Header Ads



விஸ்வரூபமெடுக்கும் செல்வாக்குமிக்க, பௌத்த பீடங்கள் - அரசு என்ன செய்யும்..?


புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்பு திருத்தமோ தேவையில்லை என்று, செல்வாக்குமிக்க மூன்று பௌத்த பீடங்களான- சியாம், அமரபுர, ராமன்ய,  நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்களும், ஏனைய சங்க சபாக்களும் ஒரு மனதாக நேற்று தீர்மானித்துள்ளனர்.

கண்டியில் நேற்று நடந்த கூட்டத்திலேயே சிறிலங்காவின் பௌத்த பீடங்களின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதலில் இருந்து, அனைவரையும், பாதுகாக்கின்ற அனைத்துலக பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதையும் தாமதப்படுத்த வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனமாக பரிசீலனை செய்வதற்கு கால அவகாசம் அளிக்கும் வகையில் இதனை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதை பிற்போடுமாறும் மகாநாயக்கர்கள் கோரியுள்ளனர்.

பௌத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கவனிக்கவும், கலாசார மற்றும் மத ரீதியான, மத மற்றும் இன ரீதியான அமைதியின்மையை தடுக்கவும், நாட்டில் உள்ள தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த மத தலங்களை பாதுகாக்கவும் சிறப்புக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது,

கண்டியில் அஸ்கிரிய சிறி சந்திரானந்த மண்டபத்தில் நேற்று சுமார் 4 மணித்தியாலங்கள் நடந்த சிறப்பு சங்க சபா கூட்டத்தில், மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களும், 75 ஏனைய தேரர்களும், கலந்து கொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.