Header Ads



என் உயிர் இருக்கும்வரை உதவுவேன் - இளஞ்செழியன்


துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த என்னுடைய மெய்ப்பாதுகாவலர் பொலிஸ் சார்ஜன்ட் ஹேமசந்திரவின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் , அவர்களது எதிர்கால நலன்  குறித்த விடயங்களில்  என் உயிர் இருக்கும் வரை என்னாலான அனைத்து உதவிகளையும்  வழங்குவேன் என நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். 

இது பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள். ஆனால், இன்று முதல் மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் என  நான்கு பிள்ளைகள் எனக்கு. ஹேமச்சந்திர 15 ஆண்டுகள் வவுனியாவில் மிக கொடூரமான யுத்தகாலத்தில் என்னுடைய உயிரை காப்பாற்றியவர். தொடர்ச்சியாக என்னுடனேயே இருந்தார்.   நான் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்று வந்தபோது என்னுடனேயே வரவேண்டும் என்று வந்தார். என்னுயிரை காப்பாற்றி தன்னுயிரை மாய்த்துக்கொண்டவர். 

அவரது இரண்டு பிள்ளைகளும் தந்தையின் அன்புக்கும், பாசத்திற்கும் உரியவர்கள். தந்தையில்லாத மனநிலை எப்படி இருக்கும் என்று நான் அறிவேன். அவரது மகளை   நான் மூன்று வயதில் கண்டேன் அதன் பின் ஐந்து வயதில் கண்டேன். ஆனால், இப்போது சாதாரண தரம் படிக்கின்றாள்.  இன்று முதல் அவர்களுடைய கல்வி அவர்களது எதிர்கால வாழ்க்கையை நான்  கட்டாயம் பார்ப்பேன். இதனை அவர்களது முன்பே சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். 

என்னால் அந்த குழந்தைகளுக்கு ஆறுதல் கூற முடியும். தந்தையின் அரவணைப்பை இழந்திருப்பது எப்படி என்பதையும் என்னால் உணரமுடியும். அவர்களை கரைசேர்ப்பதற்கு உயிருள்ளவரை  உதவி செய்வேன். 

இலங்கை வரலாற்றில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு சுடரேற்றி யாழில், யாழ். பல்கலைக் கழகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்ட நிகழ்வுகள்  நடந்தேறியுள்ளன.   யாழ். கிளிநொச்சி, அம்பாறை, முல்லைத்தீவு, வவுனியா திருமலை, மட்டு. ஆகிய   மாவட்டங்களில்  அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.  சட்டத்தரணிகளும் தமது எதிர்ப்பை வெளிகாட்டியுள்ளனர் என்றும் கூறினார். 

No comments

Powered by Blogger.