Header Ads



சதொசவுக்கு கொக்கெயின், கொண்டுவரப்பட்டது எவ்வாறு..?

இரத்மலான சதொச களஞ்சியசாலைக்கு ஒருகொடவத்தையிலிருந்து ரஞ்சிதா பல்சஸ் நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்டிருந்த சீனியடங்கிய  கொள்கலனை,  இரத்மலான சதொச களஞ்சியசாலைக்கு கொண்டு வந்த பின்னர்   களஞ்சியசாலையில் வைத்து அதனை  இறக்குவதற்கு முன்னரே வழமையான நடைமுறையின் பிரகாரம் ஊழியர்கள் கொள்கலனைத் திறந்து பார்த்த போது வித்தியாசமான பொதிகள் இருந்ததைக் கண்டனர். அதன் பின்னர் பொலிசாருக்கு சதொச நிறுவனம் இது தொடர்பில் அறிவித்ததாக  நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்தார்.

இரத்மலான சதொச களஞ்சியசாலையில் 100 கிலோ கிராமிற்கு மேற்பட்ட கொக்கெயினை பொலிசார் கண்டு பிடித்தமை தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாட்டை கொழும்பு சதொச தலைமையகத்தில் அவர் நடாத்திய போதே,    இவ்வாறு தெரிவித்தார்.

   தமது நிறுவன ஊழியர்களால் சீனிக் கொள்கலன் திறக்கப்பட்ட போது, வித்தியாசமான பொதிகள் இருந்ததனால் அதனை மீண்டும் மூடி பொலிசாரிடம் ஒப்படைத்த பின்னரேயே, பொலிசார் சீனியுடன் இருந்த இந்தப் பொதிகள் கொக்கெயின் என கண்டுபிடித்தனர். அநாமதேய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிசார்  இதனைக் கண்டுபிடிக்கவில்லை எனவும் தெரிவித்த அவர் இந்த விடயம், தெரியவந்த போது தாங்களே பொலிசாருக்கு தெரிவித்தார்.

சதொச நிறுவனத் தலைவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

தமது நிறுவனம் சதொசவின் விற்பனைக்கென நேரடியாக எந்தவொரு நாட்டிலிருந்தும் சீனியை இறக்குமதி செய்வதில்லை வாரா வாரம் விலைமனுக்கோரலின்  அடிப்படையிலேயே தமது நிறுவனத்துக்குத் தேவையான சீனியை கொள்வனவு செய்கின்றது. இந்த வகையில் இந்த வாரம் 'ரஞ்சிதா பல்ஸ் நிறுவனமே' டெண்டரில் தெரிவாகியிருந்ததென்றதெனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இரத்மலானை களஞ்சியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட கொக்கெயின் தொடர்பில் சேறு பூசும் நடவடிக்கையில் சில ஊடகங்கள் ஈடுபட்டமை குறித்து வருத்தம் தெரிவித்த அவர், இது தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பங்கேற்ற இலங்கை சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் பிரதிநிதியொருவர் கருத்துத் தெரிவிக்கும் போது இரத்மலான களஞ்சியசாலைக்கு கொண்டுவரப்பட்டிருந்த சீனிக்கொள்கலன் பிரேசில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. பிரேசில் நாட்டின் சீனி    ஏற்றுமதியுடன்  சர்வதேச போதை மாபியாக் குழுக்களின் ஈடுபாடு நீண்ட காலமாக இருந்து வருவதுடன் இது தொடர்பில் கடந்த காலங்களிலும் பிரேசில் நாட்டிலிந்து சீனிக்கொள்கலன்களில் கொக்கெயின் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் பிரேசிலிருந்து சீனி இறக்குமதி செய்வதில்லையென்று தமது முடிவு செய்திருந்தது. 

பிரேசிலிலிருந்து தற்போது சமரக்கோன் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள சீனியின் ஒரு தொகுதியையே  ரஞ்சிதா பல்ஸ் நிறுவனம் உள்நாட்டில் கொள்வனவு செய்துள்ளது. அந்த சீனியே சதொச களஞ்சியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. என்றும் சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் பிரதிநிதி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.