Header Ads



நானும் ஒரு, ஸலபிதான்...!

இஹ்வான்களை அதிகம் நேசிக்கிறேன், அவர்களது அறிஞர்களை அதிகம் மதிக்கிறேன், பயனுள்ள பல விடயங்களையும் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்கிறேன், அவர்களது கருத்துக்களில் தவறு என நான் கருதுவதை பண்பாடாக விமர்சிப்பேன்.

நானும் ஒரு ஸலபிதான்... தப்லீக், ஜமாஅதே இஸ்லாமி ஏனைய இஸ்லாமிய உறவுகளோடு அன்பாக நடந்து கொள்வேன், அவர்களது நலவுகளை மனமாற வாழ்த்துவேன், அவர்களை எனது சகோதரர்களாகவே நோக்குவேன், கருத்துக்களை கருத்துக்களால் மட்டுமே எதிர்கொள்வேன்.

நானும் ஒரு ஸலபிதான்... அல்லாஹ்வையும் அவனது தூதரையும் இஸ்லாத்தையும் போதிக்க யார் எந்த அமைப்பு எங்கு அழைத்தாலும் அங்கு செல்வேன், மனித மனங்களை புண்படுத்தாது பண்படுத்த முயற்சிப்பேன், உள்ளதையெல்லாம் பேசாது உள்ளங்களோடு உரையாட முயற்சிப்பேன். 

நானும் ஒரு ஸலபிதான்... அறிஞர்கள் எவராயினும் அவர்களது கருத்துக்களை வஹியோடு உரசிப்பார்த்து அதில் சரிபிழைகளை புரிந்து கொள்கின்ற அதேவேளை அந்த அறிஞர்களை தகாத வார்த்தைகளால் விமர்சிக்கமாட்டேன்.

நானும் ஒரு ஸலபிதான்... எனது கருத்துக்களோடு உடன் படாதவர்களுக்கு பண்பாடாக நாகரீகமாக சத்தியத்தை எடுத்துக் கூறுவேன் எனது கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இஸ்லாமிய சகோதரத்துவ வாஞ்சையோடே அவர்களோடு உறவாடுவேன். 

நானும் ஒரு ஸலபிதான்... அதற்காக பிறருக்கு பித்அத் வாதியென்றோ வழிகேடன் என்றோ  முஷ்ரிக் என்றோ முனாபிக் என்றோ பத்வா வழங்க மாட்டேன்.

நானும் ஒரு ஸலபிதான்... இமாமுஸ் ஸுன்னா அஹ்மத் இப்னு ஹன்பல், ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமியாவின் கருத்துக்களை மூச்சுக்கு முன்னூறு தடவை உச்சரிக்கின்ற அதேவேளை மாற்றுக்கருத்துடையவர்களோடு அவர்கள் நடந்த கொண்ட பண்பாடான வழிமுறைகளையும் பேணிக் கொள்ள முயற்சிப்பேன்.

நானும் ஒரு ஸலபிதான் ஸலபிய்யா என்பதனை நம்பிக்கை கோட்பாடுகளை மாத்திரம் உள்வாங்கிக் கொண்டு செயற்பாடுகளில் ஸலபுகளின் வழிமுறைகளை விட்டும் தூரமாகி விடுவதல்ல.  அது ஒரு போதும் ஸலபிய்யாவாக ஆகிவிடப் போவதில்லை. மாறாக ஸலபிய்யா என்பது நம்பிக்கை, சொல் , பண்பாடு, அரவணைப்பு , அன்பு, கருத்து வேற்றுமையை அணுகும் விதம், நேசம், பாசம், போன்ற அனைத்திலும் ஸலபிய்யா செல்வாக்குச் செலுத்த வேண்டும் என்ற அல்லாமா ஸாலிஹ் அல் உஸைமீனீன் ஸலபிய்யா கோட்பாட்டை எனது வாழ்வில் கடைசி வரை கடைப்பிடிக்க முயற்சிப்பேன்.

நானும் ஒரு ஸலபிதான்... நான் ஒரு ஸலபி என்பதால் பிறரோடு சண்டை பிடிக்கவேண்டும், அடுத்த அமைப்புக்களுக்கு வழிகேட்டு பத்வா கொடுக்கவேண்டும், எனக்கு பிடிக்காத அறிஞர்களை திட்டித் தீர்க்கவேண்டும், நான் என்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவன், நான் சொல்வது மட்டமே சரி, மற்றவர்களது கருத்துக்களுக்கு கொஞ்சமேனும் செவிசாய்க்க மாட்டேன் என்ற குறுகிய மனோநிலை என்னில் இருக்குமாயின் எனக்கும் இந்த ஸலபிய்யா வழிமுறைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதனையே ஸலபிய்யா வழிமுறை எனக்கு கற்றுத்தந்துள்ளது என்பதில் உறுதியாய் இருக்கிறேன்.

குர்ஆன் ஸுன்னாவிற்கு ஸலபுகளின் விளக்கத்தை மட்டுமல்ல அவ்விரண்டினதும் அடியொட்டி வாழ்ந்த அவர்களது வாழ்க்கையையும் ஸலபிய்யாவாக நோக்குவதையும் எனது ஸலபிய்யா வழிமுறையாக காண்கிறேன். 

ஸலபி நீதிபதியாகவோ ஸலபி பொலிஸாகவோ செயற்படுவதை விடுத்து நானொரு உண்மையான ஸலபி அழைப்பாளானாக வாழவே விரும்புகறேன். 

By - Shk TM Mufaris Rashadi

No comments

Powered by Blogger.