Header Ads



நான் இருக்கும்வரை பௌத்தத்தின் முன்னுரிமையை, விட்டுக்கொடுக்க மாட்டேன் - ரணில்

-விடிவெள்ளி-

நான் வழிநடத்தல் குழுவின் தலைவராக இருக்கும் வரைக்கும் பெளத்த மதத்திற்கான முன்னுரிமையை இல்லாமல் செய்வதற்கு இடமளிக்கமாட்டேன். வழிநடத்தல் குழுவின் அறிக்கையை தயாரிப்பதற்கு தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.  இதுவரை எந்தவொரு அறிக்கையும் தயாரிக்கப்படவுமில்லை. வெளியிடவுமில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில்  திட்டவட்டமாக  தெரிவித்தார். 

உப குழுவின் அறிக்கைக்கு மாறாக வேறு ஏதாவது அறிக்கை வெளியிடப்பட்டிருந்தால் அந்த ஆவணத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு தினேஷ் குணவர்தன எம்.பி.யிடம் கோரினார்.பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் திருத்த சட்டமூலம் மற்றும் வணிக கப்பற்றொழில் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாத்தின் போது,

 வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தனக்கு கிடைக்கபெற்றுள்ளதாகவும் இதில் நாட்டை பிளவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையையா அரசாங்கம் வெளியிட திட்டமிட்டுள்ளது? என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு எம்.பி. தினேஷ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,நான் வழிநடத்தல் குழுவின் தலைவராக இருக்கும் வரைக்கும் பெளத்த மதத்திற்கான முன்னுரிமையை இல்லாமல் செய்வதற்கு இடமளிக்கமாட்டேன். வழிநடத்தல் குழுவினால் இதுவரை எந்தவொரு அறிக்கையும் தயாரிக்கப்படவில்லை. அதனை விடுத்து வழிநடத்தல் குழுவினால் ஒரு சரத்து கூட தயாரிக்கப்படவில்லை.

 வழிநடத்தல் குழுவின் அறிக்கை தயாரிக்கப்பட்டால் நாம் முதலில் அரசியலமைப்பு நிர்ணய சபைக்கே சமர்ப்பிப்போம். தற்போதைய  அரசியலமைப்பினுள் உள்ளடக்கப்பட்டவைகளுக்கு மாற்றமான யோசனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இருந்த போதிலும் அதனை நாம் அறிக்கையில் உள்ளடக்கவில்லை.

பெளத்த முன்னுரிமையை நீக்க மாட்டோம் என மகாநாயக்க பீடங்களுக்கு நான் வாக்குறுதி அளித்துள்ளேன். பெளத்த மதம் தொடர்பான முன்னுரிமை விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் சுதந்திரக் கட்சியும் ஒரே நிலைப்பாட்டிலேயே உள்ளன. பெளத்த மதத்திற்கு எதிரான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நானும் இந்த விடயத்தில் பூரண இணக்கத்திற்கு வந்துள்ளோம். தற்போதைக்கு வழிநடத்தல் குழுவின் அறிக்கையை தயாரிப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். எனினும் அதற்கு மாறாக இன்னும் அறிக்கை வெளியிடவில்லை.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை பிரகாரம் வழிநடத்தல் குழுவின் அறிக்கை மாத்திரமே வழங்க முடியும். நாங்கள் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை. வழிநடத்தல் குழுவினால் உப குழுவின் அறிக்கை மாத்திரமே வெளியிடப்பட்டன. அதனை தவிர இடைக்கால அறிக்கை வெளியிடப்படவில்லை.

 பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடந்த அரசியலமைப்பு தொடர்பான கருத்தரங்கில் நானும் இருந்தேன். அதில் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை வெளியிடப்படவில்லை. உப குழுவின் அறிக்கை மாத்திரமே வெளியிடப்பட்டது. அதற்கு மாறாக வேறு ஏதாவது அறிக்கை வெளியிடப்பட்டிருந்தால் அந்த ஆவணத்தை என்னிடம் கையளியுங்கள் என்றார்.

No comments

Powered by Blogger.