July 07, 2017

"சிங்கள ஆட்சியாளர்கள் போடும் எலும்புத் துண்டுகளைக் கவ்வ, எமது இனம் தயாராகவில்லை"

நாட்டிற்கு புதிய அரசியல் அமைப்புத் தேவையில்லை என மகாநாயக்க தேரர்கள் முடிவெடுத்திருப்பது, ஈழத்தமிழர்களாகிய எங்களை பிரிந்து சென்று புதிய அரசியல் அமைப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள் எனும் நிலைக்கு தள்ளுகின்றீர்களா? என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாட்டிற்கு புதிய அரசியல் அமைப்புத் தேவையில்லை என கண்டியில் மகாநாயக்க தேரர்கள் ஒன்றுகூடி முடிவெடுத்திருப்பது தொடர்பில் இன்று (07) வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2004ம் ஆண்டு சுனாமிப் பேரலை ஏற்பட்டு மிகப்பெரிய அழிவு இலங்கைத்தீவில் ஏற்பட்ட நிலையில் 2/3 வீதத்திற்கும் மேற்பட்ட அழிவை தமிழர் தாயகத்தின் வடக்கு, கிழக்கு மாகாணங்களே சந்தித்தன.

உயிரிழப்புக்கள் மாத்திரமல்லாமல் பெருமளவு உடமை இழப்புக்களும் ஏற்பட்டன. அப்போது தமிழர் தாயகத்தில் 2/3 பங்கு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசு இயங்கிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டு சுனாமிக்குப் பின்னரான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுக் கிளிநொச்சியில் அதன் தலைமை அலுவலகம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பல நூற்றுக்கணக்கான பெளத்த மத துறவிகள் ஒன்று திரண்டு ஜனாதிபதி மாளிகைக்கு முன்னர் ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் ஊடாக அந்தத் திட்டத்தைக் கைவிட்டது இலங்கை அரசு.

அன்றைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய நாட்டின் வெளிவிவகார அமைச்சர் நட்வர் சிங்குடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

அப்போது சம்பந்தன் தலைமையில் ஆறு பேரை உள்ளடக்கிய பாராளுமன்றக் குழுவில் நானுமொருவனாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தோம். அமரர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் ஆகியோரும் அந்த குழுவில் இடம்பெற்றிருந்தார்கள்.

அப்போது இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் நான் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தேன். அதாவது இந்த மனிதாபிமானக் கட்டமைப்புக்களுக்கு எதிராக பெளத்த மதத் துறவிகள் செயற்படுகின்றார்கள் என்றால் இலங்கைக்குள் ஒரு அரசியல் தீர்வு ஏற்படும் என்பதை நாங்கள் எவ்வாறு நம்ப முடியும் எனக் கேள்வியெழுப்பியிருந்தேன்.

அதற்கு அவர் சிரித்துக் கொண்டே பதிலெதுவும் கூறாமல் மெளனம் காத்தார். ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற சூழ்நிலைகளை மாற்றியமைப்பதற்காக இலங்கையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும்,

தேசிய நல்லிணக்கம் ஏற்படும் எனக் கூறி தமிழ் மக்களை ஏமாற்றி அழுத்தங்களின் கனதியைக் குறைத்த பின்னர் மீண்டும் பழைய படி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவதாக சிங்கள பெளத்த ஆட்சியாளர்களினதும், மதவாதிகளினதும் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

இவ்வாறான நிலைமையில் இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்படாவிடில் சர்வதேசத்தின் உதவியுடன் வடக்கு - கிழக்குத் தமிழர் தாயகத்தில் ஒரு பொதுசன வாக்கெடுப்பை நடத்தி எங்களுடைய தலைவிதியை நாங்களே தீர்மானிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

அந்த நிலைமைக்கு எம்மைத் தள்ளிவிடாதீர்கள். சிங்கள ஆட்சியாளர்கள் போடும் எலும்புத் துண்டுகளைக் கவ்வ எமது இனம் தயாராகவில்லை எனவும் அவர் மேலும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment