Header Ads



இளஞ்செழியனுக்கு அதிரடிப்படை பாதுகாப்பு, வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய விஷேட அதிரடிப் படையினரின் அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

யாழ். பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கும் நீதிபதி மா. இளஞ்செழியனுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போது, நீதிபதி இளஞ்செழினின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன் பின்னர், யாழ். பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை தொடர்பு கொண்டு, நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

இதனையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய நீதிபதிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்குமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, யாழ். பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி இளஞ்செழியனுக்கு சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான 8 பேர் அடங்கிய பொலிஸார் பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

கொழும்பு விசேட அதிரடிப்படையினரின் தளபதி, வட பிராந்தியத்திற்கான விஷேட அதிரடிப் படையின் தளபதிக்கு தொடர்பு கொண்டு, நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குமாறு கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்தே, வட பிராந்தியத்திற்கான விசேட அதிரடிப் படையின் தளபதி நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு தொடர்பில் நீதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதனையடுத்து, நீதிபதிக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு இடைநிறுத்தப்பட்டு, 8 விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அதிரடிப் படையினரின் வாகனத் தொடரணியும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீதிபதி இளஞ்செழியனின் வீட்டிற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்கும் பொலிஸார் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், யாழ். நல்லூர் பகுதியில் நீதிபதி இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் போது உயிரிழந்த நீதிபதியின் மெய்ப்பாதுகாவலரின் இறுதிக் கிரியை நாளை நடைபெறவுள்ளது.

நாளை சிலாபம் தலவத்தையில் நடைபெறவுள்ள இறுதிக் கிரியையில் நீதிபதி இளஞ்செழியன் கலந்துகொள்வதற்காக விஷேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்படவுள்ள அதேவேளை, அதிரடிப் படையினரின் வாகனத் தொடரணியும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.