாதத்தின் சதிகளில் இருந்தும் இரு சிறுபான்மை இனங்களினதும் கவனத்தை திசை திருப்புவதிலும் கவனம் செலுத்த முயல்கின்றது.

மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தில் தமிழர்களை காணி மற்றும் வியாபார (ஹோட்டல்) பிரச்சினைகளைக் காரணமாக்கி முஸ்லிம்களுக்கு எதிராகத் துண்டி விட்டிருப்பதில், தமிழர்களே உணரமுடியாத வகையில் நிச்சயமாக பேரினவாதத்தின் மறை கரங்கள் இருக்கவே வேண்டும். 

மேலும், இணையம், சமூக ஊடகங்கள் பரவலாகிவிட்ட இன்றைய காலத்தில், உண்மையான மற்றும் போலியான கணக்குகள் மூலம் மதங்கள், இறைதூதர்கள், கடவுள்கள் விமர்சிக்கப் படுவது, தூசிக்கப் படுவது ஒரு தவிர்க்க முடியாத விரும்பத்தகாத நிகழ்வாக மாறிவிட்டுள்ளது. முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்துவது மற்றும் விமர்சிக்கும் செயலை முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமின்றி, முஸ்லிம்களில் ஒரு சில சிறு பிரிவினர், தனி நபர்கள் மற்றும் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களும் பகிரங்கமாக செய்து வருவதை சர்வதேச சமூக ஊடக அரங்கில் தாராளமாகக் காணக் கூடியதாக உள்ளது. ஆனால் பொது பல சேனாவின் வன்முறைப் பீரங்கி ஞானசார தேரர் பகிரங்கமாக அல்லாஹ்வை மிகக் கேவலமான வார்த்தைகளில் தூசித்த பொழுதும் எதுவித நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஒரே நாளில் அவருக்கு இரண்டு பிணைகள் வழங்கப்பட்ட அற்புத நாட்டில், முரளி என்பவரை கைது செய்து, அதனை செய்தியாக்கி இருப்பது நிச்சயமாக கிழக்கில் முஸ்லிம் – தமிழ் உறவில் விரிசலை உண்டுபண்ணும் நோக்குடன் செய்யப்பட ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. (சிங்கள மொழி மூலமான சமூக ஊடகங்கள், பக்கங்களில் முஹம்மது நபி (ஸல்) பரவலாக தூசிக்கப்படும் பொழுதும், அரசு எதுவித நடவடிக்கையும் எடுத்ததே இல்லை)

முஸ்லிம்களின் மத நம்பிக்கை சார்ந்த விடயங்கள் மதிக்கப்படல் வேண்டும் என்பதில் இந்த அரசிற்கு அக்கறை இருந்திருக்குமேயானால் ஞானசார தேரர் இற்கு எதிராக கடும் நடுவடிக்கை எடுக்கப்பட்டு இருக்க வேண்டும், ஆனால் அதனை செய்யாத அரசு, இரண்டு சிறுபான்மை இனங்களையும் சீண்டு முடிக்க வசதியான விடயங்களில் கவனம் செலுத்துவதால் இரண்டு சிறுபான்மை இனங்களும், குறிப்பாக முஸ்லிம்கள் அவதானமாக செயற்படுவது இன்றைய காலத்தின் கட்டாய தேவை ஆகும்.

(ஆக்கம் நீண்டுவிடக் கூடாது என்பதால், அண்மைய நாட்களில் நடைபெற்ற பல நிகழ்வுகள் குறித்த தகவல்கள் தவிர்க்கப் பட்டுள்ளன.)

- சுவைர் மீரான்  

6 comments:

  1. This article is super and make sense.
    Very good Subhai Meeran

    ReplyDelete
  2. அனைத்து நாடகங்களின் பின்னாலும் இருப்பவன் இலங்கை RSS கிளையின் தலைவனும் பொது பல சேனாவின் அல்லக்கையுமான அருண்காந்த்தன் என்பவனே

    ReplyDelete
  3. ஆம் கேடியின் வருகைக்கு பிறகு இனவாதம் திட்டமிட்டு RSS.BJP.BBS போன்றவர்கள் முழு மூச்சாக செயல்பட இந்த அரசு உதவி செய்கிறது காரணம் ஐநாவின் நெருக்கடியுமாகும்

    ReplyDelete
  4. அதை எழுதியவர் தான் அதை செய்யவில்லை எனவும் அவரது முகநூல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக பகிரங்க மன்னிப்புக் கோரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

    ஆகவே அவதானத்துடன் செயற்படுவோம்

    ReplyDelete
  5. அதை எழுதியவர் தான் அதை செய்யவில்லை எனவும் அவரது முகநூல் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக பகிரங்க மன்னிப்புக் கோரவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

    ஆகவே அவதானத்துடன் செயற்படுவோம்

    ReplyDelete

Powered by Blogger.