Header Ads



முஸ்லிம் கூட்டமைப்பு, சாதிக்கப்போவது என்ன..?

-Dr அப்துல் ரஷாக் AC-

இலங்கையிலுள்ள இன்றைய அசாதாரண சூழ்நிலை முஸ்லிம் மக்களை ஒருமித்த குரலில் பேசவைத்துள்ளது. பொதுவான பிரச்சினைகளின் பால் மக்கள் குரல் கொடுக்க அரசியல் தலைமைகளும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பத்திற்கு விரும்பியோ விரும்பாமலோ தள்ளப்பட்டுள்ளார்கள். 
இவ்வாறான கூட்டமைப்பொன்று உருவாக்கப்படுமிடத்து அனைத்து முஸ்லிம் கட்சித்தலைமைகள், பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் எல்லோருமாக சேர்ந்து முஸ்லிம்களின் அடையாளப்படுத்தப்பட்ட மற்றும் அடையாளப்படுத்தப்படாத, தீர்க்கப்பட்ட மற்றும் தீர்வு காணவேண்டிய பிரச்சினைகளை ஒருமித்த குரலாக சொல்லும் செய்திகள் அதிகாரத்திலுள்ளவர்களை உன்னிப்பாக கேட்கவைத்து செயலாற்ற முன்தள்ளுவதுடன் சர்வதேசத்திற்கும் ஒரே குரலில் நாம் முனவைக்கப்படுவோம்!

யார் அங்கம் வகிப்பவர்கள்:

பிரதானமாக முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள், பிரதிநிதிகள், ஏனைய பெரும்பான்மை கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் உறுப்பினர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள்!
இவர்களோடு உறுதுணையாக வாக்காளர்கள் !

அங்கத்தவர்களின் கடந்தகாலம்:

முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகள் ஆரம்பகாலத்தில் ஏதோவோர் பெரும்பான்மை கட்சியின் தொண்டனாக, பிரதிநிதியாக செயற்பட்டு பின்னைய காலங்களில் முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்துடன் வடகிழக்கில் முஸ்லிம்களின் தனித்துவம் பேணுதல் என்ற அடிப்படையில் ஒன்றுபட்டு உரிமைகள் மற்றும் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளதை எல்லோரும் ஓரளவிற்கேனும் ஏற்றுக்கொண்டுதானிருக்கிறார்கள்.

ஸ்தாபக தலைவர் அஷ்ரப் அவர்களின் மறைவிற்குப்பின் ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட விரும்பத்தகாத கசப்பான அனுபவங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தலைமைகளை உருவாக்கின அல்லது உருவாக்கிக்கொண்டார்கள்.
விளைவு 16 வருடங்களுக்கு மேல் முஸ்லிம் சமூகத்தில் இழப்பு மட்டுமே உறுதியாக்கப்பட்ட நிலையில் இன்றும் காலத்தை கடத்துகிறோம்.

ஸ்தாபக தலைவரின் மறைவிற்குப்பின் நாம் சொல்லும் தலைவர்கள் பெற்றுக்கொடுத்ததென்ன?
தலைவர்களை குற்றம் சொல்வதா? அல்லது நீயே எங்கள் தலைவன் என்று ஒவ்வொரு தலைமைக்குப்பின்னாலும் சென்ற போராளிகளை குற்றம் சொல்வதா?
சிந்திக்க வேண்டிய சமூகம் கட்சிப்போதையில் உறங்கிக்கொண்டிருக்கும் நிலையில் எதுவெல்லாம் சாத்தியமாகும் சந்தர்ப்பம் இருந்தாலும், சாத்தியமற்றதாகவே சென்றுவிடும்.


எதிர்நோக்கும் சவால்கள்: 

சமூகத்தில் காணப்படக்கூடிய முஸ்லிம் தலைமைகள் தங்கள் அபிலாசைகளை விட்டெறிந்து சமூகத்திற்காக ஏதேனும் ஒன்றை செய்வதற்காக ஒரே புள்ளியல் ஒன்றிணைவார்களா?
எதற்காக நாங்கள் ஒன்றிணைகிறோம் என்ற நோக்கம் தெளிவுபடுத்தப்பட்ட நிலையில் எதுவும் சாத்தியமே!
தற்போதைய நாட்டின் நிலைமை இவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட வழிவிடுமா அல்லது அதிகாரத்திலுள்ளவர்கள் விட்டுவிடுவார்களா?

வென்று வரலாமா?

முஸ்லிம்களின் பிரச்சினைகளை அடிப்படையில் வடகிழக்கில் வாழும் மற்றும் வெளியில் வாழும் மக்களின் பிரச்சினைகள் என்ற பிரிவுக்குள் வகைப்படுத்தப்படுதல் சாலச்சிறந்ததாக கருதலாம்.
ஏனெனில் வடகிழக்கு மக்களின் பெரும்பான்மையான பிரச்சினைகள் அவற்றுக்கு வெளியில் வாழும் முஸ்லிம்களுக்கு இருந்ததில்லை.
காணி, பொருளாதாரம், கல்வி, இருப்பு, போக்குவரத்து, தொழில்துறவுகள், சமூக உறவுகள் இவ்வாறு ஒவ்வொன்றும் வேறுபட்ட பரினாமங்களில் இரு பிரதேசங்களுக்கும் வேறுபட்டு நிற்கின்றன.

எனவே, வடகிழக்கிற்கு வெளியில் வாழும் முஸ்லிம் மக்களின் உரிமைகள் பிரச்சினைகள் அடையாளப்படுத்தப்பட்டு பேசப்படும அதேவேளை வடகிழக்கு வாழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளும் பிரச்சினைகளும் தனியாகப்பேசப்பட வேண்டும்.

ஒட்டுமொத்த நாட்டு முஸ்லிம் மக்களின் குரல்கள் ஒன்றாக ஒலிக்கப்படும் போது ஏதாவதொன்றை சாதித்துவிடலாம் என்ற நம்பிக்கை துளிர்விட்டுக்கொண்டுதான் இருக்கிறது. தலைமகள், வாக்காளர்கள் சிந்தித்து ஒன்றுபடவேண்டிய தருணம், விடுபடுமேயானால் விளைவுகளை ஒவ்வொருவரும் சுமக்க வேண்டியிருக்கும் பலதலைமுறைகளுக்கு!

No comments

Powered by Blogger.