Header Ads



சாதுரியமான முடிவுகளை ஜனாதிபதியும், பிரதமரும் மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம் - ஹக்கீம்


புதிய அரசியல் யாப்பை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுகின்றபோது, அதனை வாபஸ் பெறுகின்ற அளவுக்கு மதபீடங்கள் சவால் விட்டாலும் அதனை சாதுரியமான முறையில் எதிர்கொண்டு, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்‌ற வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

உலர் வலய நகர நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் 2,200 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இன்று வெள்ளிக்கிழமை (07) மன்னார் குடிநீர் வழங்கல் திட்டத்தை பிரமதர் ரணில் வி்க்கிரமசிங்க ஆரம்பித்து வைத்தபின்னர், எழுத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றுகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்குவதற்கு மேற்கொள்ளப்படும் எத்தனங்களை கட்டுப்‌படுத்துவதற்காக ஜனாதிபதியும், பிரதமரும் மிகுந்த பிரயத்தனங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் சட்டமூலங்களை நிறைவேற்ற வருகின்றபோது, அதனை வாபஸ் பெறுகின்ற அளவுக்கு மதபீடங்கள் அரசுக்கு பகிரங்கமாக சவால் விட்டுக்கொண்டிருக்கின்றன.

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு குறுகிய நோக்கமுடைய சில அரசியல் தலைமைகள் மதபீடங்களை ஊக்குவிக்கின்ற முயற்சிகளை செய்து வருகின்றன. ஜனாதிபதியும், பிரதமரும் இப்பிரச்சினையை சமூகமான முறையில் தீர்க்கின்ற அதேவேளை, நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும்.

நடந்து முடிந்த யுத்தம் தொடர்பில் பல துன்பகரமான சம்பவங்கள் இருக்கின்றன. அதுகுறித்து ஆராயவேண்டுமென பலவாறு பேசப்படுகின்றன. அவற்றை செய்துகொள்கின்ற அதேவேளை, சிறுபான்மை மக்களின் நிரந்தரமான தீர்வுக்காக புதிய அரசியல் யாப்பை கொண்டுவருவதாக கொடுத்த வாக்குறுதியை நாட்டின் இரட்டைத் தலைமைகள் செய்யவேண்டும்.

மீண்டுமொரு குழப்பநிலைய தோற்றுவித்து, அசம்பாவிதங்கள் நடைபெற்று நாட்டின் சட்டமும் ஒழுங்கும் சீரழிகின்‌ற நிலைக்கு கொண்டுவராமல் தடுப்பதற்கான சாதுரியமான முடிவுகளை ஜனாதிபதியும், பிரதமரும் மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். நாங்கள் அடிக்கடி முரண்பட்டுக்கொண்டாலும், பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

முசலி பிரதேசத்திலுள்ள வியாயடிக்குளம் மற்றும் கல்லாறு என்பன உலர் வலயத்தில் காணப்படுவதால், அவற்றில் செயற்கையாக தண்‌ணீரை தேக்கி வறட்சிக் காலங்களில் ஏனைய பிரதேசங்களுக்கு நீரை விநியோகிப்பதற்கான திட்டமொன்றை செயற்படுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நான் அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருக்கிறேன்.

இத்திட்டத்துக்கான செயற்திட்ட அறிக்கை தற்போது தயாராகிக்கொண்டிருக்கிறது. இதற்கு மானிய அடிப்படையில் நிதியைப் பெற்றுக்கொள்வது தொடர்பில், சீன விஜயத்தின்போது முயற்சியை மேற்கொண்டிருந்தோம். அதுபோல ஆசிய அபிவிருத்தி வங்கியிடமும் அதற்கான நிதியை வேண்டி நிற்கின்றோம்.

இரணைமடுக் குளத்திலிருந்து யாழ். தீபகற்பத்துக்கு நீரை எடுத்துசெல்வதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். ஆனால், விவசாயிகளின் பிரச்சினை காரணமாக, கிளிநொச்சி அரசியல்வாதிகளுக்கும் யாழ். அரசியல்வாதிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல்நிலையால் அத்திட்டம் கைவிடப்பட்ட நிலையில் கிடக்கிறது. 

விவசாயிகள் மத்தியில் காணப்படும் அர்த்தமில்லாத சர்ச்சைகளை அரசியல்வாதிகள் முடிவுக்கு கொண்டுவரவேண்டும். விவசாயிகளுக்கு நம்பிக்கைதரும் வாக்குறுதிகளை வழங்கியபோதும், இப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதால் யாழ்ப்பாணத்துக்கு நீரைக் கொண்டும் செல்லும் திட்டம் தாமதமாகிக்கொண்டிருக்கிறது. என்னுடைய பதவிக் காலத்துக்குள் இத்திட்டத்தை செய்துமுடிக்கவேண்டும்.

இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள உலர் வலய நகர நீர் வழங்கல் திட்டம் மூலம் மன்னாரிலுள்ள 40% மக்களுக்கு குழாய்நீர் விநியோகம் கிடைக்கவுள்ளது. வியாயடிக்குளம் மற்றும் கல்லாற்றில் செயற்கை நீர்த்ததேக்கம் உருவாக்கப்பட்டால், மன்னார் மாவட்டம் முழுவதும் குழாய்நீர் இணைப்புகளை வழங்கமுடியும்.

No comments

Powered by Blogger.