Header Ads



'கோத்தபாய ஜனாதிபதி ஆகிவிடுவாரென்பதாலே, அவரை கைதுசெய்ய முயற்சி'

2020ம் ஆண்டில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போகின்றார் என்ற பயத்தின் காரணமாக அவரைக் கைது செய்து சிறையிலடைப்பதற்கு தேசிய அரசு திட்டமிட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளவை வருமாறு:-

மஹிந்த அணிக்கான செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருவதால் அந்தச் செல்வாக்கை எப்படியாவது குறைத்து விடுவதற்கு தேசிய அரசு திட்டமிடுகின்றது. அந்தச் செல்வாக்குக்குப் பயந்து தான் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திப்போட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தல்களுக்கும் அதே கதிதான்.

கோத்தபாய ராஜபக்ச 2020 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாரோ என்ற அச்சம் இந்தத் தேசிய அரசுக்கு இருக்கின்றது. அதன் காரணமாக இப்போதிலிருந்தே அவரை அடக்கி ஒடுக்குவதற்கு தேசிய அரசு திட்டமிடுகின்றது. அவரைக் கைது செய்து சிறையிலடைப்பதற்குச் சதி செய்கின்றது.

அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைத் தேடிக்கொண்டிருக்கின்றது. இந்தக் கீழ்த்தரமான வேலைகளை தேசிய அரசு செய்யக்கூடாது. கோத்தபாயவை கைது செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் ஆதரவு வழங்குவார்களாக இருந்தால் அவர்களைப்போல் மனநோயாளிகள் வேறு எவரும் இருக்க முடியாது.

இந்தத் தேசிய அரசு கோடிக்கணக்கில் திருடியுள்ளது. மத்திய வங்கி பிணைமுறி மோசடி சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதமர் பதவி விலக வேண்டும். அலோசியஸ் சிறையிலடைக்கப்பட வேண்டும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யாரென்று இறுதி நேரத்தில்தான் வெளியிடுவோம். மைத்திரிபால வெற்றி பெற்றமைக்குக் காரணம் இறுதிநேரம் வரை இரகசியம் பாதுகாத்தமை தான். நாமும் அவ்வாறு செய்து வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.