July 26, 2017

"மக்களின் நலன்களுக்காக அரசாங்கம், நல்லமுறையில் கெட்டதை அடக்கும்"

அரசாங்கம் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை நிராகரிக்காது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று -26- நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மக்களின் நலன்களுக்காக நல்ல முறையில் கெட்டதை அடக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். பெற்றோலிய விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டமை குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கி உரையாற்றும் போது பிரதமர் இதனை கூறியுள்ளார்.

பெற்றோலிய விநியோகம் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டது.  இது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் கொள்கையை சபைக்கு தெளிவுபடுத்த வேண்டும என நாம் எண்ணினோம். நாடாளுமன்ற சம்பிரதாயம் மற்றும் ஜனநாயக மதிப்புகளை பாதுகாக்க அரசாங்கம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது என்பதை உணர்த்தவே தெளிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டது.

கடந்த காலத்தில் இப்படியான முறை பின்பற்றப்படவில்லை. ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றம் வெறும் முத்திரையாக மாத்திரமே இருந்தது. ஜனவரி 8ம் திகதி புரட்சியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பெரும்பான்மையான மக்களால் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து மீண்டும் ஜனநாயக மதிப்புகளை நாட்டிற்குள் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

நாடாளுமன்றம் அதிகாரமிக்கதாக மாற்றப்பட்டது. எந்த தொழிற்சங்கமாக இருந்தாலும் தமது தொழில் நலன், நலன்புரி தேவைகளுக்கான முன்வைக்கும் கோரிக்கைகள், போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பில் எமக்கு எந்த பிரச்சினைகளும் இல்லை.

எனினும் எந்த தரப்பாவது அடிப்படையின்றி, எவ்விதமான ஏற்றுக்கொள்ள முடிந்த காரணங்கள் இன்றி நாட்டின் சாதாரண இயல்பு வாழ்வை சீர்குலைத்து, நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்குள் தள்ள நாங்கள் வழங்கிய சுதந்திரத்தை பயன்படுத்துவார்களாயின் அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

எமது அரசாங்கம் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதை நிராகரிக்காது. பெற்றோலிய தொழிற்சங்கங்களுடன் எமது அமைச்சர்கள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 24ம் திகதி மற்றும் ஜூவை 13ம் திகதி அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.

முதலில் அம்பாந்தோட்டை எண்ணெய் தாங்கிகள் குறித்தும் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் பற்றியும், சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இரண்டாம் மற்றும் மூன்றாம் விடயங்கள் தொடர்பில் நாங்கள் இணக்கப்பாட்டுக்கு வந்தோம். 

பெற்றோலிய தொழிற்சங்கங்களின் கோரிக்கையை நாங்கள் துறைமுகங்கள் அமைச்சிடம் முன்வைத்துள்ளோம். அரசாங்கத்தின் நடவடிக்கைகளால், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு பாதிப்போ, சேதமோ ஏற்படாது என்று நாங்கள் தொழிற்சங்கங்களிடம் உறுதியளித்தோம்.  இப்படியான பின்னணியில் பெற்றோலிய தொழிற்சங்கங்கள் திடீரென பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டது துரதிஷ்டவசமான நிலைமை.

நாடு முழுவதும் தற்போது டெங்கு நோய் பரவி வருகிறது. டெங்கு நோயை கட்டுப்படுத்தி, நோயாளர்களை குணப்படுத்த, கட்சி, இன, மத பேதங்களை ஒதுக்கி விட்டு நாட்டில் பெரும்பாலான மக்கள் பாடுபட்டு வரும் சந்தர்ப்பத்தில், எது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை எனக் கூறி பெற்றோலிய தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளன.

பெற்றோலிய விநியோகம் தடைப்பட்டால் நாட்டின் அன்றாட நடவடிக்கை பாதிக்கப்படும். வைத்தியசாலை ஊழியர்கள் பயணங்கள், அம்புலன்ஸ் வண்டிகளின் சேவைகள், டீசல் மின் உற்பத்தி, பொது போக்குவரத்து போன்ற பொது சேவைகளுக்கு நேரடியான பாதிப்புகள் ஏற்படும். விமான பயணங்கள் தடைப்பட்டு, துறைமுக பணிகள் பாதிக்கப்பட்டால், நாட்டின் பொருளாதாரத்தில் அது பாதிப்பை ஏற்படுத்தும். 

இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். ஆரம்பமாக உள்ள பாடசாலை பரீட்சைகளும் பாதிப்படையும். இதன் காரணமாவே பெற்றோலிய விநியோகத்தை அரசாங்கம் அத்தியாவசிய சேவையாக அறிவித்துள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

1 கருத்துரைகள்:

Post a Comment