Header Ads



இலங்கையில், இப்ராஹீம்கள் இல்லையா..?


சென்னை, கோவளம் பகுதிக்கு சமூக சிந்தை கொண்ட இந்திய நண்பர்கள் சிலர் என்னை சடுதியாக அழைத்துச் சென்றனர். ஒரு கடையில் பிஸ்கட் பக்கட்களை ஓடர் செய்தபின், இன்னொரு கடையில் 100 பேருக்குத் தேவையான மாப்பண்ட உணவுகளையும் வாங்கினர். சற்று முன்னதாக இருந்த மாடிவீடு போன்ற தோற்றமுடைய பழைய கட்டடம் ஒன்றுக்குள் திரும்பியது எமது நடை. கடதாசி, இதர கழிவு பொருட்களை சேகரிக்கும் ரிக்‌ஷாக்கள், கட்டட முன் பாதையை வரிசைகட்டி உறங்கிக் கிடந்தன.

உள்ளிருந்து படையெடுத்த சில முகங்கள் ரோஹிங்கிய அகதிகள் என்பதறிந்து வியந்தேன். இந்தியாவிற்குள்ளேயே கேரளா, டெல்லி என முகாம் பிரச்சினைகளை எதிர்கொண்டு, இறுதியில் தமிழ்நாட்டின், கோவலம் பகுதியில் அனர்த்த வதிவிட முகாம் ஒன்றை நெடிய போராட்டத்தின்பின் வாழ்விடமாகப் பெற்று, 3 வருட சென்னை வாழ்க்கையின் பயனாக அன்றாட மீள்சுழற்சிக் குப்பைகளை சேகரித்து, அதன் வருவாயில் பாடசாலைக் கல்வி வரை குழந்தைப் பேறுகளுடன் வாழ்கின்றனர் அந்த மக்கள்.

பாதுகாப்பான தற்காலிக இருப்பிடத்தையும், அத்தியாவசிய உதவிகள் அவர்களை சென்றடைய தனிப்பட்ட முறையிலும், சேவை அமைப்புகளின் தொடர்பையும் ஏற்படுத்திக்கொடுத்த 35 வயதைத் தாண்டிய தமிழகத்தைச் சேர்ந்த சகோதரர் இப்ராஹீம் அவர்களின் அர்ப்பணிப்பு இந்த இரண்டு தினங்களில் என்னை புரட்டிப்போட்டது. அவர்களுக்கான நிலம் ஒன்றை வாங்கி தனித்தனி வீடுகளை அமைத்துக்கொடுக்கும் முயற்சிகளில் கடந்த 3 வருடங்களாக இவர் ஈடுபட்டு வருகின்றார்.

ஒரு சாமான்ய முயற்சியாண்மையாளரான இவரின் கரிசணை சமூக தலைமைகளுக்கு சிறந்த முன்னுதாரணமாகவே கருதுகின்றேன். இலங்கையில் அண்மையில் கரையொதுங்கிய படகில்வந்த ஒரு ரோஹிங்கிய பெண்ணை கைதியாக இருந்த நிலையில் பலாத்காரம் செய்த காவல்துறை அதிகாரி தொடர்பில் செய்தி பார்த்து, அறிந்தும், துயருடன் துணிந்து செயல்படும் பொறுப்புவாய்ந்த தலைமைகளை நாம் காணவில்லை. சில வழக்கறிஞர்கள் விரைந்து செயல்பட்டமை மகிழ்ச்சி தந்தாலும், இப்ராஹீம் போன்ற செயற்பாட்டாளர்கள் தலைமை பீடங்களுக்கு தேவை என்பதை இங்கு நடந்த காட்சிகள் உணர்த்தின.

கோவலம் ரோஹிங்கிய குடித் தொகுதியில் ஒரு குழந்தையின் தலையில் வீக்கம் கலந்த காயம் ஒன்றை கண்ட அன்பர் இப்ராஹீம், அதுவரை எமக்கு மொழிபெயர்த்து உதவிய தமிழ் பேசும் ரோஹிங்ய சிறுமியிடம் காரணத்தை வினவ, நுளம்புக் கடி என்பதை அறிந்து 50 குடும்பங்களுக்குமான நுளம்பு வலைகளை உடனே கடைத் தெருவுக்குச் சென்று வாங்கிக் கொடுத்தார்.

எல்லாம் சில, பல நிமிடங்களில் நடந்தேரின. தடுப்புக் காவலில் இலங்கையில் தற்போதிருக்கும் ரோஹிங்கிய அகதிகளுக்கு சில அத்தியாவசிய தேவைகள் இருப்பதாகவும், உதவ முன்வருவோர்க்கு நேரடியாக செல்ல ஏற்பாடு இருப்பதை தான் அறிந்ததாகவும், ஒரு எழுத்தாளர் அண்மையில் என்னிடம் சொன்னார். உலக இலாபங்களை எதிர்பார்க்காத எத்தனையோ இப்ராஹீம்கள் இலங்கையிலும் இல்லாமலில்லை. அவர்களை பயன்படுத்த நாம் தான் தவறிவிட்டோமா? தமிழ்நாட்டின் ரோஹிங்கிய சிட்டுக்களுக்கு ஸ்வீட்ஸ் கொடுத்துவிட்டு வெளியேறினோம்.

- அனஸ் அப்பாஸ்

- 17/07/2017


No comments

Powered by Blogger.