Header Ads



சவூதி கடைகளில், வெளிநாட்டினருக்கு தடை..?

சவூதி அரேபியாவில் மளிகை மற்றும் தின்பண்ட கடைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு தொழிலாளர் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

நுகர்வுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து கடைகளினதும் தொழில் வாய்ப்புகள் 100 வீதம் சவூதியர் மயமாக்கும் வரைவு ஒன்று தயாரிக்கப்படுவதாக அரபு செய்திப் பத்திரிகையான அல் மதீனா, சம்பந்தப்பட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் சவூதி நாட்டவர்களுக்கு 20,000 தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த எதிர்பார்க்கப்பட்டிருப்பதாக அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது. தவிர, மேலும் 6000 தொழில் வாய்ப்புகளுக்காக உணவு மற்றும் குளிர்பான வாகனத் துறைகளில் சவூதி நாட்டவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சவூதியில் உள்ள சிறிய மளிகை கடைகளை மூடி, சவூதி ஆண், பெண்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு பெரிய இடவசதியுள்ள கடைகளுக்கு அனுமதி அளிக்க அந்நாட்டு ஷுரா கவுன்ஸில் பரிந்துரை செய்திருந்தது.

கையடக்க தொலைபேசி கடைகளில் சவூதி நாட்டவர்களுக்கு 8,000 தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு கடந்த ஆண்டில் இதேபோன்ற ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோதும் அதற்கு தடங்கல் ஏற்பட்டது.

100 வீதம் சவூதி நாட்டவர்களுக்கு தொழில் வழங்க நிபந்தனை விதிக்கப்பட்ட காலக்கெடுவால் ஆயிரக்கணக்கான கையடக்க தொலைபேசி விற்பனையகங்கள் மூடப்பட்டன. 

No comments

Powered by Blogger.