Header Ads



பெண் பிள்ளையை கடத்தி, பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியவருக்கு ஆயுள் தண்டனை

புலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளில் இணைப்பதற்காகப் பெண் ஒருவரைக் கடத்திச் சென்றார் என்ற குற்றத்திற்காக முன்னாள் போராளி ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுட்கால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் இந்தத் தீர்ப்பு இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளன.

ராணுவத்தின் புனர்வாழ்வு பயிற்சி பெற்றதன் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய முன்னாள் போராளி ஒருவருக்கு எதிராக கிளிநொச்சி காவல் நிலையத்தில் பயங்கரவாதச் செயற்பாட்டுக்காக ஆட்கடத்தலில் ஈடுபட்டிருந்தார் என முறையிடப்பட்டிருந்தது.

விடுதலைப்புலிகளின் படையணித் தேவைக்காக இளைஞர்களும் யுவதிகளும் பிடித்துச் செல்லப்பட்ட 2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விஜயபாலன் மஞ்சுளா என்ற இளம் பெண்ணான தனது மகளை பயங்கரவாதச் செயற்பாடுகளுக்காகக் கடத்திச் சென்றார் என்று கணைஸ் கண்ணதாஸ் என்பவருக்கு எதிராக நாகரத்தினம் விஜயபாலன் 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9-ஆம் தேதி இந்த முறைப்பாட்டைச் செய்திருந்தார்.

இதனையடுத்து முன்னாள் போராளியாக இருந்து ராணுவத்தின் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்த கணைஸ் கண்ணதாஸ் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

விசாணைக்கு உட்படுத்தப்பட்ட அவர் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்காக விடுதலைப்புலிகளின் அமைப்புக்காக ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என்ற குற்றம் சுமத்தி 2016-ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி அவருக்கு எதிராகக் குற்றம்சாட்டி, வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் சாட்சியமளித்த கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட பெண்ணின் தந்தை விஜயாபலனும், தாயார் சாந்திமலர் ஆகியோர் சாட்சியமளித்தனர்.

விடுதலைப்புலிகளின் செயற்பாட்டிற்காகத் தமது மகள் மஞ்சுளாவை தங்களுடைய வீட்டில் இருந்து கண்ணதாஸ் இழுத்துச் சென்றதாக அவர்கள் சாட்சியத்தில் தெரிவித்தனர்.

அத்துடன் ராணுவத்தினருடனான விடுதலைப்புலிகளின் சண்டையில் தமது மகள் கொல்லப்பட்டுவிட்டார் என்பதையும் அந்த பெற்றார் தெரிவித்தனர்.

தொடர்ந்து பயங்கரவாதப் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களின் சாட்சியத்தையடுத்து, எதிரி கண்ணதாஸ் சாட்சியமளித்தார்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்ததை ஒப்புக்கொண்ட அவர், இராணுவத்;தினரால் வழங்கப்பட்ட புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் தனது குடும்பத்துடன்தான் இணைக்கப்பட்டதன் பின்னர், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியதாகவும் அவர் தனது சாட்சியத்தில் கூறினார்.

விசாரணைகளின் முடிவில் எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.

ராணுவத்தின் புனர்வாழ்வுப் பயிற்சி பெற்று எதிரி விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், பயங்கரவாதச் செயற்பாட்டுக்காக ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டிருப்பதனால், சட்டத்தின் அடிப்படையில் அவருக்குத் தண்டனை வழங்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் ஆயுட்காலச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

No comments

Powered by Blogger.