Header Ads



புதிய முஸ்லிம்கள், இஸ்லாத்தின் ஆகர்ஷ சக்தியாக விளங்குகிறார்கள் - லீசா


لماذا يعتنق البريطانيون الإسلام؟

உண்மை என்பது வலுவான ஒன்று. அதன் எதிரொலி மனிதனின் ஆன்மாவில் தர்க்கரீதியாக ஒலித்துக்கொண்டிருக்கும்; சிந்தனையைத் திருப்பிவிடும். புதிய முஸ்லிம்கள் இஸ்லாத்தின் ஆகர்ஷ சக்தியாக விளங்குகிறார்கள். இருளை அகற்றி ஒளியைப் பாய்ச்சுவதில் இஸ்லாம் தொடர் பங்காற்றிவருகிறது. -சிவில் இன்ஜினியர் LISA

Bournemouth வாசியான Lisa Hamilton சிவில் இன்ஜினியர் ஆவார். அவரும் அவர் கணவரும் டுனூசியாவில் விடுமுறையைக் கழித்தபிறகு கிட்டத்தட்ட இஸ்லாத்தை ஏற்கும் நிலைக்கு வந்துவிட்டனர். அதுகுறித்து அவரே விவரிக்கிறார்:

என் குழந்தைப் பருவமும் இளமையைத் தொடும் பருவமும் அமைதியான முறையில் கழிந்தன. பிரிட்டனில் ஒரு சாதாரண குடும்பத்தில் நாத்திகப் பெற்றோருக்குப் பிறந்தவள் நான். இருப்பினும், கடந்த இரண்டாண்டுகளாக நண்பர்களுடன் டுனூசியா சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும்; வரலாறு மற்றும் பண்பாடுகள் குறித்துத் தரவாகத் தெரிந்துகொள்ள வேண்டும் எனத் தீர்மானித்தேன்.

கைரவான் நகரின் தெருக்கள் சுற்றுப் பயணத்தில், பயணத் திட்டத்திற்கு அப்பால் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘கைரவான்’ நகரத்தைச் சுற்றிக்காட்ட ஒரு வழிகாட்டி கிடைத்தார். இஸ்லாமிய உலகில் கைரவானுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு; மார்க்கத்தின் மையமாக அது கருதப்படுகிறது. குறிப்பாக, மாபெரும் பள்ளிவாசல் ஒன்று இருப்பதாக அறிந்தோம். அதைக் காணப் புறப்பட்டோம்.

அங்கு LISA முதன்முறையாக பாங்கோசையைக் கேட்கும் அரிய வாய்ப்பைப் பெற்றார். அதுவே, அவரது வாழ்க்கையைத் தலைகீழாகத் திருப்பிப்போட்ட நிகழ்வானது. அவரே சொல்கிறார். துனூஷியாவின் கைரவான் நகரம் கைரவான் மஸ்ஜித் லுஹருக்குப் பிந்திய நேரத்தில் கைரவான் போய்ச் சேர்ந்தோம். லாட்ஜ் அறையில் தங்கிவிட்டு, அமைதியான மாலைப் பொழுதில் வெளியே புறப்பட்டோம். அங்கு பாங்கொலி கேட்டது. அந்த அமைதியான சூழலில் அந்த இனிய நாதம் நகரத்தின் வான்வெளியெங்கும் அலைமோதியது; ஒவ்வொருவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தது.

இந்தப் பாங்கோசைக்கு ஈடான ஒன்றை அன்றுவரை நான் கேட்டதே இல்லை என்று எண்ணினேன். அதே நேரத்தில், அதில் ஒலித்த சொற்களின் பொருள் குறித்து அந்த நேரம்வரை எனக்கு எந்த அபிப்பிராயமும் இல்லை. ஆனால், அதன் எழில் என் உள்ளம் முழுவதையும் நிறைத்துவிட்டதை உணர்ந்தேன்.

மறுநாள் கைரவான் பள்ளிவாசலுக்குச் சென்ற போது, அதன் கட்டட அமைப்பும் செதுக்கிய பிரமாண்டமும் இஸ்லாமியச் சின்னங்களும் என்னை மெய்மறக்கச் செய்தன. இஸ்லாத்தின் அழகும் இஸ்லாமியக் கலாசாரமும் என்னை வெகுவாகக் கவர, பிரிட்டன் திரும்பியவுடனேயே இஸ்லாத்தைப் படிக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்தேன்.

இஸ்லாத்தில் LISA

அன்று முதல் இஸ்லாம் சுமந்திருக்கிற, அவர் அறிந்திராத உண்மைகளையும் பேரழகையும் LISA அறியத் தொடங்கினார். அமெரிக்கா செல்ல கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அங்கே பல மாதங்கள் இஸ்லாத்தை ஆராய்ந்தார். இரவுகளில் குர்ஆனில் மூழ்கிப்போனார். இறுதியாக, அவர் மனமும் அறிவும் ஒருசேர முடிவு செய்தன. இஸ்லாத்தில் LISA இணைந்தார். பல்லாண்டுகளாக அவர் தேடிக்கொண்டிருந்த நிம்மதியும் புண்ணியமும் கிடைத்துவிட்டதாக உணர்ந்தார்.

LISA சொல்கிறார்:

ஈமான் ஓர் அற்புதமான விஷயம். கொஞ்சத்தைக் கொண்டே திருப்திகொள்ளச் சொல்கிறது. உள்ளத்தில் ஈமான் குடியேறியபின், என் அறிவும் என் புதிய உலகத்தைப் புரிந்துகொள்ளத் தயாராகிவிட்டது.

என்னில் இஸ்லாம் ஒவ்வொன்றையும் ஒழுங்குபடுத்துகிறது. அதன் புத்தொளியால் என் வாழ்வில் ஒவ்வொரு நிலையையும் செதுக்கிவருகிறது. சிலநேரங்களில் அவ்வொளி உச்சகட்டத்தை அடைகிறது. அப்போதும் எனக்கு ஆற்றலையும் மனஅமைதியையும் வழங்குகிறது. இஸ்லாத்திலன்றி வேறெங்கும் அந்த ஆற்றலையோ அமைதியையோ அடைய முடியாது என்பது என் நம்பிக்கை.

இப்போது நான் ஒரு முழுமையான முஸ்லிம் பெண்மணி. சரியாக இஸ்லாத்தைப் புரிந்து செயல்படுகிறேன். இதற்குமுன் இத்தகைய பெரும்பேற்றினை நான் நுகர்ந்ததில்லை. என்னைப் பார்த்து யார் என்ன சொன்னாலும் இஸ்லாம் என்னிலிருந்து பிரிக்க முடியாத ஓர் அடிப்படை அங்கம் என்பதை என் குடும்பத்தார் நன்றாகவே புரிந்துள்ளனர். இஸ்லாம் என் எல்லைகளை வரையறுத்துள்ளது. அது என் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகிறது. எனக்கு நல்வழி காட்டுகிறது.

khanbaqav

No comments

Powered by Blogger.