July 05, 2017

நியாஸ் மௌலவியின் ஞாபகங்கள்


மர்ஹூம் நியாஸ் மௌலவி அவர்கள் இறையடி சேர்ந்து ஏழு வருடங்கள் ஆகின்றன....!!

கொழும்பு இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரியின் ஸ்தாபகப் பணிப்பாளரும் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகருமான அல்ஹாஜ் மெளலவி எஸ். நியாஸ் முஹம்மது (கபூரி) 2010,07,04 ஆம் திகதி அதிகாலை பதுளையில் காலமானார்.

ஆறு பிள்ளைகளின் தந்தையான இவர் மரணிக்கும் போது வயது 57 ஆகும்.

பதுளையில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த போதே அங்கு அவர் மரணமடைந்துள்ளார்.

நியாஸ் மெளலவியின் மரணச் செய்தி கேட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிர்ச்சியடைந்துள்ளதுடன் அவரது ஜனாஸாவை பூரண அரச அனுசரணையுடன் நடத்துமாறு பணிப்புரை விடுத்துள்ளதுடன் உடனடியாக விசேட குழுவொன்றையும் நியமித்தார்.

இவரது ஜனாஸா பண்டாரவளையிலிருந்து விசேட ஹெலிகொப்டர் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டது.

பதுளை பெரிய பள்ளிவாசல் முன்னாள் நிர்வாகி, தெளபீக்கின் புதல்வரான பாரிக் தெளபீக்கின் பதுளுப்பிட்டிய இல்லத்திலேயே இவர் மரணமானார்.

இவரது ஜனாஸா அங்கு வைத்து கபனிடப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக பதுளை மஸ்ஜிதுல் அன்வர் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு எடுத்து வரப்பட்டது.

இந்த செய்தியை அறிந்த பெருந்திரளான மக்கள் ஜனாஸாவை நேரில் சென்று பார்வையிட்டனர்.

அதன் பின்னர் கொழும்புக்கு ஹெலிகப்டர் மூலம் கொண்டுவரப்பட்டது

அவரது ஜனாஸாவை ஜனாதிபதியின் சார்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, மேல் மாகாண மர்ஹூம் ஆளுநர் அலவி மெளலானா, ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி., கொழும்பு மாநகர விசேட ஆணையாளர் ஒமர் காமில் ஆகியோர் பொறுப்பேற்றனர்.

பின்னர் விசேட பொலிஸ் மரியாதையுடன் அன்னாரது ஜனாஸா, அவரது இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

நியாஸ் மெளலவியின் ஜனாஸா செய்தியை கேட்ட சகல இன மக்களும் மதத் தலைவர்களும் இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரிக்கு விரைந்து தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தனர்.

இதேவேளை, பீர் ஸாஹிபு வீதியிலுள்ள இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரிக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாஸாவுக்கு தனது இறுதி மரியாதையை செலுத்தினார்.

முன்னாள் பிரதமர் தி. மு. ஜயரத்ன, வெளிநாட்டு இராஜதந்திரிகள், அமைச்சர்கள், சர்வமதத் தலைவர்கள் என பலரும் நியாஸ் மெளலவியின் ஜனாஸாவுக்கு தமது இறுதி மரியாதையை செலுத்தினர்.

1953 ஆம் ஆண்டு ஜனாப் சம்சுடீன் மற்றும் ஹாஜியானி ஸைனப் பீபீ ஆகியோருக்கு இரண்டாவது புதல்வராக தலவாக்கலையில் பிறந்த இவர், கம்பளை ஸாஹிராக் கல்லூரியில் சிங்கள மொழியில் கல்வி கற்றபின்னர் மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியில் இஸ்லாமியக் கல்வியைத் தொடர்ந்தார்.

இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரியை உருவாக்கி கடந்த 25 வருடங்கள் அதன் ஸ்தாபகப் பணிப்பாளராகவும், விரிவு ரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அதேபோன்று மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

அரபு, தமிழ், ஆங்கிலம், சிங்களம், உருது, ஹிந்தி மற்றும் பாளி ஆகிய ஏழு மொழிகளில் தேர்ச்சி பெற்றுள்ள இவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகிய ஐயமும் தெளிவும் நிகழ்ச்சி ஊடாகவும், முஸ்லிம் மக்கள் மத்தியிலும் சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொரமடலாவ நிகழ்ச்சி ஊடாக சிங்கள மக்கள் மத்தியிலும் மிகவும் பிரபல்யம் பெற்றார்.

இலங்கையில் சகல இனங்களுக் கிடையிலும் சமத்துவத்தை பேணுவதில் இவருடைய சேவை மிக முக்கியமானதாக கருதப்பட்டதால் இலங்கை அரசாங்கமும், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புக்களும் ‘தேசபந்து’ ‘தேசகீர்த்தி’ ‘சமமான்ய’ ‘கீர்த்திஸ்ரீ’ பட்டமளித்து கெளரவித்துள்ளன.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய உறுப்பினராக செயற்பட்ட இவர், இலங்கை முஸ்லிம் சமாதான சபை தலைவர், மஜ்லிஸல் உலமா பவுண்டேஷன் போன்ற அமைப் புக்கள் மூலம் பல்வேறு சேவைகளை யாற்றியுள்ளார்.

யா அல்லாஹ் நியாஸ் மௌலவி அவர்களுடைய சகல பணிகளையும் கபூல் செய்து மேலான ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை கொடுப்பாயாக.

Sehu Kabeer 

0 கருத்துரைகள்:

Post a Comment