Header Ads



'உங்களை சாபமிடுவார்கள், என மஹிந்தவிடம் கூறினேன்'

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (19) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளர்களில் ஒருவருமான ராஜித சேனாரத்ன பதிலளித்தார்.

கேள்வி: 2008ஆம் ஆண்டு இளைஞர்கள், காணாமல் போன விடயம் தொடர்பில் இராணுவ வீரர்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. அவ்வாறு குற்றம் சுமத்த முடியுமா? 

பதில்: சம்பவம் தொடர்பில், விசாரணைகள் நடத்தப்பட்டன. தமிழ் இளைஞன் ஒருவர், மேற்படிப்புக்காக அவுஸ்திரேலியாவுக்கு, செல்லவிருந்த முதல்நாள், நண்பர்களுடன் விருந்துபசாரத்தில், கலந்துகொண்டார். அதில், கலந்துகொண்டவர்களையே கடத்தி, கப்பம் கோரப்பட்டுள்ளது.  

கப்பம் கோரப்பட்ட தொகை கிடைக்கத் தாமதமாகியதால் தான் அவர்கள், கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பிலான அறிக்கை விவரங்களை நான் நன்கறிவேன். அந்த இளைஞர்களை ஒவ்வொரு இடங்களில் வைத்திருந்து திருகோணமலையில் பதுங்கு குழியில் வைத்திருந்தார்கள். அங்கு இவர்களுடைய துன்பத்தைக் கவனித்த கடற்படையினர் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ள வாய்ப்பு அளித்துள்ளனர். அந்தத் தொலைபேசி ஊடாக அவர்களுடைய படங்களை பெற்றோருக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்தப் படங்கள் அனைத்தும் இருக்கின்றன.  

இந்த நான்கு இளைஞர்களும் கொல்லப்பட்டபோது ஒரு தந்தையாக, நான் கவலையடைந்தேன். இது தொடர்பில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நான் எடுத்துக் கூறினேன். புலிகள் என்ற பெயரில் தமிழ் இளைஞர்களை இவ்வாறு கொலை செய்ய இடமளிக்க வேண்டாம் எனக் எடுத்தும் கூறினேன்.  

அப்போது, காணாமல்போனோருக்கான குழுவின் தலைவராக என்னை நியமித்தார். நானும் வாசுதேவ நாணயக்கார, டளஸ் அழகப்பெரும, பாயிஸ், இராதாகிருஷ்ணன் ஆகியோர் பணியாற்றினோம். காணாமல் போனோரின் உறவினர்கள் 50 பேரை, அலரி மாளிகைக்கு நான் அழைத்து வந்தேன்.  

இங்கே வருகைதரும் தாய்மார் தமது துயரங்களைச் சொல்லுவார்கள், உங்களை குறை சொல்லுவார்கள், சாபமிடுவார்கள், அமைதியாக இருங்கள் என்று மஹிந்த ராஜபக்ஷவிடம் கூறினேன். பிள்ளைகள், கணவன்மார், சகோதரர்கள், தந்தையர்களை இழந்தோரின் வேதனையை என்னால் உணர முடிந்தது என்றார்.  

1 comment:

  1. நம்ம்பபிட்டோடோம்ம்!!!!!...????

    ReplyDelete

Powered by Blogger.