July 16, 2017

இஸ்லாமிய உறுப்பினர்களின் ஆதரவுடன், பெரும்பான்மை பெறக்கூடிய நிலைமை இருக்கிறது - சம்பந்தன்

காணி, சட்டம் ஒழுங்கு, பொலிஸ், கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், கடற்றொழில், எல்லாவிதமான கைத்தொழில், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், தொழில்வாய்ப்பு உட்படச் சகல சமூகப் பொருளாதார விடயங்களையும் தாமே தமது பிரதிநிதிகள் ஊடாகக் கையாளக் கூடிய வகையில் சமஷ்டி என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் அதிகூடிய அதிகாரங்கள் பகிரப்படுமாக இருந்தால் அது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சாதகமாகப் பரிசீலிக்கும்.

இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்.  அவர் மேலும் கூறியதாவது:

அரசியல் தீர்வு சம்பந்தமான முயற்சிகளைக் குழப்புவதற்குப் பல தரப்புகள் மிகவும் தீவிரமாகச் செயற்படுகின்றன.  பெரும்பான்மை இனத்தின் மத்தியில் தீவிரப் போக்குடையவர்கள் இந்த முயற்சியை குழப்புவதற்கு மிகவும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றார்கள்.  மஹிந்த ராஜபக்ச, அவருடைய அணியைச் சேர்ந்தவர்கள், வேறு சில கட்சிகளைச் சேர்ந்தவர்கள் புதிய அரசியல் தீர்வு விடயத்தைக் குழப்பத் தீவிரமாகச் செயற்படுகின்றார்கள். 

பெரும்பான்மையின மக்களைக் குழப்பி ஒரு தீர்வு ஏற்படுவதைத் தடுக்க இவர்கள் முற்படுகின்றார்கள். அதேசமயம் மக்களால் இந்தக் கருமங்களைக் கையாள்வதற்குத் தெரிவு செய்யப்படாதவர்கள் இன்றைக்கு இடம்பெறுகின்ற முயற்சிகளைப் பல விதமான குறைகள் குற்றங்களைக் கூறி மக்களின் மனங்களில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதை நாங்கள் அவதானிக்கிறோம்.

நாங்கள் பகிரங்கமாகக் கூறி நிற்கின்றோம். ஓர் அரசியல் தீர்வு சம்பந்தமாகத் தற்போது ஆக்கபூர்வமான உறுதியான முயற்சி நடைபெறுகின்றது.  ஒரு நிதானமான நல்ல சூழல் காணப்படுகிறது. நியாயமான நல்ல சூழல் என்று நான் கூறுவதற்கு காரணம் என்னவென்றால், இந்த அரசு ரணில் விக்கிரமசிங்க தலைமையில் உருவாக்கியது. ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவினுடைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியது. 

ஆனபடியால் இன்று ஆட்சி செய்கின்ற அரசு இந்த இரண்டு கட்சிகளைச் சார்ந்த ஒரு அரசு. அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாது விட்டாலும் கூடத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன், மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவுடன், ஏனைய இஸ்லாமிய தமிழ் உறுப்பினர்களின் ஆதரவுடன் இலகுவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறக்கூடிய நிலைமை இருக்கிறது.

இந்த நிலைமை சமீப காலத்தில் இருக்கவில்லை. சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த போது புதிய அரசமைப்பை உருவாக்கி அரசமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு நியாயமான அதிகாரப் பகிர்வை உருவாக்கி நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தார். ஆனால், துரதிஷ்டவசமாக அவரால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற முடியவில்லை. 

புதிய அரசமைப்பில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு, இரண்டாவது ஜனாதிபதி நிர்வாக ஆட்சி முறை, மூன்றாவது தற்போதைய தேர்தல் முறை. புதிய அரசமைப்பு உருவாக்கும் முயற்சி தொடர்பில் நாங்கள் அதிகம் பத்திரிகைகளுக்குக் கூறுவதில்லை. அவ்வாறு கூறினால் சம்பந்தன் இப்படிச் சொல்கிறார் எனச் சொன்னவுடன் தெற்கிலிருந்து பத்துப் பேர் அதற்குப் பதில் சொல்ல வந்து விடுவார்கள். 

அது பெரும்பான்மை இனத்தின் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தலாம். ஆனபடியால் எமது மக்கள் ஓரளவுக்கு நிலைமைகளை அறியாமல் இருக்கும் சூழல் இருந்தாலும் கூட நாங்கள் மௌனிகளாக இருக்க வேண்டிய ஒரு கட்டாயச் சூழல்இருக்கத்தான் செய்கிறது.  ஏனென்றால் பல கருமங்கள் பல தடவைகள் குழப்பட்டிருக்கின்றன. ஆரம்பத்தில் நாங்கள் குழம்பக்கூடாது. ஒரு கட்டத்தில் எல்லாம் வெளிவரும். ஒரு தீர்வு நியாயமாக வருமாக இருந்தால் அதனை நாங்கள் எங்கள் மக்களுக்கு முன்னால் கொண்டு வருவோம். 

காணி, சட்டம் ஒழுங்கு,பொலிஸ், கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், கடற்றொழில், எல்லாவிதமான கைத்தொழில், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், தொழில்வாய்ப்பு, சமூக பொருளாதார விடயங்கள், எமது மக்களின் நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படும். வழங்கப்படுகின்ற அதிகாரங்கள் உறுதியானதாக இருக்க வேண்டும். மீளப்பெறப்படாத வகையில் இருக்க வேண்டும். அந்த அதிகாரங்களுக்கு எவ்விதமான தடைகளும் இல்லாது இருக்க வேண்டும். அவ்விதமாக இருந்தால்தான் அது உறுதியாக இருக்கும்.

சமஷ்டி முறையை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அது நிச்சயமாக நடைபெறும். ஆனால், துரதிஷ்டவசமாக இந்த நாட்டில் சமஷ்டி எனும் சொல் ஒரு பயங்கரவாதச் சொல்லாகக் கருதப்படுகிறது. சமஷ்டி என்றால் அது பிரிவினைக்குச் செல்லும் எனும் கருத்து இருக்கின்றது. இந்தியா பல மாநிலங்களைக் கொண்ட ஒரு நாடு. அங்கு எல்லாவற்றிலும் அதிகாரப்பகிர்வு ஒரே விதமாக இருக்கின்றது. அங்கே சமஷ்டி எனும் சொல் பாவிக்கப்படவில்லை. ஒற்றையாட்சி எனும் சொல்லும் பாவிக்கப்படவில்லை. இவ்வாறே உலகில் பல நாடுகளில் ஒற்றையாட்சி எனும் சொல்லும் சமஷ்டி எனும் சொல்லும் அரசமைப்பில் இல்லை. ஆனால்,அங்கெல்லாம் அதிகாரப் பரவாக்கல் காணப்படுகின்றது என்றார்.

0 கருத்துரைகள்:

Post a Comment