Header Ads



தனித்து ஆட்சியமைக்க ஐ.தே.க. முயற்சி...?

எதிர்வரும் ஜனவரி மாதமளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சி வரிசையில் அமர போவதாக பகிரங்கமாக கூறியதை அடுத்தே, ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்க கூடிய சந்தர்ப்பம் உள்ளது.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிச் சென்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அணியினரை மீண்டும் கட்சியில் இணைந்து வலுவான அரசாங்கம் ஒன்றை அமைப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான நோக்கமாகும்.

நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 95 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஈபிடிபியின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சபாநாயகருடன் சேர்த்து நாடாளுமன்றத்தில் 225 பேர் அங்கம் வகிக்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 95 உறுப்பினர்களில் 51 உறுப்பினர்கள் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருவதால், ஐக்கிய தேசியக் கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியும் என அந்த கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இவர்களில் சிலர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கட்சியில் மீண்டும் இணைவது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும் என கூறியுள்ளதாகவும் மேலும் சிலர் தமது முடிவை பின்னர் தெரியப்படுத்துவதாக தெரிவித்துள்ளதாக பேசப்படுகிறது.

இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் தனித்து ஆட்சியமைக்க தீர்மானித்துள்ளதுடன் அதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கட்சியின் தகவல்கள் கூறுகின்றனர்.

எது எப்படி இருந்த போதிலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்த கூட்டு அரசாங்கம் 2020 ஆம் ஆண்டு வரை தொடரும் என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கூறியிருந்தார்.

அதேவேளை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டை கடந்த 2025 ஆம் ஆண்டு வரை இரண்டு கட்சிகளும் இணைந்து ஆட்சி நடத்தும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.